கருணாசுக்கு ஒரு நீதி, எச்.ராஜாவிற்கு ஒரு நீதி என்பது இரட்டை நிலைப்பாடு - டி.டி.வி.தினகரன் பேட்டி


கருணாசுக்கு ஒரு நீதி, எச்.ராஜாவிற்கு ஒரு நீதி என்பது இரட்டை நிலைப்பாடு - டி.டி.வி.தினகரன் பேட்டி
x
தினத்தந்தி 24 Sept 2018 5:30 AM IST (Updated: 24 Sept 2018 12:38 AM IST)
t-max-icont-min-icon

கருணாசுக்கு ஒரு நீதி, எச்.ராஜாவிற்கு ஒரு நீதி என்பது தமிழக அரசின் இரட்டை நிலைப்பாட்டை காட்டுகிறது என்று உடுமலையில் டி.டி.வி.தினகரன் எம்.எல்.ஏ. கூறினார்.

உடுமலை,

அம்மா மக்கள் முன்னேற்ற கழக துணை பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் எம்.எல்.ஏ. உடுமலையை அடுத்துள்ள பூலாங்கிணறில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:–

கருணாஸ் எம்.எல்.ஏ. உணர்ச்சி வசப்பட்டு தேவையில்லாமல் பேசியுள்ளார். அதே நேரத்தில் அவர் தனது தவறை உணர்ந்து வருத்தம் தெரிவித்துள்ளார். ஆனால் இந்த அரசு கருணாசை கைது செய்துள்ளது. அரசு என்றால் ஒரே நிலைப்பாடு இருக்க வேண்டும். எச்.ராஜா எப்படியெல்லாம் பேசி வருகின்றார். காவல்துறையை பற்றி, நீதிமன்றத்தைப்பற்றி பேசுகிறார். காவல்துறையை நேரடியாக பணி செய்யவிடாமல் பேசுகிறார். நீதிமன்றத்தை எப்படியெல்லாமோ பேசினார். அவர் மீது வழக்கு மட்டும் பதிவு செய்துவிட்டு பேசாமல் உள்ளனர்.

கருணாஸ் தவறாக பேசினார். அவர் பேசியது சரி என்று நான் சொல்லவில்லை. அவர் அதை நான் பேசினேன் என்று ஒப்புக்கொண்டு வருத்தம் தெரிவித்துள்ளார். ஆனால் எச்.ராஜா என்ன சொல்கிறார். அது என் குரலே இல்லை என்றார். கருணாஸ் சட்டப்படி வழக்கை சந்தித்து வெளியே வருவார். பொது வாழ்க்கையில் உள்ளவர்கள், மக்கள் பிரதிநிதியாக உள்ளவர்கள் வார்த்தைகளை எச்சரிக்கையாக தான் பேச வேண்டும்.

உணர்ச்சி வசப்பட்டு நாம் உபயோகிக்கும் வார்த்தை மற்றவர்களது மனதை புண்படுத்துவதாகவோ, வேதனைப்படுத்துவதாகவோ இருக்கக்கூடாது என்பது என் கருத்து. கருணாசுக்கு ஒரு நீதி எச்.ராஜாவிற்கு ஒரு நீதி என்பது தமிழக அரசின் இரட்டை நிலைப்பாட்டை காட்டுகிறது. இந்த அரசு அடிமை அரசாங்கம் என்பதை கருணாஸ் கைது செய்யப்பட்டதன் மூலமும், எச்.ராஜா சுதந்திரமாக உள்ளதையும் பார்த்தால் தெரிகிறது.

துணை முதல்–அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் இந்த ஆட்சியை ஊழல் ஆட்சி என்று சொல்லிவிட்டு, தர்மயுத்தம் நடத்துகிறேன் என்று சொன்னவர் அ.தி.மு.க.வை கைப்பற்றப்போகிறேன் என்று சொல்லிவிட்டு பிறகு சமரசம் ஆகிவிட்டார்.

பன்னீர்செல்வம் பசுத்தோல் போர்த்திய புலி என்பது தமிழ்நாட்டு மக்களுக்கு தெரிந்துவிட்டது. வால்ட்டர் வெற்றிவேல் என்ற படத்தில் சத்யராஜின் தம்பியாக வருபவர் ஓ.பன்னீர்செல்வம் போன்று அமைதியாக இருப்பார். கடைசியில் பார்த்தால் வில்லனே தம்பிதான். அதுபோன்று இருப்பவர்தான் ஓ.பன்னீர்செல்வம். அவர் என்னைப்பற்றி சொல்கிறார். அடுத்த ஏப்ரல், மே மாதத்திற்கு பிறகு ஓ.பன்னீர்செல்வம் என்ன பதில் சொல்கிறார் என்று பார்ப்போம்.

நாகர்கோவிலில் முதல்–அமைச்சர் எடப்பாடி பழனிசாமி புத்தரைப்பற்றி பேசியுள்ளார். புத்தர் பெரிய மகான். அவரைப்பற்றி பேச இவருக்கு தகுதி உள்ளதா?. புத்தர் அரச பதவியை துறந்து விட்டு துறவியானார். இவர் பதவிக்காக தன்னை பதவியில் அமர்த்தியவருக்கே துரோகம் செய்தவர். இது தமிழ்நாட்டு மக்களுக்கு நன்கு தெரியும்.

18 எம்.எல்.ஏ.க்கள் சுதந்திரமாக உள்ளனர். 18 பேர் அல்ல 21 பேர், என்னையும் சேர்த்து 22 பேர் உள்ளனர். 18 எம்.எல்.ஏ.க்களும் முதல்–அமைச்சரை மாற்ற வேண்டும் என்ற கோரிக்கையைத்தான் கவர்னரிடத்தில் வைத்தனர். ஓ.பன்னீர்செல்வமே இந்த அரசு மீது ஊழல் குற்றச்சாட்டு சுமத்தினார். ஊழல் என்று சொல்லிவிட்டு பிறகு இணைந்து கொண்டார். எம்.எல்.ஏ.க்கள், அமைச்சர்கள், நிர்வாகிகள் ஆகியோர் மட்டும் இணைந்துகொண்டால் இது இணைப்பா?.

1½ கோடி தொண்டர்களில் 90 சதவீதம் தொண்டர்கள் இப்போது யாரிடம் உள்ளார்கள். அம்மாவின் தொண்டர்கள் 90 சதவீதம் பேர் எங்கள் இயக்கத்தின் பக்கம் உள்ளனர். புரட்சித்தலைவர் வகுத்த சட்டதிட்ட விதிப்படி கட்சியின் உறுப்பினர்கள் தான் பொதுச்செயலாளரை தேர்ந்தெடுக்க வேண்டும். அப்படிப்பட்ட இயக்கத்தில் பதவிக்காக சுயலாபத்திற்காக இணைந்து கொண்டால் இது இணைப்பா?. 21 எம்.எல்.ஏ.க்களும் சுதந்திரமாக உள்ளனர். அவர்கள் அ.தி.மு.க. உறுப்பினர்கள் தான். நிச்சயம் ஓட்டெடுப்பில் முதல்–அமைச்சரை மாற்றுவார்கள்.

எச்.ராஜா தெரிவித்த கருத்தில் ஒரு வி‌ஷயத்தில் எனக்கு உடன்பாடு உள்ளது. அவர் காவல்துறையின் கல்லீரல் அழுகி விட்டது என்று கூறியதில் எனக்கு உடன்பாடு உள்ளது. காவல்துறையில் எத்தனையோ அதிகாரிகள் உள்ளனர். குறிப்பிட்ட சிலர் குறுகிய வட்டாரத்தில் உள்ளனர். 33 அமைச்சர்களும் அமைச்சர்களாக தொடர வேண்டும் என்பதற்காக ஆட்சி நடக்கிறது.

மக்களுக்காக ஆட்சி நடக்கவில்லை. மக்கள் சந்திப்பு மூலம் மக்கள் விரோத ஆட்சியை முடிவுக்கு கொண்டு வருவோம். நாங்கள் திருப்பரங்குன்றம், திருவாரூர் இடைத்தேர்தல்களில் வெற்றிபெறுவோம். 2019– ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் 40 தொகுதிகளிலும் வெற்றி பெறவேண்டும் என்பது இலக்கு. 37 தொகுதிகளில் வெற்றி நிச்சயம்.

18 எம்.எல்.ஏ.க்கள் குறித்த வழக்கில் விரைவில் நீதி கிடைக்கும். நல்ல தீர்ப்பை எதிர்பார்த்துக்கொண்டுள்ளோம். தமிழ்நாட்டில் தேசிய கட்சிகள் பொறுப்பிற்கு வரமுடியும் என்பது பகல் கனவாகத்தான் முடியும்.

இவ்வாறு டி.டி.வி.தினகரன் எம்.எல்.ஏ. கூறினார்.


Next Story