செந்துறையில் மூடப்பட்ட டாஸ்மாக் கடை மீண்டும் திறப்பு


செந்துறையில் மூடப்பட்ட டாஸ்மாக் கடை மீண்டும் திறப்பு
x
தினத்தந்தி 22 Sep 2018 10:15 PM GMT (Updated: 22 Sep 2018 8:46 PM GMT)

டாஸ்மாக் கடையை மூட வேண்டும் என்று அந்த தெருவில் வசிக்கும் பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் வீட்டின் உரிமையாளரிடம் கடையை மூட கோரிக்கை விடுத்தனர்.

செந்துறை,

அரியலூர் மாவட்டம், செந்துறையில் கோபி என்பவரது வீடு உள்ளது. இவரது வீட்டில் வாடகைக்கு கடந்த 13 ஆண்டுகளாக டாஸ்மாக் கடை ஒன்று செயல்பட்டு வந்தது. இந்த டாஸ்மாக் கடையை மூட வேண்டும் என்று அந்த தெருவில் வசிக்கும் பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் வீட்டின் உரிமையாளரிடம் கடையை மூட கோரிக்கை விடுத்தனர். அதனைத் தொடர்ந்து வீட்டின் உரிமையாளர் கோபி பொதுமக்கள் துணையோடு டாஸ்மாக் கடையை மூடி பூட்டுபோட்டார். இந்த நிலையில் கடந்த சில மாதங்களாக செந்துறை பகுதியில் அரசியல் பிரமுகர்களின் ஆதரவோடு ஆங்காங்கே விவசாய நிலங்களில் டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்டன. செந்துறை தாலுகாவில் தற்போது 11 கடைகள் திறக்கப்பட்டுள்ளன. இதனால் அதிர்ச்சியடைந்த செந்துறை பகுதி பொதுமக்கள் கோபியிடம், எங்கள் போராட்டத்திற்கு மதிப்பளிக்காமல் அரசியல் பிரமுகர்கள் பல்வேறு இடங்களில் டாஸ்மாக் கடையை திறந்து விட்டார்கள். ஆகையால் எங்கள் கோரிக்கையை ஏற்று நீங்கள் மூடிய டாஸ்மாக் கடையை மீண்டும் திறந்து கொள்ளுங்கள் என்று கூறினார். அதனைத் தொடர்ந்து கோபி அதே இடத்தில் மீண்டும் டாஸ்மாக் கடை திறக்க அனுமதி அளித்தார். இதனை ஏற்றுக் கொண்ட டாஸ்மாக் நிர்வாகம் நேற்று 12 மணி அளவில் மீண்டும் அதே இடத்தில் டாஸ்மாக் கடையை திறந்தனர். 

Next Story