அந்தியூர் அருகே வாகனம் மோதி பிளஸ்–1 மாணவர் பரிதாப சாவு
அந்தியூர் அருகே வாகனம் மோதி பிளஸ்–1 மாணவர் பரிதாபமாக இறந்தார்.
அந்தியூர்,
அந்தியூர் அருகே உள்ள செம்புளிச்சாம்பாளையம் காந்திபுரம் காலனியை சேர்ந்தவர் மாதப்பன். அவருடைய மகன் தினேஷ்குமார் (வயது 16). செம்புளிச்சாம்பாளையம் அரசு மேல்நிலை பள்ளிக்கூடத்தில் பிளஸ்–1 படித்து வந்தார்.
இந்தநிலையில் நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமை விடுமுறை என்பதால், அதிகாலை 5½ மணி அளவில் விளையாட்டு பயிற்சிக்காக தினேஷ்குமார் பள்ளி மைதானத்துக்கு நடந்து சென்றுகொண்டு இருந்தார். அப்போது அங்குள்ள மெயின்ரோட்டை கடந்தபோது அந்த வழியாக வந்த ஒரு வாகனம் தினேஷ்குமார் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்றுவிட்டது. இதில் படுகாயம் அடைந்த தினேஷ்குமார் உயிருக்கு போராடினார்.
சத்தம் கேட்டு ஓடிவந்த அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு ஆம்புலன்சில் சிகிச்சைக்காக அந்தியூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தார்கள். அங்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பலன் இல்லாமல் நேற்று அதிகாலை தினேஷ்குமார் பரிதாபமாக இறந்துவிட்டார்.
இதுகுறித்து அந்தியூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து, தினேஷ்குமார் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்ற வாகனம் எது? என்று வலைவீசி தேடி வருகிறார்கள்.
மாதப்பனுக்கு தினேஷ்குமார் ஒரே மகனாவார். ஆஸ்பத்திரியில் வைத்திருந்த மகனின் உடலை பார்த்து மாதப்பனும், அவருடைய மனைவியும் கதறி அழுதது பார்க்க பரிதாபமாக இருந்தது.