“தனிக்கட்சி தொடங்கும் எண்ணம் இல்லை” திருவாரூர் தொகுதியில் போட்டியிட்டால் வெற்றி பெறுவேன் மு.க. அழகிரி பேச்சு


“தனிக்கட்சி தொடங்கும் எண்ணம் இல்லை” திருவாரூர் தொகுதியில் போட்டியிட்டால் வெற்றி பெறுவேன் மு.க. அழகிரி பேச்சு
x
தினத்தந்தி 23 Sep 2018 11:15 PM GMT (Updated: 23 Sep 2018 8:04 PM GMT)

தனிக்கட்சி தொடங்கும் எண்ணம் இல்லை என்றும், திருவாரூர் தொகுதியில் போட்டியிட்டால் வெற்றி பெறுவேன் என்று, திருவாரூரில் மு.க. அழகிரி கூறினார்.

திருவாரூர்,

திருவாரூரில் நேற்று நடந்த கருணாநிதி புகழஞ்சலி கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக திருவாரூர் வந்த மு.க.அழகிரி, திருவாரூர் அருகே காட்டூரில் உள்ள தனது பாட்டி அஞ்சுகத்தம்மாளின் நினைவிடத்துக்கு சென்று மலர் தூவி அஞ்சலி செலுத்தினார். அப்போது அவருடைய மகன் துரைதயாநிதி உடன் இருந்தார். பின்னர் அங்கிருந்து புறப்பட்ட அழகிரி, திருவாரூர் செல்லும் வழியில் பெண்கள் கூட்டத்தை கண்டு காரை நிறுத்தி, அவர்களிடம் நலம் விசாரித்தார்.

இதையடுத்து திருவாரூர் பஸ் நிலையத்தில் உள்ள பெரியார் சிலை, நேதாஜி சாலையில் உள்ள அண்ணா சிலை ஆகியவற்றுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இதைத்தொடர்ந்து திருவாரூர் தெற்குவீதியில் உள்ள திருமண மண்டபத்தில் நடந்த கருணாநிதி புகழ ஞ்சலி கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் மு.க.அழகிரி கலந்து கொண்டு, கருணாநிதியின் உருவப்படத்துக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தி பேசினார்.

அப்போது அவர் கூறியதாவது:-

மேடையில் பேசி 4 ஆண்டுகள் ஆகிவிட்டன. இருந்தாலும் எனது பிறந்த ஊருக்கு வந்துள்ளதால் பேசாமல் செல்ல முடியாது என்பதால் பேசுகிறேன். 1951-ம் ஆண்டு ஜனவரி 30-ந் தேதி இதே ஊரில் தெற்குவீதியில் பிறந்தேன்.

எனக்கு அழகிரி என பெயர் வைத்தது பெரியார். அதேபோல் எனக்கு திருமணத்தை நடத்தி வைத்ததும் பெரியார் தான். எனது தந்தை மேடையில் பேசும்போது எனது மகனுக்கு சாதி மறுப்பு திருமணம் செய்து வைப்பேன் என்றார். சொன்னதை செய்ய கூடியவர் தலைவர் கருணாநிதி. அவருடைய வழியில் நானும் கலப்பு திருமணம் செய்து கொண்டேன்.

தலைவர்(கருணாநிதி) இல்லாமல் நான் மட்டும் தனியாக திருவாரூர் வருவது வேதனையாக உள்ளது. திருவாரூருக்கு கடந்த 2011-ம் ஆண்டு தேர்தல் நேரத்தில் தலைவருடன் சேர்ந்து வந்தது தான் நான் இங்கு கலந்து கொண்ட கடைசி நிகழ்ச்சி. அதன்பிறகு 2014-ம் ஆண்டு கட்சியில் இருந்து நீக்கப்பட்ட பிறகு அவரை சந்திக்கும் வாய்ப்பை இழந்து விட்டேன்.

என்னை மதுரைக்கு வந்து பார்த்தவர்கள் திருவாரூர் தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிட வேண்டும் என வற்புறுத்தினார்கள். சிலர் அன்பு கட்டளையிட்டார்கள். தேர்தல் வந்தால் பார்த்து கொள்ளலாம்.

திருவாரூர் தொகுதி இடைத்தேர்தலில் நான் போட்டியிட்டால் வாக்கு கேட்கிறேனோ இல்லையோ, எனக்கு இழைக்கப்பட்ட அநீதியை மக்களிடத்தில் கேட்பேன். அதற்காக தேர்தலில் நிற்கப்போகிறேன் என்று நினைக்க வேண்டாம்.

தேர்தல் வரட்டும் பார்த்து கொள்வோம். வரும் வழியில் மக்களின் ஆதரவை பார்க்கும்போது தேர்தலில் நின்றால் நிச்சயம் வெற்றி பெறுவேன் என அனைவரும் தெரிவித்தனர். திருவாரூர் தொகுதியில் நான்(மு.க.அழகிரி) போட்டியிட்டால் தேர்தல் ஆணையம் நிர்ணயித்துள்ள செலவு தொகையை கூட செலவு செய்யாமல் எளிதாக வெற்றி பெறுவேன்.

இந்த கூட்டத்தில் மத்திய, மாநில அரசுகளுக்கு ஒரு வேண்டுகோள் வைக்கிறேன். திருவாரூர் பஸ் நிலையம், கீழ்வேளூர் விவசாய கல்லூரி, திருவாரூர் மத்திய பல்கலைக்கழகம் ஆகியவற்றுக்கு கருணாநிதி பெயர் சூட்ட வேண்டும். தமிழக அரசு இதுவரை கேட்டது எதையும் செய்ததில்லை. இதையாவது செய்ய வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

கூட்டத்தை தொடர்ந்து மு.க.அழகிரி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

தனி கட்சி தொடங்கும் எண்ணமில்லை. கருணாநிதியின் வழியை பின்பற்றி எதிர் காலத்தில் நடப்போம். ரஜினி, பா.ஜனதா மற்றும் என்னை இணைத்து வரும் அரசியல் தொடர்பான செய்திகள் அனைத்தும் வதந்திகள் ஆகும்.

திருவாரூர் தொகுதியில் எனது விசுவாசிகள் போட்டியிட சொன்னால் போட்டியிடுவேன். ஸ்டாலினை நான் தலைவராக ஏற்றக்கொள்ள தயார் என்று பலமுறை கூறிவிட்டேன். அவர்களிடத்தில் இருந்துதான் எந்த பதிலும் இல்லை.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story