தஞ்சை அருகே மதுபாட்டில்களை ஏற்றி வந்த லாரி, வயலில் கவிழ்ந்தது ரூ.2 லட்சம் பீர் பாட்டில்கள் உடைந்தன


தஞ்சை அருகே மதுபாட்டில்களை ஏற்றி வந்த லாரி, வயலில் கவிழ்ந்தது ரூ.2 லட்சம் பீர் பாட்டில்கள் உடைந்தன
x
தினத்தந்தி 24 Sept 2018 4:30 AM IST (Updated: 23 Sept 2018 10:17 PM IST)
t-max-icont-min-icon

தஞ்சை அருகே மதுபாட்டில்களை ஏற்றி வந்த லாரி வயலில் கவிழ்ந்தது. இதில் ரூ.2 லட்சம் மதிப்புள்ள பீர் பாட்டில்கள் உடைந்தன.

அய்யம்பேட்டை,

சென்னை புத்தம்பாக்கம் பகுதியில் தனியாருக்கு சொந்தமான மதுபான ஆலை இயங்கி வருகிறது. இந்த ஆலையில் இருந்து நேற்று முன்தினம் இரவு ரூ.18 லட்சம் மதிப்புடைய மதுபாட்டில்களை ஏற்றிக்கொண்டு ஒரு லாரி தஞ்சை நாஞ்சிக்கோட்டையில் உள்ள மதுபான குடோனுக்கு புறப்பட்டது.

இந்த லாரியில் 1250 அட்டை பெட்டிகளில் மதுபாட்டில்கள் இருந்தன. ஒரு அட்டை பெட்டியில் 12 மது பாட்டில்கள் வைக்கப்பட்டிருந்தன. லாரியை கும்பகோணம் காந்தியடிகள் சாலையை சேர்ந்த ராஜசேகரன் (வயது53) என்பவர் ஓட்டினார். கும்பகோணம் கவுதம் ஈஸ்வர் கோவில் தெருவை சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி (60) என்பவர் கிளீனராக பணியில் இருந்தார்.


நேற்று காலை 11 மணியளவில் தஞ்சை அருகே அய்யம்பேட்டையை அடுத்துள்ள மானாங்கோரை பகுதியில் லாரி சென்று கொண்டிருந்தது. அங்கு உள்ள ஒரு திருப்பத்தில் லாரியை டிரைவர் திருப்பினார். அப்போது எதிர்பாராதவிதமாக லாரி டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்தது. இதன் காரணமாக சாலையில் தாறுமாறாக ஓடிய லாரி அங்கு இருந்த வயலில் கவிழ்ந்தது.

இந்த விபத்தில் டிரைவர் ராஜசேகர், கிளீனர் கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் படுகாயம் அடைந்தனர். இவர்களை அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் உடனடியாக மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் தஞ்சையில் உள்ள மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு 2 பேருக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.


லாரி கவிழ்ந்த வயலில் திடக்கழிவு மேலாண்மை திட்டத்தில் உரம் தயாரிக்கும் பணி நடந்து வந்தது. லாரி கவிழ்ந்ததில் அதில் இருந்த ரூ.2 லட்சம் மதிப்புடைய பீர் பாட்டில்கள் உடைந்தன.

இதுபற்றி தகவல் கிடைத்ததும் அய்யம்பேட்டை போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று மீட்பு பணிகளை மேற்கொண்டனர். மதுபாட்டில்களை ஆட்கள் எடுத்து செல்லாத வகையில் லாரியை சுற்றி போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டிருந்தது. விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Next Story