ஊரப்பாக்கம் அருகே டிப்பர் லாரி சக்கரத்தில் சிக்கி கல்லூரி மாணவி பலி


ஊரப்பாக்கம் அருகே டிப்பர் லாரி சக்கரத்தில் சிக்கி கல்லூரி மாணவி பலி
x
தினத்தந்தி 25 Sept 2018 4:15 AM IST (Updated: 25 Sept 2018 12:42 AM IST)
t-max-icont-min-icon

டிப்பர் லாரி சக்கரத்தில் சிக்கி கல்லூரி மாணவி பரிதாபமாக இறந்தார். இதனால் ஆத்திரம் அடைந்த பொதுமக்கள், அந்த வழியாக மண் ஏற்றி வந்த 10-க்கும் மேற்பட்ட டிப்பர் லாரிகளின் கண்ணாடிகளை அடித்து உடைத்தனர்.

வண்டலூர்,

காஞ்சீபுரம் மாவட்டம் ஊரப்பாக்கம் அருகே உள்ள ஆதனூர் பெருமாள்கோவில் தெருவைச் சேர்ந்தவர் ரமேஷ். இவருடைய மகள் சரண்யா என்ற சூலமிட்டி சேரன் கிருபா (வயது 18). இவர், சென்னை கிண்டியில் உள்ள தனியார் பெண்கள் கல்லூரியில் பி.ஏ. பொருளாதாரம் இரண்டாம் ஆண்டு படித்து வந்தார்.

இவர், தினமும் வீட்டில் இருந்து ஊரப்பாக்கம் ரெயில் நிலையத்திற்கு சைக்கிளில் சென்று, அங்கிருந்து ரெயில் மூலம் கல்லூரிக்கு சென்று வந்தார். நேற்று காலை வழக்கம்போல் சரண்யா, தனது சைக்கிளில் வீட்டில் இருந்து புறப்பட்டு ஊரப்பாக்கம் ரெயில் நிலையம் நோக்கி சென்றுகொண்டிருந்தார்.

மண்ணிவாக்கம் அண்ணாநகர் பகுதி அருகே செல்லும்போது அவருக்கு பின்னால் மண் ஏற்றிக்கொண்டு மின்னல் வேகத்தில் வந்த டிப்பர் லாரி, மாணவி சரண்யாவின் சைக்கிள் மீது பயங்கரமாக மோதியது. இதில் சைக்கிளில் இருந்து கீழே விழுந்த மாணவி சரண்யா மீது லாரி சக்கரம் ஏறி இறங்கியது.

லாரி சக்கரத்தில் சிக்கிய அவர், சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பரிதாபமாக இறந்தார். இந்த விபத்தை ஏற்படுத்திய டிப்பர் லாரி டிரைவர், லாரியை அங்கேயே நிறுத்தி விட்டு தப்பி ஓடிவிட்டார்.

இந்த சம்பவத்தை நேரில் பார்த்த அப்பகுதி மக்கள் ஏராளமானோர் அங்கு திரண்டு வந்து விபத்து ஏற்படுத்திய டிப்பர் லாரி மற்றும் அந்த வழியாக சென்ற 10-க்கும் மேற்பட்ட மண் ஏற்றி வந்த டிப்பர் லாரிகளின் கண்ணாடிகளை அடித்து உடைத்தனர்.

இந்த விபத்து குறித்து தகவலறிந்ததும் ஓட்டேரி போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து பலியான மாணவி சரண்யாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைத்தனர்.

சம்பவம் குறித்து ஓட்டேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து தப்பி ஓடிய டிப்பர் லாரி டிரைவர் சதீஷ் (28) என்பவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் மண்ணிவாக்கம் அண்ணா நகர் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்த விபத்து குறித்து பொதுமக்கள் கூறும்போது, “விபத்து நடந்த மண்ணிவாக்கம் அண்ணா நகர் பகுதியில் தரைப்பாலம் கட்டும்பணி நடைபெறுகிறது. இதனால் காலை மற்றும் மாலை நேரங்களில் அதிகளவில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இந்த நேரங்களில் மண் ஏற்றி வரும் லாரிகள் இந்த சாலை வழியாக வருவதை அதிகாரிகள் தடைசெய்ய வேண்டும். இல்லை என்றால் மிகப்பெரிய அளவில் போராட்டம் நடத்தப்படும்” என எச்சரிக்கை விடுத்தனர்.

Next Story