18 எம்.எல்.ஏ.க்கள் வழக்கில் தீர்ப்பு வந்ததும் தற்போதைய ஆட்சி முடிவுக்கு வந்துவிடும் - தங்க தமிழ்ச்செல்வன் பேச்சு


18 எம்.எல்.ஏ.க்கள் வழக்கில் தீர்ப்பு வந்ததும் தற்போதைய ஆட்சி முடிவுக்கு வந்துவிடும் - தங்க தமிழ்ச்செல்வன் பேச்சு
x
தினத்தந்தி 23 Sept 2018 4:45 AM IST (Updated: 23 Sept 2018 1:10 AM IST)
t-max-icont-min-icon

18 எம்.எல்.ஏக்கள் வழக்கில் தீர்ப்பு வந்ததும், தமிழகத்தில் நடக்கும் தற்போதைய ஆட்சி முடிவுக்கு வந்துவிடும் என்று தங்க தமிழ்ச்செல்வன் கூறினார்.

திருப்பத்தூர்,

அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் திருப்பத்தூர் அண்ணாசிலை பகுதியில் பேரறிஞர் அண்ணா பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட செயலாளர் கே.கே.உமாதேவன் தலைமை தாங்கினார். திருப்பத்தூர் ஒன்றியச் செயலாளர் முருகானந்தம் வரவேற்றார். மாவட்ட அவைத்தவைவர் சொக்கநாதன், மாவட்ட நெசவாளர் அணி செயலாளர் சோமசுந்தரம், வெங்கடேசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் கட்சியின் கொள்கை பரப்பு செயலாளர் தங்க தமிழ்ச்செல்வன் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது:–

மக்களிடத்தில் பழகிய பெருந்தன்மை கொண்ட தலைவர் என்றும், தென்னாட்டு காந்தி என்றும் அழைக்கப்பட்டவர் அண்ணா. தமிழ்நாட்டு மக்களுக்காக வாழ்ந்த ஒப்பற்ற தலைவரான அவருக்கு ஓட்டு வீடு மட்டுமே சொந்தமாக இருந்தது. ஆனால் இன்றைய முதல்–அமைச்சர், அமைச்சர்கள் கோடிக்கணக்கில் ஊழல் செய்து வருகின்றனர்.

நட்பிற்கு இலக்கணமாக திகழுவது அம்மா மக்கள் முன்னேற்ற கழகம். இந்த மாதம் இறுதிக்குள் 18 எம்.எல்.ஏ.க்கள் குறித்த தீர்ப்பு கோர்ட்டில் வந்த பின்னர் தற்போது தமிழகத்தில் நடைபெறும் ஆட்சி முடிவுக்கு வரும். இதையடுத்து டி.டி.வி தினகரன் தலைமையிலான ஆட்சி தமிழகத்தில் நடைபெறும்.

இவ்வாறு அவர் பேசினார்.


Next Story