பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து தமிழகம் முழுவதும் விரைவில் போராட்டம் நடத்தப்படும் த.வெள்ளையன் பேட்டி
பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து விரைவில் தமிழகம் முழுவதும் போராட்டம் நடத்தப்படும் என வணிகர் சங்கங்களின் பேரவை தலைவர் த.வெள்ளையன் தெரிவித்துள்ளார்.
திருவொற்றியூர்,
மணலி காமராஜர் சாலை பெரிய சேக்காடு முருகேசன் தெருவில் மணலி சேக்காடு பொது வியாபாரிகள் சங்கம் சார்பில் வியாபாரிகள் சங்க மாளிகை கட்டிட திறப்பு விழா நடந்தது.
விழாவுக்கு மணலி சேக்காடு பொது வியாபாரிகள் சங்க தலைவர் டி.ஏ.சண்முகம் தலைமை தாங்கினார். விழாவில் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை தலைவர் த.வெள்ளையன், சமத்துவ மக்கள் கழக தலைவர் எர்ணாவூர் ஏ.நாராயணன் ஆகியோர் கலந்து கொண்டு சங்க மாளிகை கட்டிடத்தை திறந்து வைத்தனர்.
அதனை தொடர்ந்து த.வெள்ளையன் நிருபர்களிடம் கூறியதாவது:-
பிக்பாக்கெட் அடிப்பது போல்...
மக்களிடம் பிக்பாக்கெட் அடிப்பது போல பெட்ரோல், டீசல் விலையை மத்திய அரசு உயர்த்தி வருகிறது. சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை வீதத்தை பொறுத்தவரையில் பெட்ரோல் டீசல் விலையை பாதியாக குறைக்க வேண்டும்.
ஆனால் மத்திய, மாநில அரசுகள் பெட்ரோல், டீசல் விலையை தொடர்ந்து ஏற்றி மக்களிடம் கொள்ளையடிக்கின்றன. இந்த விலை ஏற்றத்தினால் லாரிகளின் வாடகை உயர்ந்துள்ளது.
கவர்ச்சி திட்டங்கள்
இதனால் விலைவாசி உச்சத்தைத் தொட்டு மக்கள் பெரும் வேதனைக்கு ஆளாகி உள்ளார்கள். பெட்ரோல், டீசல் விலை ஏற்றத்தினால் அரசுக்கு அதிக வருமானம் கிடைப்பதால் தான் இலவச மருத்துவ திட்டங்களை அறிவித்து மக்களிடம் வாக்குகளை பெறுவதற்கு கவர்ச்சி திட்டங்களை அறிவிக்கிறார்கள்.
அவர்கள் உண்மையிலேயே மக்களின் நலனில் அக்கறை கொள்ளவில்லை. அமேசான், பிளிப்கார்ட் போன்ற வெளிநாட்டு ஆன்லைன் வர்த்தகத்தினால் வணிகர்கள் பெரும் இழப்பை சந்தித்து வரு கிறார்கள்.
விரைவில் போராட்டம்
ஆனால் தமிழக அரசு சில்லரை வியாபாரிகளை கண்டுகொள்ளாமல் வெளிநாட்டு நிறுவனங்களுக்கு துணை போகிறது. எனவே ஆன்லைன் வர்த்தகத்தை கண்டித்தும், பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்தும் தமிழகம் முழுவதும் வணிகர் சங்கம் சார்பில் விரைவில் போராட்டம் நடத்தப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
இந்த விழாவில் மணலி சேக்காடு பொது வியாபாரிகள் சங்க செயலாளர் பூபாலகிருஷ்ணன், பொருளாளர் நாராயண்லால் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story