தலைமை ஆசிரியர் பணியிடை நீக்கம்: வேலையில் சேருவதாக வந்த தகவலால் பள்ளியை முற்றுகையிட்டு கிராம மக்கள் போராட்டம்


தலைமை ஆசிரியர் பணியிடை நீக்கம்:  வேலையில் சேருவதாக வந்த தகவலால் பள்ளியை முற்றுகையிட்டு கிராம மக்கள் போராட்டம்
x
தினத்தந்தி 23 Sept 2018 4:45 AM IST (Updated: 23 Sept 2018 2:33 AM IST)
t-max-icont-min-icon

பணியிடை நீக்கம் செய்யப்பட்ட தலைமை ஆசிரியர் பணியில் சேர வருவதாக தகவல் பரவியதையடுத்து கிராம மக்கள் பள்ளியை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

குஜிலியம்பாறை,

குஜிலியம்பாறை ஒன்றியம் ஆர்.கோம்பை ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் தலைமை ஆசிரியராக பணியாற்றியவர் மோகன்தாஸ். கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஆய்வு செய்த குஜிலியம்பாறை வட்டார கல்வி அலுவலர் அருண்குமார், பள்ளியில் உள்ள குறைகளை சுட்டிக்காட்டினார். இதனால் ஆத்திரமடைந்த தலைமை ஆசிரியர் மோகன்தாஸ், வட்டார கல்வி அலுவலரின் புகைப்படத்தை, பெண் அலுவலரின் புகைப்படத்தோடு இணைத்து போலியாக சித்தரித்து தொடக்கக்கல்வி இயக்குனருக்கு புகார் மனு அனுப்பினார்.

இதுகுறித்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் அருண்குமார் புகார் கொடுத்தார். ஆனால் புகார் மீது போலீசார் நடவடிக்கை எடுக்காததால் மதுரை ஐகோர்ட்டில் அருண்குமார் வழக்கு தொடர்ந்தார். ஐகோர்ட்டு உத்தரவுப்படி கடந்த ஜூலை மாதம் தலைமை ஆசிரியர் மோகன்தாஸ் மீது 3 பிரிவுகளில் குஜிலியம்பாறை போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

இதைத்தொடர்ந்து திண்டுக்கல் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் சாந்தகுமார் உத்தரவின் பேரில், திண்டுக்கல் மாவட்ட கல்வி அலுவலர் சுப்பிரமணியன் விசாரணை அதிகாரியாக நியமிக்கப்பட்டார். இந்த சம்பவம் தொடர்பாக அவர் விசாரணை நடத்தி அறிக்கை சமர்ப்பித்தார்.

அந்த அறிக்கையின் அடிப்படையில் கடந்த ஆகஸ்டு மாதம் 21-ந் தேதி மோகன்தாசை பணியிடை நீக்கம் செய்து வேடசந்தூர் மாவட்ட கல்வி அலுவலர் பிச்சைமுத்து உத்தரவிட்டார். தலைமை ஆசிரியர் மோகன்தாஸ் பணியிடை நீக்கம் செய்யப்பட்டு ஒரு மாதம் ஆன நிலையில், நேற்று சுப்பிரமணியபிள்ளையூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் மோகன்தாஸ் தலைமை ஆசிரியர் பணியில் சேர இருப்பதாக தகவல் பரவியது.

இதையறிந்த அந்த கிராமத்தை சேர்ந்த 80-க்கும் மேற்பட்ட மக்கள், மோகன்தாஸ் இந்த பள்ளிக்கு வருவதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும் அவர்கள் பள்ளியை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். நீண்ட நேரம் ஆகியும் யாரும் வராததால் அவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

இதுகுறித்து கிராம மக்கள் கூறுகையில், ‘இந்த பள்ளியில் படிக்கும் மாணவ, மாணவிகளின் கல்வித்தரம் நன்றாக உள்ளது. கல்வியில் மாணவர்கள் வளர்ச்சியடைந்து வரும் நிலையில், பணியிடை நீக்கம் செய்யப்பட்ட தலைமை ஆசிரியர் ஒருவர் இப்பள்ளிக்கு வந்தால், கல்வித்தரம் முற்றிலும் சீரழிந்து போய் விடும். மாவட்ட கல்வித்துறையின் இந்த செயலை நாங்கள் ஒருபோதும் அனுமதிக்கமாட்டோம். இதையும் மீறி பணியிடை நீக்கம் செய்யப்பட்ட தலைமை ஆசிரியர் இந்த பள்ளிக்கு வந்தால், இங்கு படிக்கும் 125 மாணவ, மாணவிகளின் ஒட்டு மொத்த மாற்று சான்றிதழ்களையும் வாங்கி வேறு பள்ளியில் சேர்ப்போம்’ என்றனர்.


Next Story