தலைவாசலில் 2 கடைகளில் பணம்-பொருட்கள் திருட்டு


தலைவாசலில் 2 கடைகளில் பணம்-பொருட்கள் திருட்டு
x
தினத்தந்தி 24 Sept 2018 3:30 AM IST (Updated: 24 Sept 2018 5:19 AM IST)
t-max-icont-min-icon

தலைவாசலில் 2 கடைகளில் பணம்-பொருட்கள் திருட்டு போனது. இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தலைவாசல்,

தலைவாசலை அடுத்த ஆறகளுர் பகுதியை சேர்ந்தவர் கணேசன். இவர் அந்த பகுதியில் மளிகை கடை வைத்து உள்ளார். நேற்று முன்தினம் இரவு வியாபாரத்தை முடித்துக்கொண்டு கடையை பூட்டி விட்டு சென்றார். பின்னர் நேற்று காலை வந்து பார்த்த போது கடையின் பூட்டு உடைக்கப்பட்டு கிடப்பது கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

பின்னர் கடைக்குள் சென்று பார்த்தார். அப்போது அங்கிருந்த பெட்டி உடைக்கப்பட்டு அதில் இருந்த ரூ.30 ஆயிரம், விற்பனைக்கு வைக்கப்பட்டு இருந்த ரூ.20 ஆயிரம் மதிப்பிலான சிகரெட் பாக்கெட்டுகள் திருட்டு போய் இருப்பது தெரிந்தது.

அதே போன்று அருகில் காமராஜ் என்பவரது கடை உடைக்கப்பட்டு அங்கிருந்து ரூ.20 ஆயிரம் மதிப்பிலான மடிக்கணினி மற்றும் அவரது மகளின் பிளஸ்-2 மதிப்பெண் சான்றிதழ் ஆகியவை திருட்டு போய் இருப்பது தெரிந்தது. மேலும் அருகில் உள்ள தர்மலிங்கம் என்பவரது பெயிண்டு கடை உடைக்கப்பட்டு இருந்தது. ஆனால் பணம் எதுவும் திருட்டு போகவில்லை.

இது குறித்து 3 பேரும் தலைவாசல் போலீசில் புகார் கொடுத்தனர். அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். அப்போது கடையை உடைக்க பயன்படுத்திய 3 கடப்பாரைகள் கடையின் பின்னால் உள்ள ஒரு கிணற்றின் அருகில் இருந்து போலீசார் கைப்பற்றினர். பின்னர் இது குறித்து வழக்குப்பதிவு செய்து திருடர்களை தேடி வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

Next Story