அரசு பள்ளிகளை மூடும் எண்ணம் இல்லை - அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் பேட்டி


அரசு பள்ளிகளை மூடும் எண்ணம் இல்லை - அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் பேட்டி
x
தினத்தந்தி 25 Sept 2018 5:00 AM IST (Updated: 25 Sept 2018 12:33 AM IST)
t-max-icont-min-icon

அரசு பள்ளிகளை மூடும் எண்ணம் இல்லை என்று ஈரோட்டில் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் கூறினார்.

ஈரோடு,

ஈரோட்டில் பள்ளி கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் நிருபர்களிடம் கூறியதாவது:–

இந்த ஆண்டு 100 பள்ளிகள் உயர்நிலை பள்ளிகளாகவும், 100 பள்ளிகள் மேல்நிலை பள்ளிகளாகவும் தரம் உயர்த்தப்பட்டு உள்ளது. சிறப்பாக பணியாற்றாத பெற்றோர் ஆசிரியர் கழகங்களை மாற்ற நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அரசின் கொள்கை முடிவின்படி, எந்த அரசு பள்ளியையும் மற்றொரு பள்ளிக்கு மாற்ற எந்த பரிசீலனையும், ஆய்வும் இல்லை.

2 மாணவர்கள் மட்டுமே படிக்கும் பள்ளிகளுக்கு செலவு கூடுதலாகிறது. இருந்தபோதிலும் பள்ளிகளை மூடும் எண்ணம் அரசுக்கு இல்லை. போராட்டம் செய்வோம் என்று கூறுபவர்கள், கூடுதலாக மாணவர்களை பள்ளியில் எப்படி சேர்க்க முடியும்?, ஒரு பள்ளிக்கு சீராக குறைந்தது 50 மாணவர்கள் வரும் அளவுக்கு எப்படி சீரமைக்க முடியும்? என ஆலோசனை கூறினால் அவர்களின் கருத்துகள் ஏற்றுக்கொள்ளப்படும்.

ஏனென்றால் ஒரு மாணவர், 2 மாணவர்கள் இருக்கிறார்கள் என்று சொன்னால் ஒரு மாணவனுக்கு குறைந்தபட்சம் ரூ.6 லட்சம் அரசு செலவு செய்ய வேண்டி உள்ளது. எனவே மக்கள் வரி பணத்தை எவ்வாறு சீராக செலவு செய்வது?, எப்படி மாணவர் சேர்க்கையை அதிகப்படுத்துவது? என்று அவர்கள் ஆலோசனை தர வேண்டும்.

அங்கன்வாடியில் இருக்கும் குழந்தைகளை அரசு பள்ளியுடன் இணைக்கும் நோக்கம் இல்லை. அவர்களுக்கு ஆங்கிலம், தமிழ் சிறப்பாக கற்றுக்கொடுக்க அரசு நடவடிக்கை மேற்கொள்ளும். தமிழகத்தில் 3 லட்சத்து 20 ஆயிரம் ஆசிரியர்கள் பணியாற்றுகிறார்கள்.

ஏதோ ஒரு இடத்தில் தவறு ஏற்பட்டால் அரசு கடுமையாக நடவடிக்கை எடுக்கும். ஏனென்றால் அப்படிப்பட்ட நிலை எதிர்காலத்தில் வரக்கூடாது என்பதற்காக. ஆசிரியர் மீது புகார் எழுந்தால், போலீசார் மூலம் வழக்குப்பதிவு செய்யப்பட்டு கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் கூறினார்.


Next Story