வருகிற 2–ந் தேதிக்குள் வடிகால் வாய்க்காலை தூர்வாரவேண்டும் - உள்ளாட்சித்துறை செயலர் உத்தரவு


வருகிற 2–ந் தேதிக்குள் வடிகால் வாய்க்காலை தூர்வாரவேண்டும் - உள்ளாட்சித்துறை செயலர் உத்தரவு
x
தினத்தந்தி 23 Sept 2018 4:45 AM IST (Updated: 23 Sept 2018 4:35 AM IST)
t-max-icont-min-icon

வடிகால் வாய்க்கால்களை வருகிற 2–ந் தேதிக்குள் தூர்வாரவேண்டும் என்று உள்ளாட்சித்துறை செயலர் ஜவகர் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.

பாகூர்,

பருவ மழைக்கு முன் வரத்து வாய்க்கால்கள், மழைநீர் வடிகால் வாய்க்கால்கள் மற்றும் நீர்நிலைகளை தூர்வாரி பராமரிக்க கவர்னர் கிரண்பெடி உத்தரவிட்டார். இதையடுத்து உள்ளாட்சித்துறை, பொதுப்பணித்துறை, நகராட்சி, கொம்யூன் பஞ்சாயத்து அதிகாரிகள் தங்களது பகுதியில் ஆய்வு மேற்கொண்டு, வடிகால் வாய்க்கால்களை தூர்வார நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

பாகூரை அடுத்த இருளஞ்சந்தை கிராமத்தில் உள்ள வடிகால வாய்க்கால்கள் நீண்ட நாட்களாக தூர்வாரப்படாமல் இருப்பதாக கிராம மக்கள் புகார் தெரிவித்தனர். அதன்பேரில் உள்ளாட்சித்துறை செயலர் ஜவகர், இயக்குனர் மலர்க்கண்ணன் ஆகியோர் இருளஞ்சந்தை கிராமத்தில் நேற்று ஆய்வு மேற்கொண்டனர்.

அப்போது அங்கு திரண்டிருந்த மக்கள், மழைநீரும், கழிவுநீரும் வெளியேற வழியில்லாமல் வாய்க்கால் தூர்ந்துபோய் உள்ளது. குப்பை வண்டிகள் குறுகிய வீதிகளுக்குள் வந்து குப்பைகளை எடுப்பது இல்லை என்று புகார் கூறினர். இதுபற்றி நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிகாரிகள் உறுதியளித்தனர்.

இதையடுத்து அங்குள்ள வாய்க்காலை ஆய்வு செய்த உள்ளாட்சித்துறை செயலாளர் ஜவகர், உள்ளாட்சித்துறை, பொதுப்பணித்துறை வாய்க்காலாக இருந்தாலும் வருகிற 2–ந் தேதிக்குள் தூர்வாரி குப்பைகளை அப்புறப்படுத்த வேண்டும் என்று அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

இந்த ஆய்வின்போது கொம்யூன் பஞ்சாயத்து ஆணையர் சவுந்திரராஜன், தாசில்தார் கார்த்திகேயன் மற்றும் அதிகாரிகள் உடனிருந்தனர்.


Next Story