ஆட்டோ டிரைவர் கொலை வழக்கு: 2 பேருக்கு ஆயுள் தண்டனை
ஏர்வாடி அருகே ஆட்டோ டிரைவரை கொலை செய்த வழக்கில் 2 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து நெல்லை கோர்ட்டு நேற்று தீர்ப்பு கூறியது.
நெல்லை,
நெல்லை மாவட்டம் நாங்குநேரி அருகே உள்ள ஏர்வாடியை சேர்ந்தவர் சாகுல்ஹமீது. இவருடைய மகன் சேக் முகமது காஜா மைதீன் (வயது 28). ஆட்டோ டிரைவரான இவர் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் மாவட்ட நிர்வாகியாகவும் இருந்து வந்தார். இவருக்கும், ஏர்வாடியை சேர்ந்த ராமலிங்கம் மகன் முத்துராமன் (37) என்பவருக்கும் இடையே தகராறு இருந்து வந்தது. முத்துராமன் பாரதீய ஜனதா கட்சியின் களக்காடு வட்டார தலைவராக இருந்து வந்தார்.
இந்த நிலையில் சேக் முகமது காஜா மைதீன் உள்ளிட்டோர் முத்துராமனை வெட்டி கொலை செய்ய முயன்றனர். இதனால் அவர்களுக்கு இடையே விரோதம் அதிகரித்தது. கடந்த 21-12-2015 அன்று இரவில் ஏர்வாடி அருகே உள்ள காந்திநகர் சுட்டுப்பொத்தை அருகில் சேக் முகமது காஜா மைதீன் கொலை செய்யப்பட்டு கிடந்தார்.
இதுகுறித்து திருக்குறுங்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி நம்பிதலைவன் பட்டயத்தை சேர்ந்த கதிர்வேல்சாமி (45), களக்காடு சாலைப்புதூரை சேர்ந்த மகேஷ் (37), ஏர்வாடியை சேர்ந்த சுதாகர் என்ற மணி (31), ராஜபாண்டி (31), முத்துராமன் (37), மணிகண்டன் (22), நாங்குநேரி சேர்மத்துரை, களக்காடு ஜான்சன் தினேஷ் ஆகிய 8 பேரை கைது செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் முத்துராமனை கொலை செய்ய முயன்றதற்கு பழிக்குப்பழியாக சேக் முகமது காஜா மைதீனை கொலை செய்தது தெரியவந்தது.
இதுதொடர்பான வழக்கு நெல்லை 4-வது கூடுதல் செசன்சு கோர்ட்டில் நடந்து வந்தது.
இந்த வழக்கு நீதிபதி கிளாட்சன் பிளசட் தாகூர் முன்னிலையில் நேற்று விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி, குற்றம் சாட்டப்பட்ட கதிர்வேல்சாமி, மகேஷ் ஆகியோருக்கு ஆயுள் தண்டனையும், தலா ரூ.1000 அபராதமும் விதித்து தீர்ப்பு கூறினார். சுதாகர் என்ற மணி, ராஜபாண்டி, முத்துராமன், மணிகண்டன், சேர்மத்துரை, ஜான்சன் தினேஷ் ஆகியோர் மீதான குற்றச்சாட்டு நிரூபிக்கப்படாததால் அவர்களை விடுதலை செய்து உத்தரவிட்டார். இந்த வழக்கில் போலீஸ் தரப்பில் அரசு வக்கீல் துரைமுத்துராஜ் ஆஜரானார்.
இந்த வழக்கில் தீர்ப்பு கூறப்பட்டதையொட்டி நெல்லை கோர்ட்டு வளாகத்தில் நேற்று பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.
Related Tags :
Next Story