வெலிங்டன் ராணுவ முகாம் குழந்தைகள் பூங்காவில் புகுந்த காட்டெருமை கூட்டம்


வெலிங்டன் ராணுவ முகாம் குழந்தைகள் பூங்காவில் புகுந்த காட்டெருமை கூட்டம்
x
தினத்தந்தி 23 Sept 2018 4:30 AM IST (Updated: 23 Sept 2018 2:56 AM IST)
t-max-icont-min-icon

வெலிங்டன் ராணுவ முகாம் குடியிருப்பில் உள்ள குழந்தைகள் பூங்காவில் காட்டெருமை கூட்டம் புகுந்தது. இதனை ராணுவ வீரர்கள், வனத்துறையினர் இணைந்து விரட்டி அடித்தனர்.

குன்னூர்,

குன்னூர் ஊட்டி தேசிய நெடுஞ்சாலையில் உள்ள பிளாக் பிரிட்ஜில் வனத்துறைக்கு சொந்தமான காடு உள்ளது. இந்த காட்டில் மான்கள், காட்டெருமைகள் உள்ளிட்ட வன விலங்குகள் வசித்து வருகின்றன. சில நேரங்களில் கரடிகள் மற்றும் சிறுத்தை புலிகள் நடமாட்டமும் காணப்படுகிறது.

இந்த காட்டில் உள்ள காட்டெருமைகள் அடிக்கடி வனப் பகுதியை விட்டு வெளியேறி பொதுமக்கள் வசிக்கும் குடியிருப்பு பகுதிகளிலும், வெலிங்டன் ராணுவ முகாம் குடியிருப்புகளிலும் புகுந்து விடுகின்றன. மேலும் விவசாய பயிர்களையும் சேதப்படுத்தி வருகின்றன.

இதனிடையே எம்.ஆர்.சி. ராணுவ முகாம் குடியிருப்பு பகுதிகளில் உள்ள குழந்தைகள் விளையாடுவதற்காக கடந்த சில நாட்களுக்கு முன்பு இங்கு பூங்கா அமைக்கப்பட்டு உள்ளது. தினசரி காலை நேரத்தில் நடைபயிற்சி மேற்கொள்கிறவர்கள் இந்த பூங்காவில் அமர்ந்து ஓய்வெடுப்பது உண்டு.

இந்த நிலையில் நேற்று காலை 9 மணிக்கு வனப்பகுதியிலிருந்து வெளியேறிய சுமார் 10 காட்டெருமைகள் கொண்ட கூட்டம் பேரக்சில் உள்ள எம்.ஆர்.சி. ராணுவ குடியிருப்பு குழந்தைகள் பூங்காவிற்குள் புகுந்தன. இது குறித்து தகவலறிந்த ராணுவ வீரர்களும், வனத்துறையினரும் காட்டெருமைகளை விரட்டும் பணியில் ஈடுபட்டனர். 2 மணி நேர போராட்டத்துக்கு பின்னர் காட்டெருமைகள் வனப்பகுதிக்குள் விரட்டப்பட்டன. பேரக்சில் உள்ள எம்.ஆர்.சி. ராணுவ குடியிருப்பு பகுதியில் உள்ள குழந்தைகள் பூங்காவில் 10 காட்டெருமைகள் புகுந்தது அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.


Next Story