மீன்கரை ரோட்டில் புதிதாக திறக்கப்பட்ட மதுக்கடையை மூடக்கோரி சப்–கலெக்டர் அலுவலகம் முற்றுகை


மீன்கரை ரோட்டில் புதிதாக திறக்கப்பட்ட மதுக்கடையை மூடக்கோரி சப்–கலெக்டர் அலுவலகம் முற்றுகை
x
தினத்தந்தி 25 Sept 2018 4:15 AM IST (Updated: 24 Sept 2018 8:10 PM IST)
t-max-icont-min-icon

மீன்கரை ரோட்டில் புதிதாக திறக்கப்பட்ட மதுக்கடையை மூடக்கோரி சப்–கலெக்டர் அலுவலகத்தை ரெயில்வே தொழிலாளர்கள் மற்றும் பக்தர்கள் முற்றுகையிட்டனர்.

பொள்ளாச்சி,

பொள்ளாச்சி சப்–கலெக்டர் அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நேற்று நடைபெற்றது. கூட்டத்திற்கு சப்–கலெக்டரின் நேர்முக உதவியாளர் சியாமளா தலைமை தாங்கி, பொதுமக்களிடம் இருந்து மனுக்களை வாங்கினார். அப்போது ரெயில்வே காலனி குடியிருப்பு தொழிலாளர்கள் மற்றும் நாக கன்னியம்மன் பக்தர்கள் சேவைக்குழுவினர் மீன்கரை ரோட்டில் புதிதாக திறக்கப்பட்ட மதுக்கடையை மூடக்கோரி சப்–கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர். பின்னர் சப்–கலெக்டரின் நேர்முக உதவியாளர் சியாமளாவிடம் மனு கொடுத்தனர். அந்த மனுவில் அவர்கள் கூறியிருப்பதாவது:–

பொள்ளாச்சி மீன்கரை ரோட்டில் ரெயில்வே காலனியில் 30 குடும்பங்களை சேர்ந்தவர்கள் வசித்து வருகிறார்கள். மேலும் இங்கு வசிப்பவர்கள் தென்னக ரெயில்வேயில் பணிபுரிந்து வருகின்றனர். தற்போது எங்கள் காலனி நுழைவு பகுதியில் புதிதாக மதுக்கடை திறக்கப்பட்டு உள்ளது.

இதன் காரணமாக எங்களது வாழ்வாதாரம் பாதிக்கப்படும். மேலும் பெண்கள் மற்றும் பள்ளி, கல்லூரிக்கு செல்லும் மாணவிகளுக்கு பாதுகாப்பு இல்லாத சூழ்நிலை ஏற்படும் அபாயம் ஏற்பட்டு உள்ளது. மேலும் ரெயில்வே ஆஸ்பத்திரிக்கு ஆம்புலன்ஸ் வருவதற்கு இடையூறாக இருக்கும். மேலும் இந்த பகுதியில் உள்ள நாககன்னியம்மன் கோவிலுக்கு செல்லும் நுழைவு பகுதியில் கடை அமைந்து உள்ளது. இதனால் கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு இடையூறு ஏற்படும். எனவே புதிதாக திறக்கப்பட்ட மதுக்கடையை மூடுவதற்கு தாங்கள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

பொள்ளாச்சி அருகே உள்ள ராசக்காபாளையத்தை சேர்ந்த பொதுமக்கள் கொடுத்த மனுவில் கூறியிருப்பதாவது:– பொள்ளாச்சி வடக்கு ஒன்றியத்திற்குட்பட்ட ராசக்காபாளையத்தில் துணை ஆரம்ப சுகாதார நிலையம் செயல்பட்டு வருகிறது. இங்கு பிரசவம் பார்க்கப்படுகிறது. இதுதவிர தடுப்பு ஊசிகள் போடப்படுகிறது. ஆனால் கட்டிடம் மிகவும் பழுதடைந்து உள்ளதால் நோயாளிகள் அவதி அடைந்து வருகிறார்கள்.

இதற்கிடையில் ராசக்காபாளையத்தில் கட்டப்பட்டு உள்ள சமுதாய கூடம் பயன்படுத்தப்படாமல் பூட்டியே கிடக்கிறது. எனவே துணை ஆரம்ப சுகாதார நிலையத்தை சமுதாய கூடத்திற்கு இடமாற்ற வேண்டும். இதுகுறித்து ஒன்றிய அதிகாரிகளுக்கு மனு கொடுத்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே இடிந்து விழுந்து உயிர்சேதம் ஏற்படும் முன் துணை ஆரம்ப சுகாதார நிலையத்தை வேறு கட்டிடத்திற்கு இடமாற்றம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.


Next Story