தமிழக எல்லை பகுதியில் மாவோயிஸ்டுகள் ஊடுருவல் இல்லை - கூடுதல் சூப்பிரண்டு மோகன்நிவாஸ் உறுதி


தமிழக எல்லை பகுதியில் மாவோயிஸ்டுகள் ஊடுருவல் இல்லை - கூடுதல் சூப்பிரண்டு மோகன்நிவாஸ் உறுதி
x
தினத்தந்தி 22 Sep 2018 10:28 PM GMT (Updated: 22 Sep 2018 10:28 PM GMT)

தமிழக எல்லை பகுதியில் மாவோயிஸ்டுகள் ஊடுருவல் இல்லை என்று நக்சலைட்டு தடுப்பு பிரிவு கூடுதல் சூப்பிரண்டு மோகன் நிவாஸ் கூறினார்.

கோவை,

மலைவாழ் மக்களுக்கு உதவி பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சி கோவையில் நேற்று நடைபெற்றது. நக்சலைட்டு தடுப்பு பிரிவு கூடுதல் சூப்பிரண்டு மோகன் நிவாஸ் கலந்துகொண்டு உதவி பொருட்களை வழங்கினார்.

பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:–

கேரளா, கர்நாடக மாநிலங்களில் மாவோயிஸ்டு ஆதரவாளர்கள் உள்ளனர். அவர்கள் மாவோயிஸ்டுகளின் நடமாட்டம் குறித்து அந்த மாநில போலீசுக்கு தகவல் தெரிவிப்பது இல்லை. ஆனால் தமிழ்நாட்டில் வித்தியாசமான நிலை உள்ளது. இங்குள்ள மலைவாழ் மக்கள் போலீசாருக்கு மாவோயிஸ்டு ஊடுருவல் தொடர்பான தகவல்களை தெரிவித்து வருகிறார்கள். தமிழ்நாடு போலீஸ், அரசு துறை அதிகாரிகள் மலைவாழ் மக்களுக்கு தேவையான உதவிகளை செய்வதால் மலைவாழ் மக்கள் உள்பட எல்லோருமே மாவோயிஸ்டு தேடுதல் வேட்டைக்கு உதவியாக உள்ளனர்.

தமிழக எல்லைப்பகுதியில் உள்ள மக்கள் நம்முடன் இணைந்து உள்ளனர். அவர்களிடம் அன்பு செலுத்துவதால் அவர்கள் எதிரிகளிடம் செல்லவில்லை. சென்றுவிடவும் கூடாது. இதற்காக மலைவாழ் மக்களுக்கு அனைத்து உதவிகளும் செய்யப்படுகின்றன. குறிப்பாக மலை வாழ் மக்கள் வசிக்கும் பகுதிகளில் இலவச மருத்துவ முகாம்கள் நடத்தப்படுகின்றன. மாற்றுத்திறனாளிகளுக்கு 3 சக்கர சைக்கிள் உள்ளிட்ட உபகரணங்கள் வழங்கப்படுகின்றன. பார்வையற்ற ஒரு குழந்தைக்கு கண் அறுவை தனியார் மருத்துவமனை மூலம் செய்யப்பட்டது. லட்சக்கணக்கில் செலவு ஆகும் இந்த அறுவை சிகிச்சை இலவசமாக செய்து கொடுக்கப்பட்டது.

தமிழக எல்லைப்பகுதிக்குள் மாவோயிஸ்டுகள் ஊடுருவல் இல்லை. அவர்களது ஊடுருவல் முழுவதும் கட்டுப்படுத்தப்பட்டுவிட்டது. தமிழக எல்லைப்பகுதிக்குள் அவர்கள் வந்தால் உடனடியாக எங்களுக்கு தகவல் தெரியும். கோவை அருகே உள்ள ஆனைக்கட்டி உள்ளிட்ட பல பகுதிகளில் இடைவிடாத சோதனைகள் நடைபெற்று வருகிறது. கண்காணிப்புகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

இவ்வாறு அவர் கூறினார். பேட்டியின்போது போலீஸ் கமி‌ஷனர் பெரியய்யா உடன் இருந்தார்.


Next Story