எட்டயபுரம் அருகே காட்டு பகுதியில் உடல் அழுகிய நிலையில் ஆண் பிணம்


எட்டயபுரம் அருகே காட்டு பகுதியில் உடல் அழுகிய நிலையில் ஆண் பிணம்
x
தினத்தந்தி 25 Sept 2018 3:00 AM IST (Updated: 25 Sept 2018 12:55 AM IST)
t-max-icont-min-icon

எட்டயபுரம் அருகே காட்டு பகுதியில் உடல் அழுகிய நிலையில் ஆண் பிணமாக கிடந்தார். அவர் யார்? இறந்தது எப்படி? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

எட்டயபுரம், 

எட்டயபுரம் அருகே மேலக்கரந்தை கண்மாயில் இருந்து கீழக்கரந்தை கண்மாய்க்கு தண்ணீர் செல்லும் வகையில், ஓடை வடிகால் அமைக்கப்பட்டு உள்ளது. மேலக்கரந்தை-கீழக்கரந்தை இடையே காட்டு பகுதியில் அந்த ஓடை வடிகாலில் நேற்று காலையில் 40 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர் உடல் அழுகிய நிலையில் பிணமாக கிடந்தார். அவர் இறந்து ஒரு வாரத்துக்கு மேலானதால் துர்நாற்றம் வீசியது. அவர் சட்டையும், லுங்கியும் அணிந்து இருந்தார்.

அந்த வழியாக வயலுக்கு சென்றவர்கள், இதனைப் பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து மாசார்பட்டி போலீஸ் நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனே போலீஸ் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) சுகாதேவி மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று, பார்வையிட்டு விசாரணை நடத்தினர்.

இறந்தவரின் உடலை மருத்துவ குழுவினர் அங்கேயே பரிசோதனை செய்து புதைத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இறந்தவர் யார்? என்பது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். பிரேத பரிசோதனை அறிக்கைக்கு பின்னரே அந்த நபர் எப்படி இறந்தார்? என்பது குறித்து தெரிய வரும் என்று போலீசார் தெரிவித்தனர். 

Next Story