காவிரி ஆற்று உபரிநீரை ஏரிகளுக்கு கொண்டு வர ரூ.350 கோடியில் புதிய திட்டம் அமைச்சர் பேட்டி


காவிரி ஆற்று உபரிநீரை ஏரிகளுக்கு கொண்டு வர ரூ.350 கோடியில் புதிய திட்டம் அமைச்சர் பேட்டி
x
தினத்தந்தி 24 Sept 2018 4:30 AM IST (Updated: 24 Sept 2018 2:14 AM IST)
t-max-icont-min-icon

காவிரி ஆற்று உபரிநீரை தர்மபுரி மாவட்ட ஏரிகளுக்கு கொண்டுவர ரூ.350 கோடி மதிப்பில் புதிய திட்டத்தை செயல்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்று அமைச்சர் கே.பி.அன்பழகன் தெரிவித்தார்.

தர்மபுரி,

தமிழக உயர்கல்வித்துறை அமைச்சரும், தர்மபுரி மாவட்ட அ.தி.மு.க. செயலாளருமான கே.பி.அன்பழகன் தர்மபுரியில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

தமிழக அரசின் சார்பில் தர்மபுரி மாவட்டத்தில் நிலவும் குடிநீர் பிரச்சினையை தீர்க்க போர்கால நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. 900 அடி ஆழத்தில் ஆழ்துளை குழாய் அமைத்தாலும் போதிய தண்ணீர் கிடைப்பதில்லை. வெள்ளப்பெருக்கு காலங்களில் ஒகேனக்கல் காவிரியாற்றில் வினாடிக்கு சுமார் 2 லட்சம் கனஅடி தண்ணீர் வரும்போது அந்த தண்ணீரை தர்மபுரி மாவட்டத்தில் உள்ள ஏரிகளுக்கு கொண்டுசென்று பாசனத்திற்கு பயன்படுத்தும் வகையில் புதிய நீர்பாசன திட்டத்தை அரசு செயல்படுத்த ஆய்வு பணி மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதற்காக ஓய்வு பெற்ற பொறியாளர்களை கொண்டு ஆய்வு பணிகள் நடைபெற்று முடிந்துள்ளது. இந்த திட்டத்தை செயல்படுத்த தோராய மதிப்பீடாக ரூ.350 கோடி செலவிட உத்தேசிக்கப்பட்டுள்ளது. ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து அதிகரிக்கும் காலங்களில் பென்னாகரம் அருகே உள்ள மடம் கிராமத்தில் அமைந்துள்ள கென்டையன் குட்டை ஏரிக்கு தண்ணீர் ஏற்றப்பட்டு, அங்கிருந்து தர்மபுரி மாவட்டத்தில் மற்ற ஏரிகளுக்கு கொண்டு செல்லப்படும். கடல் மட்டத்திலிருந்து இந்த கென்டையன் குட்டை ஏரி 526 மீட்டர் உயரத்தில் உள்ளது.

எனவே ஒகேனக்கல் காவிரி ஆற்றிலிருந்து எந்திரங்கள் மூலம் நீரேற்றும் முறையில் கென்டைன் குட்டை ஏரிக்கு தண்ணீர் கொண்டுவந்துவிட்டால், மாவட்டத்தில் உள்ள மற்ற ஏரிகளுக்கு எளிதாக தண்ணீர் வழங்க முடியும். சென்னையில் நடந்த கலெக்டர்கள் கூட்டத்தில் இந்த திட்டத்தை உடனடியாக செயல்படுத்தப்பட வேண்டும் என நானும், கலெக்டரும் முதல்-அமைச்சரிடம் வலியுறுத்தினோம்.

இந்த திட்டத்தை செயல்படுத்த வலியுறுத்தி அன்புமணி ராமதாஸ் எம்.பி. ஒரு கையெழுத்து இயக்கத்தை தொடங்கியுள்ளார். இந்த நிகழ்வு மக்களை ஏமாற்றும் செயல். தமிழக அரசு எந்த ஒரு திட்டத்தை சிறப்பாக செயல்படுத்தினாலும் அதற்கு முன்பே அதை அறித்து கொண்டு இவ்வாறு அன்புமணி ராமதாஸ் செயல்படுவதை விடுத்து, பாராளுமன்றத்தில் தர்மபுரி மாவட்டம் தொடர்பான பிரச்சினைகளை வலியுறுத்த வேண்டும். மேலும் தர்மபுரி-மொரப்பூர் ரெயில் பாதை இணைப்பு திட்டத்தை செயல்படுத்த முனைப்பு காட்ட வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

அப்போது தர்மபுரி மாவட்ட கலெக்டர் மலர்விழி, முன்னாள் மாவட்ட ஊராட்சிக்குழு தலைவர் டி.ஆர்.அன்பழகன், முன்னாள் நகராட்சி தலைவர் எஸ்.ஆர்.வெற்றிவேல் மற்றும் பலர் உடனிருந்தனர்.

Next Story