குள்ளஞ்சாவடி அருகே: லாரி மோதி விவசாயி பலி


குள்ளஞ்சாவடி அருகே: லாரி மோதி விவசாயி பலி
x
தினத்தந்தி 24 Sept 2018 3:30 AM IST (Updated: 24 Sept 2018 4:22 AM IST)
t-max-icont-min-icon

குள்ளஞ்சாவடி அருகே லாரி மோதி விவசாயி பலியானார். கிராம மக்கள் மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

குறிஞ்சிப்பாடி, 


குள்ளஞ்சாவடி அருகே உள்ள சுப்பிரமணியபுரம் கிராமத்தை சேர்ந்தவர் அங்கமுத்து மகன் செல்வம்(வயது 35). விவசாயி. இவர் நேற்று மாலை 4.15 மணி அளவில் சுப்பிரமணியபுரத்தில் உள்ள கடலூர்-விருத்தாசலம் சாலையை கடக்க முயன்றார். அப்போது கடலூர் முதுநகரில் இருந்து மீன் ஏற்றி வந்த லாரி, அவர் மீது மோதியது. இதில் அவர் சம்பவ இடத்திலேயே பலியானார்.

இது பற்றி அறிந்ததும் செல்வத்தின் உறவினர்கள் மற்றும் சுப்பிரமணியபுரம் கிராம மக்கள் ஒன்று திரண்டு, விபத்து நடந்த இடத்துக்கு வந்தனர். அங்கு 4.30 மணி அளவில் அவர்கள் திடீரென கடலூர்-விருத்தாசலம் சாலையில் மறியலில் ஈடுபட்டனர். இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. சாலையின் இருபுறமும் நூற்றுக்கணக்கான வாகனங்கள் அணிவகுத்து நின்றன.

இந்த விபத்து பற்றி தகவல் அறிந்ததும் குள்ளஞ்சாவடி போலீசார் விரைந்து வந்து, மறியலில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது கிராம மக்கள், சுப்பிரமணியபுரத்தில் டாஸ்மாக் கடை இருப்பதால் அடிக்கடி விபத்து நடப்பதாகவும், குடிபிரியர்களின் தொல்லை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாகவும் கூறினர். மேலும் இந்த டாஸ்மாக் கடையை உடனடியாக அகற்ற வேண்டும் என்றனர். அதற்கு போலீசார் இது தொடர்பாக உயர் அதிகாரிகளிடம் தெரிவித்து நடவடிக்கை எடுக்கப்படும் என்றனர். இதையடுத்து மறியலை கைவிட்டு அனைவரும் கலைந்து சென்றனர். தொடர்ந்து வாகன போக்குவரத்தை சரிசெய்தனர்.

இதையடுத்து செல்வத்தின் உடலை கைப்பற்றிய போலீசார், பிரேத பரிசோதனைக்காக கடலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்த புகாரின் பேரில் குள்ளஞ்சாவடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. 

Next Story