ராமேசுவரத்தில் வற்றாத ராம தீர்த்த தெப்பக்குளம் வறண்டது
ராமேசுவரத்தில் வற்றாத ராம தீர்த்த தெப்பக்குளம் வறண்டது.மழை பெய்ய வேண்டி பூஜைகள் நடத்த பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
ராமேசுவரம்,
ராமேசுவரம் பகுதியில் ஆண்டுதோறும் வழக்கமாக அக்டோபர் முதல் டிசம்பர் மாதம் வரை மட்டுமே தொடர்ச்சியாக மழை பெய்யும். ஆனால் கடந்த 2 ஆண்டுகளாக ராமேசுவரம் பகுதியில் போதிய மழை பெய்யவில்லை. இதனால் ராமேசுவரம்,தங்கச்சிமடம்,பாம்பன் பகுதியில் உள்ள ஏராளமான வீடுகளின் கிணறுகளில் நிலத்தடி நீர் மட்டம் வெகுவாக குறைந்துவிட்டது.
அதுபோல் எப்போதும் வற்றாமல் காட்சிஅளிக்கும் ராமேசுவரம் கோவிலில் உள்ள பல தீர்த்த கிணறுகளில் நீர்மட்டம் வெகுவாக குறைந்து விட்டதுடன் சில தீர்த்த கிணறுகளில் தண்ணீர் வற்றியதுடன் மணல், பாறைகளும் தெளிவாக வெளியே தெரிந்து வருகின்றன.
இந்நிலையில் கோவிலில் உள்ள தீர்த்த கிணறுகள் தண்ணீர் வற்றி வரும் நிலையில் தற்போது ராமேசுவரம் கோவிலோடு சேர்ந்த நகர்காவல் நிலையம் அருகில் உள்ள வற்றாத ராமதீர்த்த தெப்பகுளமும் தண்ணீர் முழுமையாக வற்றிய நிலையில் வறண்டு காட்சியளிக்கிறது.
இதே போல் லெட்சுமண தீர்த்த தெப்ப குளத்திலும் தண்ணீர் குறைந்துவிட்டது. எனவே மழை பெய்ய வேண்டி ராமேசுவரம் கோவிலில் சிறப்பு யாகம் மற்றும் வருண பூஜைகளை செய்ய இந்துசமய அறநிலையத்துறை அதிகாரிகள் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.