தமிழகத்தில் அனைத்து மட்டத்திலும் ஊழல் பெருகிவிட்டது - முத்தரசன் பேட்டி


தமிழகத்தில் அனைத்து மட்டத்திலும் ஊழல் பெருகிவிட்டது - முத்தரசன் பேட்டி
x
தினத்தந்தி 25 Sept 2018 4:30 AM IST (Updated: 25 Sept 2018 1:07 AM IST)
t-max-icont-min-icon

தமிழகத்தில் அனைத்து மட்டத்திலும் ஊழல் பெருகிவிட்டது என்று இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் திருப்பூரில் கூறினார்.

திருப்பூர்,

இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாநில நிர்வாக குழு கூட்டம் திருப்பூரில் உள்ள ஒரு ஓட்டலில் நேற்று நடைபெற்றது. கூட்டத்துக்கு மாநில பொருளாளர் ஆறுமுகம் தலைமை தாங்கினார். மாநில செயலாளர் முத்தரசன் மத்திய, மாநில அரசுகளின் மக்கள் விரோத நடவடிக்கை குறித்தும், அடுத்தகட்ட ஆயத்தப்பணிகளில் ஈடுபடுவது தொடர்பாகவும் ஆலோசனை நடத்தினார். மாநில துணை செயலாளர் வீரபாண்டி, ஏ.ஐ.டி.யு.சி. மாநில தலைவர் சுப்பராயன், திருப்பூர் மாவட்ட செயலாளர் ரவி உள்பட மாநில நிர்வாக குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

பின்னர் இதுகுறித்து மாநில செயலாளர் முத்தரசன் நிருபர்களிடம் கூறியதாவது:-

பிரதமர் மோடி தனது மந்திரிகள் ஊழல் செய்யவில்லை என்று கூறி வருகிறார். ஆனால் பிரான்ஸ் நாட்டுடன் ரபேல் போர் விமானம் வாங்க போடப்பட்ட ஒப்பந்தத்தில் முறைகேடு நடந்துள்ளது தெரியவந்திருக்கிறது. ஆனால் பிரதமர் மோடி இதுவரை அதுபற்றி வாய் திறக்காமல் உள்ளார். பா.ஜனதா அரசு நாடு முழுவதும் ஆர்.எஸ்.எஸ். கொள்கையை கொண்டு வருவது பேராபத்தானது.

முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான தமிழக அரசு, அரசையும், காவல்துறையையும் விமர்சித்து பேசியவர்களை கைது செய்து நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. ஆனால் பா.ஜனதாவை சேர்ந்த எச்.ராஜா, எஸ்.வி.சேகர் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டும் இதுவரை அவர்கள் கைது செய்யப்படவில்லை. அனைவருக்கும் ஒரே சட்டத்தை அமல்படுத்த தமிழக அரசு அஞ்சுவது ஏன்?. மோடி அரசை கண்டு அஞ்சுவது ஏன்?. தமிழக அமைச்சர்கள் மீது ஊழல் குற்றச்சாட்டுகள் பெருகி வருகிறது. வருமானவரித்துறை, சி.பி.ஐ. போலீசார், லஞ்ச ஒழிப்பு போலீசார் அமைச்சர் மற்றும் காவல்துறை உயர் அதிகாரிகளின் வீடுகளில் தொடர்ந்து சோதனை நடத்தி வருகிறார்கள்.

தமிழகத்தில் அனைத்து மட்டத்திலும் ஊழல் பெருகிவிட்டது. சட்டம், ஒழுங்கு பிரச்சினை பாதிக்கப்பட்டுள்ளது. ஆளும்கட்சிக்கு அவர்களுடைய எம்.எல்.ஏ.க்களே எதிர்ப்பு தெரிவிக்கிறார்கள். அமைச்சர்களுடன் ஒருங்கிணைந்த முடிவு இல்லை. பொதுமக்களின் ஆதரவையும் அரசு இழந்து வருகிறது. இதற்கு தார்மீக பொறுப்பேற்று தமிழக அரசு உடனடியாக ராஜினாமா செய்ய வேண்டும் என்று இந்திய கம்யூனிஸ்டு கட்சி கேட்டுக்கொள்கிறது. ஆளுங்கட்சியினர் தங்கள் மீதுள்ள குற்றச்சாட்டுகளை திசை திருப்பும் வகையில் ஆர்ப்பாட்டம், பொதுக்கூட்டத்தை நடத்துகிறார்கள்.

ராஜீவ்காந்தி கொலை வழக்கில் சம்பந்தப்பட்ட 7 பேரையும் விடுதலை செய்ய வேண்டும் என்பதே இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் நிலைபாடு ஆகும். 7 பேர் விடுதலை தொடர்பாக மாநில அரசு முடிவு செய்யலாம் என்று சுப்ரீம் கோர்ட்டு தெரிவித்தது. தமிழக அரசும் தீர்மானம் நிறைவேற்றி கவர்னருக்கு அனுப்பி விட்டது. கவர்னர் உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். மத்திய அரசின் பிரதிநிதியாக கவர்னர் இருக்கிறார். இதை அரசியல் ஆக்காமல், பா.ஜனதா அரசு பழிவாங்கும் நடவடிக்கையை மேற்கொள்ளக்கூடாது. இதுபோல் 25 ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் இருக்கும் முஸ்லிம் கைதிகளை விடுதலை செய்ய வேண்டும்.

தாமிரபரணி நதி நெல்லை, தூத்துக்குடி, விருதுநகர் மாவட்டங்களுக்கு குடிநீர் ஆதாரமாக இருந்து வருகிறது. இந்த நதி சாதி, மத, இன, நிற அடையாளங்களை கடந்து அனைத்து சமுதாய மக்களுக்கும் சொந்தமானது. தாமிரபரணி மகாபுஷ்கரம் விழாவில் லட்சக்கணக்கான மக்கள் கூடுவார்கள் எனவும் இந்துத்துவா வாதிகள் அறிவித்துள்ளார்கள். அடுத்த மாதம் 12-ந் தேதி முதல் 23-ந் தேதி வரை இந்த விழா நடப்பதாகவும், அரசுகள் உதவ வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளனர். 127 படித்துறைகளில் இந்த விழா நடைபெறும் எனவும், இறுதிநாளில் தாமிரபரணி சிலைக்கு பூஜை நடைபெறும் எனவும் அறிவித்துள்ளார்கள். தாமிரபரணி நதியை பாதுகாக்க, நதியை ஒரு மதத்துக்கு சொந்தமாக மாற்ற அனுமதிக்கக்கூடாது. மத மோதல்களுக்கு வழி வகுக்கும் இந்த நடவடிக்கைகளுக்கு மத்திய, மாநில அரசுகள் இடம் தரக் கூடாது என்று கேட்டுக்கொள்கிறோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story