விருதுநகர், திருத்தங்கல் நகராட்சிக்கு குடிநீர் தரும் ஆனைக்குட்டம் அணை வறண்டது


விருதுநகர், திருத்தங்கல் நகராட்சிக்கு குடிநீர் தரும் ஆனைக்குட்டம் அணை வறண்டது
x
தினத்தந்தி 23 Sept 2018 4:00 AM IST (Updated: 23 Sept 2018 12:50 AM IST)
t-max-icont-min-icon

விருதுநகர், திருத்தங்கல் நகராட்சி பகுதிகளுக்கு தண்ணீர் வினியோகிக்க பெரிதும் பயன்படும் ஆனைக்குட்டம் அணை தற்போது தண்ணீர் இன்றி வறண்டு காட்சி அளிக்கிறது. மழைக்காலத்துக்கு முன்னர் தூர்வார நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரப்பட்டுள்ளது.

சிவகாசி,

விருதுநகர் நகராட்சி மற்றும் திருத்தங்கல் நகராட்சி பகுதியில் உள்ள மக்களுக்கு தேவையான குடிநீர் ஆனைக்குட்டம் அணையில் இருந்து வினியோகம் செய்யப்பட்டு வந்தது. இந்த நிலையில் அணைக்கு போதிய தண்ணீர் வரத்து இல்லாமலும், அணையின் ‌ஷட்டர் பழுது ஏற்பட்டதால் அணையின் முழு கொள்ளளவுக்கு தண்ணீர் தேக்கி வைக்க முடியாத நிலை ஏற்பட்டு வந்தது. இதனால் இந்த பகுதியில் உள்ள பல ஏக்கர் நிலமும் விவசாயம் செய்ய இயலாத நிலையில் கேள்விகுறியாகிவிட்டது.

இந்த நிலையில் அணையின் ‌ஷட்டரை பழுது பார்க்க வேண்டும் என்று விவசாய சங்கங்கள் மாவட்ட நிர்வாகத்துக்கு கோரிக்கை வைத்தது. அணையின் போதிய தண்ணீர் இல்லாததால் விருதுநகர், திருத்தங்கல் நகராட்சியின் தண்ணீர் தேவையை பூர்த்தி செய்ய மாற்று நடவடிக்கையாக அணையின் பிற பகுதியில் கிணறு தோண்டப்பட்டு அதில் இருந்து தண்ணீர் எடுத்து வழங்கப்பட்டு வருகிறது. கடந்த சில மாதங்கள் முன்பு வரை அணையின் மையப் பகுதியில் குட்டை போல் தண்ணீர் தேங்கி இருந்த நிலையில் தற்பாது கடும் வெயில் காரணமாக அணை வறண்டு விளையாட்டு மைதானம் போல் காட்சி அளிக்கிறது.

தற்போது அணையில் ஒரு சொட்டு தண்ணீர் கூட இல்லாத நிலை இருப்பதால் இந்த நேரத்தில் அணையினை தூர்வாரும் பணியை உடனே தொடங்க வேண்டும். மேலும் அணை ‌ஷட்டர் பழுது ஏற்பட்டுள்ளதாக விவசாயிகள் கூறி வருகிறார்கள். அதையும் சரி செய்யும் நடவடிக்கையில் அதிகாரிகள் ஈடுபட வேண்டும். இன்னும் சில வாரங்களில் மழைக்காலம் தொடங்கப்படுவதால் தற்போதே தூர்வாரும் பணியையும், ‌ஷட்டர் பழுது சரி பார்ப்பு பணியையும் செய்துவிட்டால் மழைக்காலங்களில் தண்ணீர் வரத்து அதிகமாக இருக்கும் போது அதை அணையின் தேக்கி வைக்க வாய்ப்பாக அமையும்.

இந்த அணையில் தண்ணீர் தேக்கி வைக்கப்பட்டால் 2 நகராட்சிகளுக்கு குடிநீர் ஆதாரமாகவும், விவசாய பணிகளுக்கு பயன்படுத்தவும் உதவியாக இருக்கும். எனவே மாவட்ட நிர்வாகம் சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுக்கு உடனடியாக உத்தரவிட்டு தூர்வார நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.


Next Story