மாவட்ட செய்திகள்

வெங்காய மண்டியில் கூலி வாங்க தொழிலாளர்கள் மறுப்பு: ரூ.28 லட்சத்தை தலைச்சுமையாக எடுத்து வந்த வியாபாரிகள் + "||" + The workers refused to pay wages in the onion market: merchants who took Rs 28 lakh head off

வெங்காய மண்டியில் கூலி வாங்க தொழிலாளர்கள் மறுப்பு: ரூ.28 லட்சத்தை தலைச்சுமையாக எடுத்து வந்த வியாபாரிகள்

வெங்காய மண்டியில் கூலி வாங்க தொழிலாளர்கள் மறுப்பு: ரூ.28 லட்சத்தை தலைச்சுமையாக எடுத்து வந்த வியாபாரிகள்
வெங்காய மண்டியில் தொழிலாளர்கள் கூலி வாங்க மறுத்ததால் அவர்களுக்கான கூலித்தொகை ரூ.28 லட்சத்தை அதிகாரியிடம் ஒப்படைக்க, தலைச்சுமையாக வியாபாரிகள் திருச்சி தொழிலாளர் இணை ஆணையர் அலுவலகத்திற்கு எடுத்து வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
திருச்சி,

திருச்சி காந்தி மார்க்கெட் அருகே சப்-ஜெயில் ரோட்டில் பல ஆண்டுகளாக செயல்பட்டு வந்த வெங்காய மண்டி, கடந்த ஜூன் மாதம் முதல் அரியமங்கலம் பழைய பால்பண்ணை அருகே புதிய கட்டிடத்திற்கு மாற்றப்பட்டது. அங்கு ஏற்கனவே, கடந்த 2014-ம் ஆண்டு முதல் வெங்காய மண்டி சிறிய அளவில் இயங்கி வந்தது. அதில் 100-க்கும் மேற்பட்ட சுமைதூக்கும் தொழிலாளர்கள் வேலைபார்த்து வந்தனர். அங்கு அவர்களுக்கு ஒரு மூட்டை ஏற்றி, இறக்க 6 ரூபாய் 90 காசு என நிர்ணயிக்கப்பட்டிருந்தது.


அதேவேளையில் சப்-ஜெயில் ரோட்டில் வேலை பார்த்த சுமைதூக்கும் தொழிலாளர்களுக்கு புதிய வெங்காய மண்டியில் வேலை வழங்கப்படவில்லை. இதனால் அவர்கள் தங்களுக்கும் அங்கு வேலை வழங்க வேண்டும் என ஆர்ப்பாட்டம், உண்ணாவிரதம் என பல்வேறு கட்ட போராட்டங்களை நடத்தியதன் விளைவாக அதிகாரிகள் முன்னிலையில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. அப்போது, புதிய வெங்காய மண்டியில் நிர்ணயிக்கப்பட்ட கூலி மட்டுமே வழங்கப்படும் என்ற நிபந்தனையை பழைய வெங்காய மண்டியில் வேலைபார்த்த சுமைதூக்கும் தொழிலாளர்கள் ஒப்புக்கொண்டு வேலைக்கு சேர்ந்தனர். அதாவது, இருதரப்பினருக்கும் ஒரே கூலி என்ற அடிப்படையில் தொழிலாளர் துறை அதிகாரி, கோட்டாட்சியர் ஆகியோர் முன்னிலையில் ஒப்பந்தம் போடப்பட்டது. கடந்த ஜூலை மாதம் 23-ந் தேதி இந்த உடன்படிக்கை ஏற்பட்டது.

அதன்படி, சுமார் 75 சுமைதூக்கும் தொழிலாளர்கள் புதிய வெங்காய மண்டியில் வேலை பார்த்தனர். ஆனால், அங்கு ஒரு மூட்டைக்கு 7 ரூபாய் 20 காசு என உயர்த்தி கூலி தந்தால் மட்டுமே பெற்றுக்கொள்வோம். இந்த ஒப்பந்தபடி தான் நாங்கள் பணி செய்து வருகிறோம். எனவே, கூலியை உயர்த்தி வழங்காத பட்சத்தில் அதை பெறமாட்டோம் எனக்கூறி கடந்த 40 நாட்களாக, (அதாவது கடந்த 20-ந்தேதி வரை) கூலி வாங்காமல் சுமைதூக்கும் தொழிலாளர்கள் சுமார் 75 பேர் வேலை செய்து வந்துள்ளனர்.

கூலி வழங்காததால் அவர்களது குடும்பம் வறுமையில் வாடுவதாகவும், உயர்த்தப்பட்ட கூலியான 7 ரூபாய் 20 காசு என கணக்கிட்டு வழங்க வேண்டும் என தொழிலாளர் முன்னேற்ற சங்க பொதுச்செயலாளர் ராமலிங்கம் தெரிவித்திருந்தார். அதேவேளையில் வெங்காய மண்டி வியாபாரிகள் அவர்கள் கூலி வாங்காத நாட்களில் இருந்து விடுமுறை நாட்கள் போக தினமும் அவர்களின் வேலைக்கான கூலித்தொகையை தனியாக எடுத்து வைக்க தொடங்கினர். வேலைபார்த்த கூலியை வெங்காய மண்டி வியாபாரிகள் தங்களுக்கு தரவில்லை என்ற ஒரு குற்றச்சாட்டும் சுமைதூக்கும் தொழிலாளர்கள் தரப்பில் கூறப்பட்டு வந்தது. இது தொடர்பாக தொழிலாளர் துறை துணை ஆணையர் அலுவலகத்தில் புகார் கொடுக்கப்பட்டதாகவும் தகவல் வெளியானது.

இதையறிந்த வெங்காய மண்டி வியாபாரிகள் அதிருப்தி அடைந்தனர். நேற்று காலை 11.30 மணிக்கு வெங்காய மண்டி வியாபாரிகள், திருச்சி மன்னார்புரம் செங்குளம் காலனியில் உள்ள தொழிலாளர் இணை ஆணையர் மற்றும் தொழிலாளர் இழப்பீட்டு ஆணையர் அலுவலகத்திற்கு தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு பொதுச்செயலாளர் கோவிந்தராஜூலு தலைமையில் ஊர்வலமாக வந்தனர்.

அப்போது சுமைதூக்கும் தொழிலாளர்கள் 75 பேரின் 40 நாட்கள் கூலியான ரூ.28 லட்சத்து 21 ஆயிரத்து 450-ஐ சாக்குப்பையில் கட்டி எடுத்து தலைச்சுமையாக ஊர்வலமாக எடுத்து வந்தனர். பொதுச்செயலாளர் கோவிந்தராஜூலுவும் ரூபாய் நோட்டுகள் அடங்கிய மூட்டையை தலையில் சுமந்தபடி வந்தார். அவருடன் திருச்சி மாவட்ட தலைவர் ஸ்ரீதர், செயலாளர் செந்தில்பாலு, பொருளாளரும் திருச்சி வெங்காய மண்டி தலைவருமான தங்கராஜ் வந்தனர். இதனால், தொழிலாளர் இணை ஆணையர் அலுவலகத்தில் பரபரப்பு ஏற்பட்டது. ரூபாய் கட்டுகள் அடங்கிய மூட்டையை தலைச்சுமையாக கொண்டு வந்ததை பொதுமக்கள் பலரும் வியப்புடன் பார்த்தனர். பின்னர் வியாபாரிகள் அங்கு உதவி ஆணையர் லிங்கத்தை சந்தித்து ரூபாய் நோட்டுகள் அடங்கிய சாக்குப்பையை ஒப்படைத்து பேச்சுவார்த்தை நடத்தினார்கள்.

அப்போது வருகிற 28-ந் தேதிக்குள் சுமைதூக்கும் தொழிலாளர்கள் தங்களது கூலியை பெற்றுக்கொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது. அப்படி பெற்றுக்கொள்ளாத பட்சத்தில் வியாபாரிகள் எடுக்கும் நடவடிக்கையை கட்டுப்படுத்த முடியாது என்றும் கூறப்பட்டது. அதை தொழிலாளர்களும் ஏற்றுக்கொண்டதாக தெரிகிறது.

இதுகுறித்து தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு பொதுச்செயலாளர் கோவிந்தராஜூலு நிருபர்களிடம் கூறியதாவது:-

வியாபாரிகள் தான் 2 மாதமாக கூலி தராமல் ஏமாற்றி வருவதைபோன்ற ஒரு தோற்றத்தை ஏற்படுத்தி பொதுமக்கள் மத்தியில் வியாபாரிகளுக்கு அவப்பெயர் ஏற்படுத்தும் வகையில் தொழிற்சங்கத்தினர் தவறான தகவலை பரப்பி உள்ளனர். மேலும் போராட்டம் நடத்துவோம். வேலை நிறுத்தம் செய்வோம் என மிரட்டி வருகிறார்கள். இவர்களது இத்தகைய நடவடிக்கையால் தான் ஏற்கனவே, வெங்காய மண்டி வியாபாரிகள் அவர்களை வேலைக்கு அமர்த்த எதிர்ப்பு தெரிவித்தனர். எனினும், பல தரப்பில் இருந்து அவர்களுக்கும் வேலைவழங்க வேண்டும் என கேட்டுக்கொண்டதாலேயே வேலை வழங்கப்பட்டது.

தொழிலாளர்கள், அவர்களுக்கான 40 நாள் கூலியை பெற்றுக்கொள்ளாத பட்சத்தில் அதனை அரசு கருவூலத்திலோ அல்லது கோர்ட்டிலோ ஒப்படைக்க இருக்கிறோம். வருகிற 28-ந் தேதிக்குள் கூலியை பெற்றுக்கொள்ள அதிகாரிகள் அறிவுறுத்தி இருக்கிறார்கள். அதை பெற்றுக்கொண்டு வேலைக்கு வந்தால் பிரச்சினை இல்லை. இல்லையென்றால், வருகிற 1-ந் தேதி முதல் 75 பேரும் வேலையில் இருந்து நிறுத்தப்படுவார்கள் அல்லது நீக்கப்படுவார்கள். இதை வியாபாரிகள் தரப்பில் எச்சரிக்கையாகவே தெரிவிக்கிறோம்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.


தொடர்புடைய செய்திகள்

1. மருத்துவமனையில் உண்ணாவிரதம் இருக்கும் சர்க்கரை ஆலை ஊழியர்கள் மாத்திரை சாப்பிட மறுப்பு
சம்பளம் வழங்கக்கோரி மருத்துவமனையில் உண்ணாவிரதம் இருந்து வரும் சர்க்கரை ஆலை ஊழியர்கள் மாத்திரை சாப்பிட மறுப்பு தெரிவித்தனர். ஆலை நிர்வாகத்துடன் அதிகாரிகள் நடத்திய பேச்சுவார்த்தை தோல்வி அடைந்துள்ளதால் ஊழியர்களின் போராட்டம் நீடித்து வருகிறது.
2. தொழிலாளர்கள் காப்பீட்டு பலன்களை பெற விதிமுறைகள் எளிதாக்கப்பட்டுள்ளன மத்திய மந்திரி தகவல்
தொழிலாளர்கள் காப்பீட்டு திட்டத்தின் பலன்களை பெற விதி முறைகள் எளிதாக்கப்பட்டுள்ளன என்று மத்திய மந்திரி சந்தோஷ்குமார் கங்குவார் கூறினார்.
3. மாட்டு வண்டியில் மணல் அள்ள அனுமதி வழங்க வேண்டும் கலெக்டரிடம் தொழிலாளர்கள் மனு
மாட்டு வண்டி மூலமாக மணல் அள்ள அனுமதி வழங்க வேண்டும் என்று அரியலூர் மாவட்ட கலெக்டரிடம் தொழிலாளர்கள் மனு அளித்தனர்.
4. தாறுமாறாக ஓடிய கார் மோதி கட்டிட தொழிலாளர்கள் 3 பேர் பலி பஸ்சுக்காக காத்திருந்த போது பரிதாபம்
திருச்சி அருகே பஸ்சுக்காக காத்திருந்த கட்டிட தொழிலாளர்கள் மீது தாறுமாறாக ஓடிய கார் மோதியது. இதில் பெண்கள் உள்பட 3 பேர் பலியானார்கள்.
5. காதலித்துவிட்டு திருமணம் செய்ய மறுத்ததால் விஷம் குடித்த பெண்; வாலிபர் கைது
காதலித்துவிட்டு திருமணம் செய்ய மறுத்ததால் பெண் விஷம் குடித்தார். வாலிபரை போலீசார் கைது செய்தனர்.