தமிழக கோவில்களில் சிலை திருட்டை தடுக்க பாதுகாப்பு குழு மையம்
தமிழகத்தில் கோவில்களில் சிலை திருட்டை தடுக்க பாதுகாப்பு குழு மையம் அமைக்கப்பட உள்ளது என்று அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன் கூறினார்.
அரக்கோணம்,
அரக்கோணம் அருகே பள்ளூர் கிராமத்தில் ஏரிக்கரையில் அமைந்துள்ள மகா பிரத்யங்கரா தேவி கோவிலில் 63 அடி உயரத்தில் ராஜகோபுரம் அமைக்க பூமி பூஜை மற்றும் அடிக்கல் நாட்டு விழா நடந்தது. விழாவுக்கு கோவில் நிர்வாகி எம்.கே.மணி முதலியார் தலைமை தாங்கினார். நெமிலி கிழக்கு ஒன்றிய செயலாளர் ஏ.ஜி.விஜயன், பள்ளூர் கூட்டுறவு கடன் சங்க தலைவர் ஏ.கணேசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பள்ளூர் ஊராட்சி மன்ற முன்னாள் தலைவர் கீதப்பிரியாராஜா வரவேற்றார்.
விழாவில் சிறப்பு அழைப்பாளர்களாக இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன், வேலூர் கிழக்கு மாவட்ட செயலாளரும், எம்.எல்.ஏ.வுமான சு.ரவி ஆகியோர் கலந்துகொண்டு ராஜகோபுரம் அமைப்பதற்கான அடிக்கல்லை நாட்டி வைத்தனர். அதைத் தொடர்ந்து பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
பின்னர் அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன் நிருபர்களிடம் கூறியதாவது:-
தமிழகத்தில் இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கோவில்களில் கடந்த 20 ஆண்டுகளில் எந்த சிலையும் திருட்டு போகவில்லை. அதற்கு முன்புதான் இந்து சமய அறநிலையத்துறையில் பதிவு செய்யப்படாத சில கோவில்களில் சிலைகள் திருட்டு போய் உள்ளது. அந்த சிலைகள் தற்போது மீட்கப்பட்டு வருகிறது. மீட்கப்பட்ட சிலைகள் குறித்து விசாரணை நடந்து வருகிறது.
கோவில்களில் சிலை திருட்டை தடுக்க தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகிறது. தமிழகம் முழுவதும் சிலை திருட்டை தடுக்க மாவட்டம் வாரியாக பாதுகாப்பு குழு மையங்கள் அமைக்கப்பட உள்ளது. இந்த மையங்கள் மூலம் கோவில்களில் சிலை திருட்டு தடுக்கப்படும். சிலை தடுப்பு பிரிவு அதிகாரி பொன்மாணிக்கவேலை மாற்ற தமிழக அரசு எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. சிலை கடத்தல் வழக்கு சி.பி.ஐ.க்கு மாற்றப்பட்டு உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
விழாவில் இந்து சமய அறநிலையத்துறை மாவட்ட துணை ஆணையர் அசோக்குமார், அரக்கோணம் நகர அ.தி.மு.க. செயலாளர் கே.பி.பாண்டுரங்கன், ஏரிப்பாசன சங்க தலைவர் என்.சங்கர், அ.தி.மு.க. நிர்வாகிகள், பள்ளூர் கிராம மக்கள் மற்றும் பலர் கலந்துகொண்டனர். முடிவில் பள்ளூர் எம்.ராஜா நன்றி கூறினார்.
முன்னதாக அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன் கோவிலில் அமைக்கப்பட்டு உள்ள 108 அடி உயரம் கொண்ட சாமி சிலை, தியான மண்டபம் ஆகியவற்றை பார்வையிட்டார்.
Related Tags :
Next Story