தொழிலாளி தவறி விழுந்து பலி: ஓட்டல் வாசலில் பிணத்தை வைத்து உறவினர்கள் போராட்டம்


தொழிலாளி தவறி விழுந்து பலி: ஓட்டல் வாசலில் பிணத்தை வைத்து உறவினர்கள் போராட்டம்
x
தினத்தந்தி 23 Sept 2018 3:15 AM IST (Updated: 23 Sept 2018 12:35 AM IST)
t-max-icont-min-icon

ஓட்டல் தொழிலாளி தவறி கீழே விழுந்து பலியானார். அவரது உடலை ஓட்டல் வாசலில் வைத்து உறவினர்கள் போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.

திருவொற்றியூர்,

சென்னை ராயபுரம் கல்லறை சாலையில் உள்ள ஒரு ஓட்டலில் பெரம்பலூர் மாவட்டம் மங்கமேடு பகுதியை சேர்ந்த ஈஸ்வரன் (வயது 48) என்பவர் பல ஆண்டுகளாக சமையல் தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார். நேற்று முன்தினம் நள்ளிரவு ஓட்டலில் வேலை பார்த்துக்கொண்டு இருந்தபோது தரையில் தவறி விழுந்தார்.

இதில் அவருக்கு தலையில் அடிபட்டு பலத்த காயம் ஏற்பட்டது. அதிகமாக ரத்தம் வெளியேறி சுயநினைவை இழந்தார். உடனடியாக அருகில் இருந்தவர்கள் அவரை அரசு ஸ்டான்லி ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வந்த அவர் நேற்று சிகிச்சை பலனின்றி இறந்தார்.

இதுகுறித்து ராயபுரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்தனர். விசாரணையில், அவர் சம்பவத்தன்று மது குடித்துவிட்டு கீழே விழுந்து பலத்த காயமடைந்தது தெரியவந்தது.

பிரேத பரிசோதனை முடிந்ததும் அவரது உடலை உறவினர்கள் எடுத்து வந்து திடீரென ஓட்டல் வாசலில் வைத்தனர். இறந்தவரின் குடும்பத்திற்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என்று அவரது உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

தகவல் அறிந்த ராயபுரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜாராபர்ட் மற்றும் போலீசார் விரைந்து வந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படாததால் போலீசார் உடலை கைப்பற்றி அமரர் ஊர்தியில் ஏற்றி சொந்த ஊருக்கு அனுப்பிவைத்தனர்.

ஈஸ்வரனுக்கு சாந்தி என்ற மனைவியும், கங்கா (13), யாழினி (10) என்ற 2 மகள்களும் உள்ளனர்.

Next Story