5 ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த பாறை ஓவியம் கண்டுபிடிப்பு


5 ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த பாறை ஓவியம் கண்டுபிடிப்பு
x
தினத்தந்தி 23 Sep 2018 11:00 PM GMT (Updated: 23 Sep 2018 8:53 PM GMT)

சிந்தகம்பள்ளி அருகே 5 ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த பாறை ஓவியம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

பர்கூர்,

கிருஷ்ணகிரி மாவட்டம் சிந்தகம்பள்ளி அருகில் மூலக்கொல்லை என்ற இடத்தில், பாறையில் செதுக்கப்பட்ட கருப்பை, கருமுட்டை, உருவ செதுக்குகள் இணைந்த பாறை ஓவியம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. பழமை வாய்ந்த அரிய வகையிலான இவை ஆரோக்கியமான குழந்தைபேறுக்காக சாமியாடிகளால் நடத்தப்படும் சடங்கு முறையினை காட்டுவதாகும். இந்த பாறை ஓவியம் குறித்து தொல்லியல் ஆர்வலர் தர்மபுரியை சேர்ந்த பார்த்திபன் கூறியதாவது:- இந்த ஓவியம், 5 ஆயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்டதாகும். இதன் கருப்பொருள் மற்றும் காட்சிகளின் தன்மையை கொண்டு பார்க்கும்போது புதிய கற்கால பண்பாட்டின் படைப்பாக உள்ளது. பொதுவாக தனித்தனியாக கிடைக்கும் பாறை ஓவியங்களும், பாறைக்கீறள் செதுக்குகளும் அரிதாக இணைந்து வெளிப்பட்டுள்ளன. பாறை செதுக்கையும், ஓவியத்தையும் இணைந்து உருவாக்கப்பட்ட அரியதொரு படைப்பாகும்.

குழந்தை பிறப்பு பற்றிய புதிர் புலப்படாத நிலையில், தொல்பழங்கால மக்கள் பல குழப்பங்களை அடைந்தனர். பின்னர் அவற்றை அறிந்து கொண்டனர். இதையே மூலக்கொல் லை படைப்பு தெரிவிக்கிறது. மனிதர்களுக்கு உண்டாகும் நோய், குறைகள் அனைத்தும் கெட்ட ஆவிகளால் உருவாகின்றன என்ற நம்பிக்கை பழைய கற்காலத்திலிருந்தே காண முடிகிறது. நன்மையும், தீமையும் ஆவிகளாலேயே நடக்கின்றன என்றும், அவற்றை குணமாக்க உருவாக்கப்பட்டவர்கள்தான் சாமியாடிகள். நவீன அறிவியல் வளர்ச்சிக்கு முன்னர் இந்த சாமியாடிகளே நோய்களை குணமாக்கும் மருத்துவர்கள், மருந்துகளை செய்யும் விஞ்ஞானிகள். கால ஓட்டத்தில் இவர்கள் சமூகத்தை வழிநடத்தும் தலைவர்களாகவும் விளங்கினார்கள். மூலக்கொல்லை பாறைக்கலை, குழந்தை வரம் அல்லது சந்ததி பெருக்கத்தை தரும் வழிபாட்டை நிகழ்த்துவதற்காக சாமியாடிகள் உருவாக்கியது ஆகும். இவ்வாறு அவர் கூறினார்.

Next Story