கன்னியாகுமரியில் பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு கண்காட்சி கலெக்டர் பிரசாந்த் வடநேரே பார்வையிட்டார்
கன்னியாகுமரியில் பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு கண்காட்சி நடந்தது. இதை மாவட்ட கலெக்டர் பிரசாந்த் வடநேரே பார்வையிட்டார்.
கன்னியாகுமரி,
கன்னியாகுமரியில் தோட்டக்கலைத்துறைக்கு சொந்தமான பழத்தோட்டம் உள்ளது. இங்கு சுமார் 15 ஏக்கர் பரப்பளவில் சுற்றுச்சூழல் பூங்கா அமைக்கப்பட்டுள்ளது. இங்கு பிளாஸ்டிக் பொருள் ஒழிப்பு மற்றும் காகிதத்தால் செய்யப்பட்ட வீட்டு உபயோக பொருட்கள் குறித்த விழிப்புணர்வு கண்காட்சி நேற்று தொடங்கியது. இதில், பிளாஸ்டிக் கழிவு பொருட்களால் உருவாக்கப்பட்ட ராட்சத மீன் உருவம் உள்பட பல்வேறு பொருட்கள் காட்சிக்காக வைக்கப்பட்டிருந்தன.
கண்காட்சியை மாவட்ட கலெக்டர் பிரசாந்த் வடநேரே பார்வையிட்டார். தொடர்ந்து அவர் சுற்றுச்சூழல் பூங்கா பகுதியை சுற்றிப்பார்த்தார். அப்போது அவர் சுற்றுலா பயணிகளுக்காக செய்யப்பட்டுள்ள அடிப்படை வசதிகள், குடிநீர் வசதி குறித்து ஆய்வு செய்தார்.
பின்னர், மாவட்ட கலெக்டர் பிரசாந்த் வடநேரே நிருபர்களிடம் கூறியதாவது:–
குமரி மாவட்டத்தில் பிளாஸ்டிக் பயன்பாட்டை குறைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. குறிப்பாக பிளாஸ்டிக் பொருட்களால் ஏற்படும் தீமைகள் குறித்து பொதுமக்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்தி, இயற்கையோடு இணைந்து வாழ அறிவுறுத்தப்படுகிறது. இதன்மூலம் குமரி மாவட்டம் பிளாஸ்டிக் இல்லாத மாவட்டமாக விரைவில் மாற்றப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
கலெக்டருடன் பத்மநாபபுரம் உதவி கலெக்டர் ராஜகோபால் துங்கரா, துணை கலெக்டர் (பயிற்சி) பிரதீப் தயாஸ், நாகர்கோவில் கோட்டாச்சியாளர் வீராசாமி, அகஸ்தீஸ்வரம் தாசில்தார் அனில்குமார், ரோஜா வன முதியோர் இல்ல நிறுவனர் டாக்டர் அருள் கண்ணன், தோட்டக்கலை துறை உதவி இயக்குனர் பாலகிருஷ்ணன், கன்னியாகுமரி அரசு தோட்டக்கலை பண்ணை மேலாளர் சரவணன் உள்பட பலர் உடனிருந்தனர்.
நேற்று தொடங்கிய கண்காட்சியை சுற்றுலா பயணிகள் பலர் பார்வையிட்டனர். இந்த கண்காட்சி இன்று (திங்கட்கிழமை) நிறைவடைகிறது.