அந்தியூர் அருகே பரபரப்பு: 2 குழந்தைகளை விஷம் கொடுத்து கொன்றுவிட்டு தந்தை தற்கொலை முயற்சி
அந்தியூர் அருகே தொழிலாளி ஒருவர் தன்னுடைய 2 குழந்தைகளுக்கு விஷம் கொடுத்து கொலை செய்துவிட்டு தானும் தற்கொலைக்கு முயன்றார்.
அந்தியூர்,
அந்தியூரை அடுத்த பர்கூர் மலைப்பகுதியில் உள்ள செங்குளம் கிராமத்தை சேர்ந்தவர் சிக்கரசன் (வயது 40). கூலித்தொழிலாளி. இவருடைய மனைவி சித்ரா (39). இவர்களுக்கு சுதா (16), மேகலா (10) என 2 மகள்கள் உள்ளனர். கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்பு ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக சிக்கரசனும், சித்ராவும் பிரிந்து அந்தப்பகுதியில் தனியாக வசித்து வருகிறார்கள். இதில், சுதாவும், மேகலாவும் தந்தை சிக்கரசனுடன் வசித்து வந்தார்கள்.
சுதா முகாசிபுதூரில் உள்ள மகளிர் தங்கும் விடுதியில் தங்கி அந்தப்பகுதியில் உள்ள அரசு பள்ளிக்கூடத்தில் 9–ம் வகுப்பும், மேகலா அந்தியூர் அருகே பள்ளியபாளையம் பகுதியில் உள்ள உண்டு உறைவிடப்பள்ளிக்கூடத்தில் தங்கி 6–ம் வகுப்பும் படித்து வந்தனர்.
இந்த நிலையில் சிக்கரசன் உடல்நிலை பாதிக்கப்பட்டு தீராத நோயால் அவதிப்பட்டு வந்தார். பல்வேறு மருத்துவமனைகளிலும் சிகிச்சை பெற்று வந்தார். அப்போது டாக்டர்கள் உங்களின் நோயை உடனே குணப்படுத்த முடியாது என்று கூறியதாக தெரிகிறது. மனைவி பிரிந்த வேதனை மற்றும் நோயாலும் அவதிப்பட்டு வந்த சிக்கரசன் தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்தார்.
தான் இறந்துவிட்டால் தன்னுடைய மகள்களை யாரும் கவனிக்க மாட்டார்கள். எனவே தற்கொலை செய்துகொள்வதற்கு முன் 2 மகள்களையும் விஷம் கொடுத்து கொலை செய்துவிடவேண்டும் என்ற முடிவுக்கு அவர் வந்தார்.
இதைத்தொடர்ந்து சிக்கரசன் கடந்த 20–ந் தேதி தன்னுடைய மகள்கள் படிக்கும் பள்ளிக்கூடத்துக்கு சென்றார். பின்னர் பள்ளி நிர்வாகிகளிடம் பாட்டி இறந்துவிட்டார் என்று கூறி 2 மகள்களையும் அழைத்து கொண்டு வீட்டுக்கு வந்தார்.
மறுநாள் 21–ந் தேதி சிக்கரசன் தன்னுடைய மகள்களை அந்தியூர் அருகே புதுப்பாளையத்தில் உள்ள கொன்னமரத்து அய்யன் கோவிலுக்கு கூட்டிச்சென்றார். அங்கு 3 பேரும் சாமி தரிசனம் செய்தனர். 22–ந் தேதி மாலை வரை கோவிலில் 3 பேரும் இருந்தனர்.
அப்போது சிக்கரசனிடம் மகள்கள் 2 பேரும் பசிக்கிறது என்று கூறியுள்ளனர். இதைத்தொடர்ந்து சாப்பாடு வாங்க சென்ற சிக்கரசன் உணவில் விஷத்தை கலந்து தன்னுடைய குழந்தைகள் சுதா மற்றும் மேகலாவுக்கு கொடுத்தார். மேலும் சிக்கரசனும் விஷம் குடித்தார். உணவு சாப்பிட்ட சிறிது நேரத்தில் 3 பேரும் ஒருவர் பின் ஒருவராக வாந்தி எடுத்த நிலையில் மயங்கி கீழே விழுந்தனர்.
இதனை கவனித்த பொதுமக்கள் இதுகுறித்து அந்தியூர் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் ரவி, சப்–இன்ஸ்பெக்டர் ஆனந்த குமார் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். பின்னர் மயங்கி கிடந்த 3 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக 108 ஆம்புலன்ஸ் மூலம் அந்தியூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு 3 பேருக்கு தீவிர சிகிச்சை அளித்தனர். எனினும் சிகிச்சை பலனளிக்காமல் மேகலா பரிதாபமாக இறந்தாள்.
இதைத்தொடர்ந்து மற்ற 2 பேரையும் மேல் சிகிச்சைக்காக ஈரோடு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அங்கு சுதாவுக்கும், சிக்கரசனுக்கும் டாக்டர்கள் தொடர்ந்து சிகிச்சை அளித்தனர். ஆனால் சிகிச்சை பலனளிக்காமல் சுதா நேற்று அதிகாலை பரிதாபமாக இறந்தார். சிக்கரசன் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார்.
இதுகுறித்து அந்தியூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
தீராத நோயால் அவதிப்பட்ட தொழிலாளி ஒருவர் தன்னுடைய மகள்கள் 2 பேருக்கும் உணவில் விஷம் கலந்து கொடுத்து கொலை செய்துவிட்டு தானும் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் அந்தப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.