திருப்பூர், அவினாசி பகுதிகளில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல் சிறப்பு முகாம்


திருப்பூர், அவினாசி பகுதிகளில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல் சிறப்பு முகாம்
x
தினத்தந்தி 24 Sept 2018 3:30 AM IST (Updated: 24 Sept 2018 12:31 AM IST)
t-max-icont-min-icon

திருப்பூர், அவினாசி பகுதிகளில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல் சிறப்பு முகாமில் கலெக்டர் கே.எஸ்.பழனிசாமி ஆய்வு மேற்கொண்டார்.

திருப்பூர்,

01–01–2019–ம் நாளினை தகுதி ஏற்படுத்தும் நாளாக கொண்டு வாக்காளர் பட்டியலில் சிறப்பு சுருக்க முறை திருத்தம் 2019 மேற்கொள்ள இந்திய தேர்தல் ஆணையத்தால், வெளியிடப்பட்ட கால அட்டவணைப்படி 1–9–2018 அன்று, திருப்பூர் மாவட்டத்தில் உள்ள திருப்பூர் வடக்கு, திருப்பூர் தெற்கு, பல்லடம், அவினாசி, காங்கேயம், தாராபுரம், உடுமலை மற்றும் மடத்துக்குளம் ஆகிய 8 சட்டமன்ற தொகுதிகளுக்குரிய வரைவு வாக்காளர் பட்டியல்கள் வெளியிடப்பட்டது.

இதனைத்தொடர்ந்து திருப்பூர் மாவட்டத்தில் உள்ள திருப்பூர் வடக்கு, தெற்கு, பல்லடம், அவினாசி, காங்கேயம், தாராபுரம், உடுமலை மற்றும் மடத்துக்குளம் ஆகிய 8 சட்டமன்ற தொகுதிகளில் உள்ள 2482 வாக்குச்சாவடிகளை உள்ளடக்கிய 1028 வாக்குச்சாவடி மையங்களிலும், வாக்காளர் பட்டியலில் பெயர் இடம் பெறாதவர்கள், பெயர் சேர்ப்பு, வாக்காளர் பட்டியலில் திருத்தம் செய்ய விரும்புபவர்கள், பெயர் நீக்கம் செய்ய விரும்புபவர்கள் மற்றும் ஒரே தொகுதிக்குள் குடியிருப்பு மாறியவர்கள், முகவரி மாற்றம் செய்வது போன்ற கோரிக்கைகள் தொடர்பாக நடைபெறும் சிறப்பு முகாமில் பொதுமக்களிடம் இருந்து மனுக்கள் பெறப்படுகிறது.

இதனைத்தொடர்ந்து நேற்று அவினாசி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட அம்மாபாளையம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி, திருமுருகன்பூண்டி, ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி, அவினாசி பழைய பஸ் நிலையம் அருகில் அமைந்துள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி, அவினாசி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி, திருப்பூர் வடக்கு சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட 15 வேலம்பாளையம் மாநகராட்சி நடுநிலைப்பள்ளி, பெரியார் காலனி மாநகராட்சி மேல்நிலைப்பள்ளி மற்றும் திருப்பூர் தெற்கு சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பழனியம்மாள் மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளி மற்றும் கே.எஸ்.சி. அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி ஆகிய மையங்களில் நடைபெற்ற சிறப்பு முகாமினை கலெக்டர் கே.எஸ்.பழனிசாமி ஆய்வு செய்தார்.

இந்த ஆய்வின் போது வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், பெயர் நீக்கல் மற்றும் திருத்தம் செய்ய பெறப்படும் படிவங்களுடன் உரிய ஆவணங்களை இணைத்து பெற வேண்டும் எனவும், பெறப்படும் படிவங்களின் பேரில் இந்திய தேர்தல் ஆணையத்தால் தெரிவிக்கப்பட்ட வழிகாட்டுதலின்படி விசாரணை மேற்கொண்டு உரிய காலத்திற்குள் முடிவு செய்ய வேண்டும் என சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அறிவுரை வழங்கினார். இதுபோல் பல்லடம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட வாக்குச்சாவடி மையங்களில் நடைபெற்று வரும் சிறப்பு முகாமினை மாவட்ட வருவாய் அதிகாரி பிரசன்னா ராமசாமி ஆய்வு செய்தார். இந்த நிகழ்ச்சியில் தாசில்தார்கள் ஜெயக்குமார் (வடக்கு), வாணி ஜெகதாம்பாள் (அவினாசி), மாநகராட்சி உதவி ஆணையர் கண்ணன் மற்றும் தொடர்புடைய அலுவலர்கள் பலர் கலந்துகொண்டனர்.


Next Story