குப்பை தொட்டியில் குப்பைகளை போட பொதுமக்கள் முன்வரவேண்டும் மாநகராட்சி அதிகாரிகள் கோரிக்கை
பொதுமக்கள் குப்பையை தொட்டியில் போட முன்வரவேண்டும் என அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.
திரு.வி.க.நகர்,
சென்னை திரு.வி.க.நகர், ஓட்டெரி, புளியந்தோப்பு, பெரவள்ளூர் சாலைகளில் பொதுமக்கள் தங்களது குப்பைகளை போடுவதற்காக குப்பை தொட்டிகள் வைக்கப்பட்டு உள்ளது. மேலும் வீடுகள், வணிக வளாகங்கள், மண்டபங்கள் உள்பட பல்வேறு இடங்களில் சேரும் குப்பைகளை கொட்டுவதற்கு என்று மாநகராட்சி சார்பில் ஆங்காங்கே முக்கிய சாலைகளிலும் சந்திப்புகளிலும் குப்பைத்தொட்டிகள் வைக்கப்பட்டுள்ளன.
அதில் கொட்டப்படும் குப்பைகள் மாநகராட்சி லாரிகள் மூலம் சேகரிக்கப்பட்டு கொடுங்கையூர் குப்பை கிடங்கில் கொட்டப்பட்டு வருகின்றன. தினமும் அதிகாலை மற்றும் இரவு என 2 வேளைகளில் மாநகராட்சி லாரிகள் மூலம் குப்பைத்தொட்டிகளில் உள்ள குப்பைகளை சேகரித்து கொடுங்கையூர் குப்பை கிடங்கில் கொட்டி வருகின்றனர்.
அது மட்டுமின்றி லாரிகள் செல்ல முடியாத தெருக்களில் துப்புரவு பணியாளர்கள் மூலம் ரிக்சா வண்டிகள் வைத்து வீடு-வீடாக சென்று குப்பைகளை சேகரித்து அவற்றை லாரிகள் மூலம் குப்பை கிடங்கிற்கு அனுப்பிவைக்கிறார்கள்.
சாலையில் கொட்டப்படும் குப்பைகள்
மக்கும் குப்பை மக்காத குப்பை என தரம் பிரித்து மாநகராட்சி சார்பில் குப்பைகள் சேகரிக்க பட்டாலும் பொதுமக்கள் இதற்கு முழு ஒத்துழைப்பு கொடுப்பதில் சிக்கல் நீடிக்கிறது. மக்கும் குப்பைகளை பொதுமக்களே வீட்டுக்கு அருகில் சிறிய அளவு பள்ளம் தோண்டி சேகரித்து உரமாக மாற்றி கொள்ளலாம். மக்காத குப்பைகளை துப்புரவு பணியாளர்கள் மூலம் குப்பைத்தொட்டியில் சேர்க்கலாம்.
ஒரு சிலர் இதை கடைபிடித்தாலும் சிலர் தங்கள் வீடுகளில் சேரும் குப்பைகளை பிளாஸ்டிக் பைகளில் கட்டி வெளியே செல்லும்போது சாலையோரம் வீசிவிட்டு செல்கின்றனர். இதனால் பல்வேறு இடங்களில் சாலையோரம் குப்பை கூளமாக காட்சியளிப்பதை காண முடிகிறது. இதனால் அந்த பகுதிகளில் சுகாதார சீர்கேடுகள் ஏற்படுகின்றன. எனவே பொதுமக்கள் குப்பை தொட்டிகளில் குப்பைகளை போட முன்வரவேண்டும் என மாநகராட்சி அதிகாரிகள் மக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளனர்.
இதுகுறித்து சமூக ஆர்வலர்கள் கூறியதாவது:-
பொதுமக்கள் ஒத்துழைப்பு
குப்பையில்லா நகரமாக மாற்ற அரசு தரப்பில் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் மற்றும் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வரும் நிலையில் பொதுமக்கள் முழு ஒத்துழைப்பு கொடுத்தால் மட்டுமே தூய்மை இந்தியா திட்டம் நிறைவேறும்.
பெரும்பாலான வீடுகளில் குப்பைகளை காலையில் தாங்கள் வேலைக்கு செல்லும்போதோ அல்லது பணி நிமித்தமாக வெளியில் செல்லும் போது பிளாஸ்டிக் பைகளில் கட்டி சாலையோரமாக வீசி விட்டு செல்வது வழக்கமாக உள்ளது. அவ்வாறு செல்பவர்கள் அந்த குப்பைகளை தொட்டிகளில் வீசி சென்றால் சாலையில் குப்பைகள் சிதறி சுகாதார சீர்கேடு தவிர்க்கப்படும்.
இருசக்கர வாகனத்தில் செல்பவர்களும் நடந்து செல்பவர்களும் காரில் செல்பவர்கள் கூட வீடுகளில் உள்ள குப்பைகளை பிளாஸ்டிக் பைகளில் கட்டி சாலையோரம் உள்ள குப்பை தொட்டிக்கு அருகில் வீசிவிட்டு செல்கின்றனர். ஒரு நிமிடம் வாகனத்தை நிறுத்தி இறங்கி அவர்கள் கொண்டு வந்த குப்பைகளை தொட்டிகளில் போட்டு சென்றால் இதுபோன்ற சுகாதார சீர்கேடுகளை தவிர்க்கலாம். மாநகராட்சி அதிகாரிகள் மூலம் மட்டுமே குப்பையில்லா நகரமாக மாற்ற முடியும் என்ற கருத்தை முன்வைக்க முடியாது. பொதுமக்களும் இதற்கு ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.
Related Tags :
Next Story