பணிப்பலன்கள் வழங்கக்கோரி சுமைதூக்கும் தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்
பணிப்பலன்களை விரைவாக வழங்கக் கோரி தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக்கழக சுமைதூக்கும் தொழிலாளர்கள் நேற்று காலை ஆர்ப்பாட்டம் செய்தனர்.
மதுரை,
தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக்கழக சுமைதூக்கும் தொழிலாளர்கள் பணி ஓய்வு பெற்று 2 ஆண்டுகள் ஆகியும் பணிப்பலன்கள் எதுவும் இதுவரை வழங்கப்படவில்லை என்றும், எனவே உரிய பணிப்பலன்களை விரைவாக வழங்க கோரியும் மதுரை மண்டல அனைத்து கிட்டங்களில் உள்ள சுமைதூக்கும் தொழிலாளர்கள் ஜெய்ஹிந்த்புரம் வெங்கடாஜலபுரத்தில் உள்ள கிட்டங்கி முன்பு கூடி நேற்று காலை ஆர்ப்பாட்டம் செய்தனர். இதில் சுமைதூக்குவோரின் மாநில பாதுகாப்பு சங்கத்தின் மாநில துணை செயலாளர் தெய்வேந்திரன் முன்னிலை வகித்தார். மாவட்ட தலைவர் பாண்டி, செயலாளர் சுந்தரபாண்டி ஆகியோர் வரவேற்று பேசினார்கள்.
தென் மாவட்ட செயலாளர் முனியாண்டி தலைமை தாங்கி பேசினார். அவர் கூறும்போது, சுமைதூக்கும் தொழிலாளர்கள் பணி ஓய்வு பெற்று 2 ஆண்டுகள் ஆகியும் அவர்களுக்கு எந்தவித பணிப்பலன்களும் வழங்கப்படவில்லை. அவர்கள் மிகக்குறைந்த பட்ச கூலிக்கு பணியாற்றி ஓய்வு பெற்றவர்கள். எனவே நிர்வாகம் அதனை கால தாமதம் செய்யாமல் உடனே வழங்க வேண்டும். மேலும் இங்கு ஆட்கள் பற்றாக்குறையாக இருப்பதால் கூடுதல் சுமைகளை நிர்வாகம் எங்கள் மீது ஏற்றுகிறது. எனவே புதிதாக ஆட்களை நியமிக்க வேண்டும். மேலும் மத்திய அரசு கிட்டங்களில் வழங்கும் கூலி போன்று மாநில அரசு கிட்டங்களிலும் கூலியை அதிகாரித்து தர வேண்டும். இந்த கோரிக்கைகளை நிறைவேற்றாவிட்டால் வருகிற 1–ந்தேதி மாநில தழுவிய போராட்டம் நடத்த உள்ளோம். அதற்கும் அரசு செவிசாய்க்கவில்லை என்றால் அடுத்த மாதம் 24–ந் தேதி முதல் தொடர் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட இருக்கிறோம் என்றார்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் மதுரை மாவட்டத்தில் உள்ள 10 கிட்டங்களில் பணியாற்றும் 450 சுமைதூக்கும் தொழிலாளர்கள் கலந்து கொண்டனர்.