மனைவி, குழந்தைகளை எரித்துவிட்டு நாடகமாடிய தொழிலாளி கைது சிகிச்சை பலனின்றி தாய், மகள் சாவு


மனைவி, குழந்தைகளை எரித்துவிட்டு நாடகமாடிய தொழிலாளி கைது சிகிச்சை பலனின்றி தாய், மகள் சாவு
x
தினத்தந்தி 23 Sept 2018 6:00 AM IST (Updated: 23 Sept 2018 1:28 AM IST)
t-max-icont-min-icon

ஆத்தூர் அருகே மனைவி, குழந்தைகளை தீவைத்து எரித்துவிட்டு நாடகமாடிய தொழிலாளி கைது செய்யப்பட்டார். இதற்கிடையே, ஆஸ்பத்திரியில் சிகிச்சை பலனின்றி தாயும், மகளும் உயிரிழந்தனர். மகனுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.

ஆத்தூர்,

சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே உள்ள அழகாபுரம் கிராமத்தை சேர்ந்தவர் கார்த்திக் (வயது 31). ரிக் வண்டி தொழிலாளி. இவருடைய மனைவி பூமதி (26). இவர்களுக்கு திருமணம் நடந்து 6 ஆண்டுகள் ஆகிறது. இவர்களது மகன் பூவரசன் (5), மகள் நிலாஸ்ரீ (3).

கார்த்திக் அடிக்கடி மது குடித்துவிட்டு வீட்டுக்கு வருவதால் கணவன்-மனைவிக்கு இடையே தகராறு ஏற்பட்டு வந்தது. இந்த நிலையில் கடந்த 19-ந் தேதி இரவு கார்த்திக் மது குடித்து விட்டு வீட்டுக்கு வந்தார். அப்போது அவருக்கும், அவரது மனைவிக்கும் இடையே தகராறு ஏற்பட்டது.

இந்த நிலையில் அன்று இரவு பூமதி, அவரது 2 குழந்தைகள் தீயில் கருகிய நிலையில் கணவர் மற்றும் அக்கம், பக்கத்தினரால் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர்.

இந்த நிலையில் நேற்று காலை பூமதியும், நிலாஸ்ரீயும் சிகிச்சை பலனின்றி இறந்தனர். பூவரசனுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது. முதலில் குடும்ப தகராறில் பூமதி தன்னுடைய 2 குழந்தைகளுக்கு தீ வைத்து விட்டு தானும் தீக்குளித்ததாக கூறப்பட்டது.

ஆனால் இந்த வழக்கில் அதிரடி திருப்பமாக பூமதி இறப்பதற்கு முன் ஆத்தூர் போலீசில் மரண வாக்குமூலம் அளித்து உள்ளார். அந்த வாக்குமூலத்தில், சம்பவத்தன்று இரவு மது குடித்து விட்டு வந்த கணவரிடம், ஏன் வேலைக்கு செல்லாமல் அடிக்கடி மது குடித்து விட்டு வந்து தகராறில் ஈடுபடுகிறாய் என்று கேட்டதற்கு ஆத்திரம் அடைந்த அவர், வீட்டில் இருந்த மண்எண்ணெயை என் மீதும், குழந்தைகள் மீதும் ஊற்றி தீ வைத்து விட்டதாக கூறி இருந்தார்.

இந்த வாக்குமூலத்தின் அடிப்படையில் ஆத்தூர் ரூரல் போலீசார் கார்த்திக்கை கைது செய்தனர். இதையடுத்து தற்கொலை முயற்சி என பதியப்பட்டு இருந்த வழக்கை, போலீசார் கொலை வழக்காக மாற்றி கார்த்திக்கிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story