போதிய பராமரிப்பு இன்றி பூட்டி கிடக்கும் ஊட்டி டேவிஸ் பூங்கா: நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் வலியுறுத்தல்


போதிய பராமரிப்பு இன்றி பூட்டி கிடக்கும் ஊட்டி டேவிஸ் பூங்கா: நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் வலியுறுத்தல்
x
தினத்தந்தி 24 Sep 2018 11:00 PM GMT (Updated: 24 Sep 2018 7:25 PM GMT)

போதிய பராமரிப்பு இல்லாமல் ஊட்டி டேவிஸ் பூங்கா பூட்டி கிடக்கிறது. அதனை மீண்டும் திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்.

ஊட்டி,

மலைகளின் அரசியான ஊட்டிக்கு கோடை சீசன், 2–வது சீசன் மற்றும் தொடர் விடுமுறை காலங்களில் சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரித்து காணப்படும். சுற்றுலா பயணிகள் அரசு தாவரவியல் பூங்கா, ரோஜா பூங்கா, தேயிலை பூங்கா, தொட்டபெட்டா மலைசிகரம், படகு இல்லம் உள்ளிட்ட சுற்றுலா தலங்களை கண்டு ரசிக்கிறார்கள். ஊட்டி நகரில் முக்கிய சாலையோரங்களில் சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் மலைப்பகுதி மேம்பாட்டு திட்டத்தின் கீழ் பூங்காக்கள் அமைக்கப்பட்டன.

ஊட்டி நகராட்சி சார்பில் ஊட்டி–கோத்தகிரி சாலை சேரிங்கிராசில் சாலையோர பூங்கா, ஊட்டி மத்திய பஸ் நிலையம் அருகே அம்பேத்கர் நினைவு பூங்கா அமைக்கப்பட்டு உள்ளது. நீலகிரி மாவட்ட கலெக்டர் அலுவலகம் அருகே டேவிஸ் பூங்கா கடந்த 2007–2008–ம் ஆண்டில் திறக்கப்பட்டது. இந்த பூங்காவில் பசுமையான புல்வெளிகள் மற்றும் அடர்ந்து வளர்ந்த மரங்களுக்கு நடுவே நடைபாதை அமைக்கப்பட்டு உள்ளது. பொதுமக்கள் அமர்ந்து ஓய்வு எடுக்கும் வகையில் செங்கற்களால் ஆன இருக்கைகள் கட்டப்பட்டு இருந்தன.

தொடக்கத்தில் டேவிஸ் பூங்கா காலை 9 மணி முதல் இரவு 8.30 மணி வரை திறந்து இருக்கும். பூங்காவில் தினமும் காலை மற்றும் மாலை நேரங்களில் ஏராளமானோர் உடல் ஆரோக்கியத்துக்காக நடைபயிற்சி சென்று வந்தனர். அங்கு ஆண்கள் மற்றும் பெண்களுக்கு என கழிப்பிடங்கள் கட்டப்பட்டு உள்ளன. செடிகளால் ஆன நிழற்குடை, செயற்கை நீர்வீழ்ச்சி போன்றவை அனைவரையும் கவரும் வகையில் அமைக்கப்பட்டது. தற்போது டேவிஸ் பூங்கா போதிய அளவில் பராமரிக்கப்படாததால் புதர்கள் மண்டி காணப்படுகிறது. மேலும் கடந்த சில நாட்களாக பூங்கா பூட்டியே கிடக்கிறது. இதுகுறித்து பொதுமக்கள் கூறியதாவது:–

பூட்டி கிடக்கும் டேவிஸ் பூங்காவில் கழிப்பிடங்களை புதர்கள் சூழ்ந்தும், சுகாதாரம் இன்றியும் இருக்கிறது. நடைபாதையில் புற்கள் முளைத்து, புதர்கள் மண்டி கிடக்கிறது. செயற்கை நீர்வீழ்ச்சி செயல்படாமல் பாழடைந்து கிடக்கிறது. இயற்கை அழகு நிறைந்திருந்த பூங்கா தற்போது புதர்களின் ஆக்கிரமிப்பிலும், சமூக விரோதிகளின் கூடாரமாக மாறியும் இருக்கிறது. பூங்காவை சுற்றிலும் அமைக்கப்பட்ட தடுப்பு வேலிகள் உடைந்த நிலையில் காட்சி அளிக்கிறது. இதனால் இரவு நேரங்களில் பூங்காவுக்குள் நுழைந்து மது அருந்தும் சிலர், பாட்டில்களை ஆங்காங்கே தூக்கி வீசுகின்றனர். மேலும் பூங்கா பூட்டி கிடப்பதை கண்டு நடைபயிற்சிக்கு செல்ல முடியாமல் பொதுமக்கள் ஏமாற்றத்துடன் திரும்பி செல்வதை காண முடிகிறது. எனவே டேவிஸ் பூங்காவை சீரமைத்து மீண்டும் திறக்க ஊட்டி நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினார்கள்


Next Story