திருப்பூரில் புதுமாப்பிள்ளை கொலை: பெண் உள்பட 4 பேர் கைது


திருப்பூரில் புதுமாப்பிள்ளை கொலை: பெண் உள்பட 4 பேர் கைது
x
தினத்தந்தி 23 Sept 2018 4:33 AM IST (Updated: 23 Sept 2018 4:33 AM IST)
t-max-icont-min-icon

திருப்பூரில் புதுமாப்பிள்ளை கொலை செய்யப்பட்டார். இந்த கொலை தொடர்பாக பெண் உள்பட 4 பேரை போலீசார் கைது செய்தனர்.

நல்லூர்,

புதுமாப்பிள்ளை கொலை சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-

திருப்பூர் மாவட்டம் பெருந்தொழுவு பொல்லிக்காளிபாளையத்தை சேர்ந்த காளிதாஸ் என்பவரது மகன் வெங்கடேஷ் (வயது 27). எலெக்ட்ரீசியன் வேலை செய்து வந்தார். மேலும் அந்த பகுதியை சேர்ந்த நிதி நிறுவனம் ஒன்றுக்கு பணம் வசூல் செய்யும் வேலையும் செய்து வந்தார். இவருக்கு கடந்த 4 மாதங்களுக்கு முன்புதான் திருமணம் நடைபெற்றது.

சம்பவத்தன்று வெங்கடேஷ், திருப்பூர் ராக்கியாபாளையம் ஜெய்நகர் 1-வது வீதியில் உள்ள ஜெயந்தி (23) என்பவரிடம் பணம் வசூலிக்க சென்றார். அப்போது ஜெயந்திக்கும், அவருடைய பக்கத்தில் உள்ள வீட்டில் வசிக்கும் ராதா (50) என்பவருக்கும் இடையே வீட்டில் பொருட்களை வைத்தது தொடர்பாக சண்டை நடைபெற்றது. அப்போது ராதாவும், 16-வயது சிறுவனும் சேர்ந்து ஜெயந்தியை தாக்கியதில் அவர் கீழே விழுந்துள்ளார். இதற்கிடையில் அங்கு பணம் வசூலிக்க சென்ற வெங்கேடஷ், ஜெயந்திக்கு ஆதரவாக பேசி உள்ளார்.

இதனால் ஆத்திரம் அடைந்த ராதா, தனக்கு துணையாக தனது உறவினர்களான ஜெய்நகர் 5-வது வீதியை சேர்ந்த சிவக்குமார் (30), ராக்கியாபாளையம் வெங்கமேடு திருவெங்கடா நகர் பகுதியை சேர்ந்த பாலு (37) ஆகியோரை வரவழைத்துள்ளார். பின்னர் ராதா, சிவக்குமார், பாலு மற்றும் 16 வயது சிறுவனும் சேர்ந்து வெங்கடேசை தாக்கி, அவரை அங்கிருந்த அம்மி கல் மீது தள்ளி உள்ளனர். இதில் அம்மி கல் மீது, விழுந்த வெங்கடேசின் தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. உடனே அருகில் உள்ளவர்கள் அவரை மீட்டு திருப்பூரில் உள்ள அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு முதலுதவி சிகிச்சை அளித்த பின்னர் மேல் சிகிச்சைக்காக கோவையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி வெங்கடேஷ் இறந்தார். இதையடுத்து அவருடைய உடலை போலீசார் மீட்டு பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த கொலை தொடர்பாக திருப்பூர் ஊரக போலீசார், ராதா, சிவக்குமார், பாலு மற்றும் 16 வயது சிறுவன் ஆகிய 4 பேர் மீதும் கொலை வழக்கு பதிவு செய்து அவர்களை கைது செய்தனர். வெங்கடேசுக்கு திருமணமாகி 4 மாதங்கள் மட்டுமே ஆவதால், உறவினர்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.


Next Story