குமாரசாமி ராஜினாமா செய்ய வேண்டும் : ஜெகதீஷ் ஷெட்டர் வலியுறுத்தல்


குமாரசாமி ராஜினாமா செய்ய வேண்டும் : ஜெகதீஷ் ஷெட்டர் வலியுறுத்தல்
x
தினத்தந்தி 23 Sept 2018 4:58 AM IST (Updated: 23 Sept 2018 4:58 AM IST)
t-max-icont-min-icon

பா.ஜனதாவுக்கு எதிராக மக்கள் போராட வேண்டும் என்று அழைப்பு விடுத்த குமாரசாமி, தனது முதல்-மந்திரி பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என்று ஜெகதீஷ் ஷெட்டர் கோரிக்கை விடுத்து உள்ளார்.

பெங்களூரு,

கர்நாடகத்தில் கூட்டணி ஆட்சியை கவிழ்க்க காங்கிரஸ், ஜனதாதளம்(எஸ்) கட்சிகளின் எம்.எல்.ஏ.க்களை இழுக்க பா.ஜனதா முயற்சிப்பதாக கூட்டணி கட்சி தலைவர்கள் குற்றச்சாட்டு கூறி வருகிறார்கள். மேலும் கூட்டணி ஆட்சியை கவிழ்க்க முயற்சிக்கும் பா.ஜனதாவுக்கு எதிராக மக்கள் போராட வேண்டும் என்று முதல்-மந்திரி குமாரசாமி தெரிவித்து இருந்தார். அவரது பேச்சுக்கு பா.ஜனதா தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

மேலும் குமாரசாமி மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கவர்னர் வஜூபாய் வாலாவிடம் பா.ஜனதாவினர் மனு கொடுத்துள்ளனர். இதுகுறித்து முன்னாள் முதல்-மந்திரி ஜெகதீஷ் ஷெட்டரிடம் நேற்று நிருபர்கள் கேள்வி எழுப்பினார்கள். இதற்கு பதிலளித்து அவர் கூறியதாவது:-

“காங்கிரஸ், ஜனதாதளம்(எஸ்) கூட்டணி ஆட்சியை கவிழ்க்க பா.ஜனதா நினைக்கவில்லை. கூட்டணி ஆட்சியில் ஏற்பட்டுள்ள மோதல் காரணமாக காங்கிரஸ், ஜனதாதளம்(எஸ்) எம்.எல்.ஏ.க்கள் பா.ஜனதாவுக்கு வர விரும்புகிறார்கள். ஆனால் ஆபரேஷன் தாமரை மூலம் எம்.எல்.ஏ.க்களை பா.ஜனதா இழுக்க முயற்சிப்பதாக மக்களிடம் தவறான தகவல்களை கூட்டணி கட்சி தலைவர்கள் பரப்பி வருகிறார்கள். மக்களிடையே பா.ஜனதாவுக்கு கெட்ட பெயரை ஏற்படுத்த வேண்டும் என்பதே காங்கிரஸ், ஜனதாதளம்(எஸ்) கட்சியினரின் நோக்கமாக உள்ளது.

பா.ஜனதாவுக்கு எதிராக மக்கள் வீதியில் இறங்கி போராட வேண்டும் என்று முதல்-மந்திரி குமாரசாமி அழைப்பு விடுத்து பேசியுள்ளார். முதல்-மந்திரி பதவியில் இருப்பவர் இதுபோன்று வாய்க்கு வந்ததை பேசுவது கண்டனத்திற்கு உரியது. அரசியலமைப்புக்கு எதிரானது. இதற்காக முதல்-மந்திரி பதவியை குமாரசாமி உடனே ராஜினாமா செய்ய வேண்டும். எந்த ஒரு முதல்-மந்திரியும், இவ்வாறு பேசியதில்லை. அதனால் தான் அவர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கவர்னரிடம் பா.ஜனதா சார்பில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

கூட்டணி ஆட்சியில் ஏற்பட்டுள்ள மோதலால், இந்த ஆட்சி எத்தனை நாட்கள் நீடிக்கும் என்று குமாரசாமிக்கே தெரியவில்லை. அதனால் தான் முதல்-மந்திரி பதவியை காப்பாற்றவும், ஆட்சி கவிழ்ந்து விடக்கூடாது என்பதற்காகவும் கோவில் கோவிலாக சென்று குமாரசாமி சாமி தரிசனம் செய்து வருகிறார். அவ்வாறு அவர் கோவில்களுக்கு செல்வதிலும் வடகர்நாடகத்தை புறக்கணித்து வருகிறார். பட்ஜெட்டில் தான் வடகர்நாடகத்திற்கு போதிய நிதி ஒதுக்காமல் ஏமாற்றினார். தற்போது வடகர்நாடகத்தை விட்டு மற்ற பகுதிகளில் உள்ள கோவில்களுக்கு எல்லாம் செல்கிறார்.

ஆனால் வடகர்நாடகத்தில் உள்ள ஒரு கோவிலுக்கு கூட வந்து சாமி தரிசனம் செய்ய குமாரசாமிக்கு விருப்பம் இல்லை. வடகர்நாடகத்தில் எத்தனையோ பிரசித்தி பெற்ற கோவில்கள், மடங்கள் இருந்தும் இங்கு வந்து சாமி தரிசனம் செய்ய வேண்டும் என்ற எண்ணம் குமாரசாமிக்கு வரவில்லை. வடகர்நாடகத்தில் 86 தாலுகாக்களில் வறட்சி நிலவுகிறது. இதற்காக ஒரு ரூபாய் நிதியை கூட குமாரசாமி ஒதுக்கவில்லை. கூட்டணி ஆட்சியில் வடகர்நாடக மாவட்டங்கள் தொடர்ந்து புறக்கணிக்கப்பட்டு வருகின்றன.”

இவ்வாறு ஜெகதீஷ் ஷெட்டர் கூறினார். 

Next Story