மாவட்டத்தில் முதல் முறையாக, போடியில் போலீஸ் துறை சார்பில் புகார் பெட்டி


மாவட்டத்தில் முதல் முறையாக, போடியில் போலீஸ் துறை சார்பில் புகார் பெட்டி
x
தினத்தந்தி 23 Sept 2018 5:00 AM IST (Updated: 23 Sept 2018 1:58 AM IST)
t-max-icont-min-icon

தேனி மாவட்டத்தில் முதல் முறையாக போடியில் போலீஸ் துறை சார்பில் புகார் பெட்டி அமைக்கப்பட்டுள்ளது. இதை போலீஸ் சூப்பிரண்டு பாஸ்கரன் திறந்து வைத்தார்.

போடி,

தேனி மாவட்டத்தில் குற்ற செயல்களை குறைப்பதற்கும், தடுப்பதற்கும் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாஸ்கரன் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். இதன் ஒரு கட்டமாக கிராமங்கள் மற்றும் நகராட்சி, பேரூராட்சி பகுதிகளில் வார்டுகள் தோறும் ஒரு போலீஸ்காரர் நியமிக்கப்பட்டுள்ளார். அந்த போலீஸ்காரர் தலைமையில் கிராம மற்றும் வார்டு கண்காணிப்பு குழுக்களை அமைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

இந்த கண்காணிப்பு குழுக்கள் மூலம் கிராமம், வார்டுகளில் நடக்கும் குற்ற சம்பவங்கள் குறித்த தகவல்கள் அந்த போலீஸ்காரருக்கு தெரிவிக்கப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதன் தொடர்ச்சியாக பொதுமக்கள் புகார், தகவல் அல்லது ஆலோசனைகளை தெரிவிக்கும் வகையில் புகார் பெட்டி அமைக்க திட்டமிடப்பட்டது. இதன்படி தேனி மாவட்டத்தில் முதல் முறையாக போடியில் புகார் பெட்டி அமைக்கும் நிகழ்ச்சி மற்றும் போலீசார், பொதுமக்கள் கலந்துரையாடல் நிகழ்ச்சி ஆகியவை போடி 33-வது வார்டு சுப்புராஜ் நகரில் நடைபெற்றது.

தேனி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாஸ்கரன் நிகழ்ச்சிக்கு தலைமை தாங்கி புகார் பெட்டி திட்டத்தை தொடங்கி வைத்தார். பின்னர் அவர் பேசியதாவது:-

பொதுமக்களுடன் போலீசார் இணக்கமாக பழகும் நோக்கத்தில் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதற்காக வார்டு கண்காணிப்பு குழுக்கள் அமைக்கப்பட்டு வார்டுகளில் வாரந்தோறும் கூட்டம் நடத்தி, அந்த வாரத்தில் நடைபெற்ற சம்பவங்கள், ஆலோசனைகளை இன்ஸ்பெக்டர், துணை சூப்பிரண்டு மூலம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டுவிடம் தெரிவிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இந்த திட்டம் மூலம் பொதுமக்கள் எந்த ஒரு தகவலையும், குற்ற நடவடிக்கைகளையும், சந்தேகத்திற்கிடமான சம்பவங்களையும் போலீசின் கவனத்திற்கு கொண்டு வரலாம். மேலும் போலீஸ் துறையின் 100, 112 ஆகிய இலவச தொலைபேசி எண்கள், காவலன் செயலி உள்ளிட்ட தகவல் தொழில்நுட்ப வசதியின் உதவியுடன் தகவல்களை தெரிவிக்கலாம். இவ்வாறு அவர் பேசினார்.

கலந்துரையாடல் நிகழ்ச்சியில் பங்கேற்ற சிலர், இப்பகுதியில் கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாகவும், அதனை மாணவர்கள் வாங்கி பயன்படுத்தி தீய பாதைக்கு செல்வதாகவும் தெரிவித்தனர். இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்க மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு உத்தரவிட்டார்.

நிகழ்ச்சியில் போடி போலீஸ் துணை சூப்பிரண்டு ஈஸ்வரன் வரவேற்றார். போடி நகர் இன்ஸ்பெக்டர் சேகர் நன்றி கூறினார். பயிற்சி போலீஸ் துணை சூப்பிரண்டு வினோத், போடி நகர் சப்-இன்ஸ்பெக்டர்கள் ராஜலிங்கம், விக்னேஷ் பிரபு, 33-வது வார்டு பொறுப்பு போலீஸ்காரர் முத்துச்செல்வம் மற்றும் வார்டு கண்காணிப்புக்குழு உறுப்பினர்கள் பங்கேற்றனர்.


Next Story