கையகப்படுத்தப்பட்ட நிலத்திற்கு இழப்பீடு வழங்காததால் ஆதிதிராவிட நலத்துறை அலுவலக கட்டிடம் ஜப்தி
கையகப்படுத்தப்பட்ட நிலத்திற்கு இழப்பீடு வழங்காததால் பொள்ளாச்சி ஆதிதிராவிட நலத்துறை அலுவலக கட்டிடம் ஜப்தி செய்யப்பட்டது.
பொள்ளாச்சி,
பொள்ளாச்சி தாலுகா நெகமம் அருகே கள்ளிப்பட்டியை சேர்ந்தவர் சேதுபதி. இவருக்கு சொந்தமான 2 ஏக்கர் நிலம் கடந்த 1999–ம் ஆண்டு ஆதிதிராவிட நலத்துறை சார்பில் வீடுகள் கட்டுவதற்கு கையகப்படுத்தப்பட்டது. கையகப்படுத்தப்பட்ட நிலத்திற்கு இழப்பீட்டு தொகையாக ஆதிதிராவிட நலத்துறை சார்பில் ரூ.57 ஆயிரத்து 500 கொடுக்கப்பட்டது. இதையடுத்து கூடுதலாக இழப்பீடு கேட்டு பொள்ளாச்சி சப்–கோர்ட்டில் கடந்த 2000–ம் ஆண்டு சேதுபதி வழக்கு தொடர்ந்தார்.
வழக்கை விசாரித்த நீதிபதி ரூ.2 லட்சத்து 87 ஆயிரத்து 500–ஐ இழப்பீட்டு தொகையாக ஓராண்டுக்குள் வழங்க வேண்டும். இல்லையெனில் 15 சதவீத வட்டி சேர்த்து செலுத்த வேண்டும் என்று கடந்த 2003–ம் ஆண்டு உத்தரவிட்டார். இதையடுத்து ஆதிதிராவிட நலத்துறை சார்பில் 2004–ம் ஆண்டு சென்னை ஐகோர்ட்டில் மேல் முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது.
மனு மீது விசாரணை நடத்திய நீதிபதி, கீழ் கோர்ட்டின் தீர்ப்பை உறுதி செய்து உத்தரவிட்டார். ஆனால் அதன்பிறகும் சேதுபதிக்கு ஆதிதிராவிட நலத்துறை இழப்பீட்டு தொகை வழங்கவில்லை. இதையடுத்து பொள்ளாச்சி சப்–கோர்ட்டில் சேதுபதி இழப்பீட்டு தொகை கேட்டு நிறைவேற்ற மனு தாக்கல் செய்தார். இந்த மனுவை விசாரித்த நீதிபதி ரவி, இழப்பீடு தொகை வழங்காததால் பொள்ளாச்சி சப்–கலெக்டர் வளாகத்தில் செயல்பட்டு வரும் ஆதிதிராவிட நலத்துறை கட்டிடத்தை ஜப்தி செய்ய உத்தரவிட்டார். இதற்கான உத்தரவு நகல் அலுவலக கட்டிடத்தில் ஒட்டப்பட்டது. மனுதாரர் தரப்பில் வக்கீல் ஆறுச்சாமி ஆஜராகி வாதாடினார்.
இதுகுறித்து ஆதிதிராவிட நலத்துறை அதிகாரிகள் கூறியதாவது:– கையகப்படுத்தப்பட்ட நிலத்திற்கு இழப்பீட்டு தொகையாக அரசு உத்தரவுப்படி 2 தவணையாக ரூ.4 லட்சத்து 17 ஆயிரம் செலுத்தப்பட்டு உள்ளது. தற்போது அவர்கள் கூடுதலாக கேட்டு கோர்ட்டில் வழக்கு தொடர்ந்து உள்ளனர். ஜப்தி நோட்டீசு ஒட்டப்பட்டு உள்ளது குறித்து உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.