திருஉத்தரகோசமங்கை அருகே பரிதாபம்: கபடி விளையாடிய போது மயங்கி விழுந்து வாலிபர் சாவு
திருஉத்தரகோசமங்கை அருகே வெண்குளம் கிராமத்தில் கபடி விளையாடியபோது கடலூர் மாவட்டத்தை சேர்ந்த வாலிபர் மயங்கி விழுந்து பரிதாபமாக இறந்துபோனார்.
ராமநாதபுரம்,
ராமநாதபுரம் மாவட்டம் திருஉத்திரகோசமங்கை அருகே உள்ளது வெண்குளம் கிராமம். இங்கு ஆண்டுதோறும் கபடி போட்டி நடத்தப்படுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டுக்கான கபடி போட்டி நேற்று முன்தினம் தொடங்கி நடைபெற்று வந்தது. இப்போட்டியில் ராமநாதபுரம் மட்டுமின்றி வெளி மாவட்டங்களை சேர்ந்த 30–க்கும் மேற்பட்ட அணிகள் கலந்துகொண்டன. இந்தநிலையில் நேற்று பிற்பகலில் வெண்குளம் அணியும், ராமநாதபுரம் பெரியார் நகர் அணியும் கபடி போட்டியில் கலந்துகொண்டு விளையாடின.
இதில் வெண்குளம் அணிக்காக நட்பின் அடிப்படையில் கடலூர் மாவட்டம் விருத்தாசலம் தாலுகா காட்டு கூடலூர் பகுதியை சேர்ந்த அருணாசலம் என்பவருடைய மகன் சூர்யா(வயது 21) என்பவர் விளையாடி உள்ளார்.
கபடி விளையாடி கொண்டிருந்தபோது சூர்யா திடீரென்று மயக்கமடைந்து விழுந்தார். இதனால் உடன் விளையாடிக சக வீரர்கள் பார்த்தபோது அவர் உடல் அசைவின்றி கிடந்தார். இதனால் அவரை விளையாட்டு குழுவினர் மீட்டு சிகிச்சைக்காக ராமநாதபுரம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் அவரை பரிசோதித்த டாக்டர்கள் வாலிபர் சூர்யா ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.
கபடி விளையாடி கொண்டிருந்தபோதே மயங்கி வாலிபர் உயிரிழந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. வாலிபர் சூர்யா உடற்கல்வியியல் படிப்பு முடித்துவிட்டு, தற்போது கடலூர் கல்லூரியில் மேற்படிப்பு படித்து வந்ததாக கூறப்படுகிறது.