திருப்பூரில் பனியன் வேஸ்ட் குடோனில் தீப்பற்றியதால் பரபரப்பு
திருப்பூர் தென்னம்பாளையம் பகுதியில் பனியன் வேஸ்ட் குடோனில் தீப்பற்றியதால் பரபரப்பு ஏற்பட்டது.
திருப்பூர்,
திருப்பூர் தென்னம்பாளையம் பகுதியை சேர்ந்தவர் முருகன்(வயது 40). அந்த பகுதியில் இவருக்கு சொந்தமான பனியன் வேஸ்ட் குடோன் உள்ளது. நேற்று இரவு 7 மணி அளவில் இந்த குடோனில் இருந்து கரும்புகை வெளியேறியது. இதைப்பார்த்த அப்பகுதியை சேர்ந்தவர்கள் உடனடியாக திருப்பூர் தெற்கு தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர். நிலைய அதிகாரி சண்முகம் தலைமையிலான தீயணைப்பு வீரர்கள் விரைந்து சென்று தீயணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.
குடோனில் 500 மூடைகள் பழைய பனியன் துணிகள் இருந்தன. அதில் 50–க்கும் மேற்பட்ட மூடைகள் பற்றி எரிந்தது. தீ மளமளவென எரிந்து அருகில் இருந்த செந்தில்குமார் என்பவரின் பனியன் நிறுவனத்துக்கு பரவியது. இதைத்தொடர்ந்து வடக்கு தீயணைப்பு நிலையத்தில் இருந்து மேலும் ஒரு தீயணைப்பு வாகனம் வரவழைக்கப்பட்டு தீயணைப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டது. பனியன் நிறுவனத்தில் தீ பரவாமல் தடுக்கப்பட்டது. சுமார் 2 மணி நேரம் போராடி குடோனில் பற்றிய தீ அணைக்கப்பட்டது. மின்கசிவு காரணமாக தீப்பற்றியதாக தெரிவித்தனர். சேதமதிப்பு தெரியவில்லை. இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் நேற்று இரவு திடீர் பரபரப்பு ஏற்பட்டது.