மதுரை– நத்தம் 4 வழிச்சாலைக்காக கையகப்படுத்தப்படும் நிலத்திற்கு உரிய இழப்பீடு வேண்டும், கலெக்டரிடம் விவசாயிகள் கோரிக்கை
மதுரை– நத்தம் 4 வழிச்சாலைக்காக கையகப்படுத்தப்படும் நிலத்திற்கு உரிய இழப்பீடு வேண்டும் என்று கலெக்டரிடம் விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.
மதுரை,
மதுரை கலெக்டர் அலுவலகத்தில் நேற்று மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடந்தது. மாடக்குளம் மற்றும் பழங்காநத்தம் பகுதி மக்கள் கலெக்டர் நடராஜனிடம் கொடுத்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:–
வைகை அணையில் இருந்து தண்ணீர் திறந்தால் மாடக்குளம் கண்மாய்க்கு மொட்ட கழுங்கில் இருந்து மாடக்குளம் கால்வாயில் உள்ள 2 ஷட்டர்கள் வழியாகவும், நிலையூர் கால்வாய் வழியாக வடிவேல்கரை மதகு வழியாகவும் தண்ணீர் வரும். ஆனால் தற்போது மாடக்குளம் கண்மாயில் உள்ள 1 ஷட்டர் மட்டுமே திறக்கப்பட்டு உள்ளது. இதுதொடர்பாக பொதுப்பணித்துறை அதிகாரிகளிடம் முறையிட்டும் பலனில்லை. மேலும் வடிவேல்கரை மதகுகளின் வழியாக மாடக்குளம் கண்மாய்க்கு வரும் நீரை சில தனி நபர்கள் ஷட்டரை உடைத்து, கான்கிரீட் கலவை கொட்டி அடைத்து வைத்துள்ளார்கள். இதுகுறித்து அதிகாரிகளுடன் நடந்த பேச்சுவார்த்தையின் போது கான்கீரிட் கலவை அகற்றப்படும் என்றும், மாடக்குளம் கால்வாயின் மற்றொரு ஷட்டர் மூலம் தண்ணீர் திறக்கப்படும் என்று உறுதி அளித்தார்கள். ஆனால் இதுவரை நடவடிக்கைஎடுக்கவில்லை. எனவே கலெக்டர் தலையீட்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
மக்கள் சட்ட உரிமை இயக்க மாநில அமைப்பு செயலாளர் ஜெகநேசன் தலைமையில் கொடுக்கப்பட்ட மனுவில், ‘‘வாரந்தோறும் திங்கட்கிழமையன்று நடக்கும் மனுநீதி நாள் முகாமில் பொதுமக்கள் கொடுக்கும் மனுக்கள் மீது உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும். குறிப்பாக ஊரகத்துறை, வருவாய்த்துறை, கல்வித்துறை, விவசாயத்துறை, சமூகநலத்துறை, அரசு கேபிள் துறை, காவல்துறை, கனிம துறை, மின்சார துறை ஆகிய துறைகள் மீது கொடுக்கப்படும் மனுக்கள் மீது உரிய காலத்தில் நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் லஞ்ச ஊழலுக்கு அப்பாற்பட்டு சமூக நலத்திட்டங்கள் செயல்படுவதை கலெக்டர் உறுதி செய்ய வேண்டும்‘‘ என்று கூறப்பட்டு இருந்தது.
மக்கள் பாதை அமைப்பின் கூடுதல் ஒருங்கிணைப்பாளர் விவேக் கலெக்டரிடம் கொடுத்த மனுவில், ‘‘எங்கள் அமைப்பு தமிழுக்கு அமுதென்று பேர் திட்டத்தின் கீழ் தமிழ் கையெழுத்து இயக்கத்தை நடத்துகிறது. கடந்த 1978–ம் ஆண்டு வெளியிடப்பட்ட அரசாணையில் அரசு பணியாளர்கள் தமிழில் கையொப்பம் போட வேண்டும் என்று உள்ளது. ஆனால் இந்த அரசாணை பின்பற்றப்படவில்லை. மாவட்டத்தில் உள்ள அரசு அலுவலகங்களில் பதியப்படும் பதிவேடுகள், கடிதங்கள், ஆணைகள், அறிக்கைகள், நாட்குறிப்புகள், பெயர் பலகைகள், முத்திரை போன்ற அனைத்தும் தமிழில் இருக்க வேண்டும்‘‘ என்று கூறப்பட்டு இருந்தது.
விராத் இந்துஸ்தான் சங்கம் மாவட்ட தலைவர் சசிகுமார் கொடுத்துள்ள மனுவில், ‘‘மேலூரில் ஒரு போக விவசாய நிலம் உள்ளது. நாவினிப்பட்டியில் இருந்து தினமும் 220 கனஅடி தண்ணீர் வர வேண்டும். ஆனால் தற்போது வெறும் 96 கன அடி நீர் மட்டுமே வருகிறது. எங்கள் பகுதிக்கான நீர் பி.டி.ஆர். மற்றும் ஓ.பி.எஸ். கால்வாயில் திருப்பி விடப்பட்டுள்ளது. எனவே முறையற்று இந்த கால்வாயில் செல்லும் நீரை தடுத்து நிறுத்தி எங்களுக்கான நீரை வழங்க வேண்டும்.‘‘ என்று கூறப்பட்டுள்ளது.
மக்கள் நீதி மய்யம் கட்சியின் மாவட்ட பொறுப்பாளர் மணி கொடுத்துள்ள மனுவில், ‘‘வருகிற 2–ந் தேதி நடைபெற உள்ள கிராம சபை கூட்டத்தை முறையாக நடத்துவதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். அதன்படி 7 நாட்களுக்கு முன்பு முறையான அறிவிப்பு வெளியிட வேண்டும். வரவு–செலவு தொடர்பான அனைத்து விவரங்களையும் மக்கள் பார்வைக்காக வைக்க வேண்டும். கிராம சபை கூட்டத்தை வீடியோ எடுக்க வேண்டும். கிராம நலன் கருதி மக்கள் போடும் தீர்மானங்களை அதிகாரிகள் நிறைவேற்றி தர வேண்டும். தீர்மானம் பதிவு செய்யப்பட்டு அனைவரது கையொப்பமும் பெற வேண்டும். தீர்மான நகலை கேட்பவர்களுக்கு அதனை தாமதமின்றி வழங்க வேண்டும்‘‘ என்று கூறப்பட்டுள்ளது.
மதுரை வடக்கு வட்ட விவசாயிகள் சார்பில் ஜெயக்குமார் என்பவர் கொடுத்த மனுவில் கூறியிருப்பதாவது:–
மதுரை வடக்கு வட்டத்தில் மந்திகுளம், பெரியபட்டி, காவனூர், சின்னப்பட்டி, சத்திரப்பட்டி, மஞ்சம்பட்டி ஆகிய கிராமங்களில் உள்ள நஞ்சை நிலங்கள் 4 வழிச்சாலை பணிக்காக நில ஆர்ஜிதம் செய்யப்படுகிறது. இந்த நிலங்களுக்கு உரிய முறையில் விலை நிர்ணயம் செய்யப்படவில்லை. அதேபோல் அடுத்தடுத்து உள்ள நிலங்களுக்கான மதிப்பீட்டில் மாறுபாடாக உள்ளது. ஒரே புல எண்களில் ஒரு எண்ணுக்கு உள்ள நிலத்திற்கு சதுர மீட்டருக்கு ரூ,2,600–ம், மற்ற எண்ணுக்குரியது ரூ.113–ம் என உள்ளது. புஞ்சை நிலத்திற்கு சதுர மீட்டருக்கு ரூ.40 விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. மேலும் இந்த நிலங்களில் உள்ள மரங்கள் கணக்கில் எடுக்கப்படவில்லை. பெரியாறு பாசன நிலங்களுக்கு தகுந்த முறையில் ஆய்வு செய்து இழப்பீடு வழங்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
அகில பாரத இந்து மகாசபா பூசாரி பேரவையின் மதுரை மாவட்ட அமைப்பு செயலாளர் தெய்வேந்திரன் கொடுத்துள்ள மனுவில், பூசாரிகள், பொருளாதார ரீதியாக மிகவும் பின்தங்கிய நிலையில் உள்ளனர். நிரந்தர வருமானம் இல்லாமல் வாழ்கையோடு போராடி வருகின்றனர். அவர்களுக்கான ஓய்வூதிய திட்டங்கள் எதுவும் செயல்படவில்லை. கோவில் பூசாரிகளுக்கு மாதம் தோறும் ஊக்கத்தொகை ரூ.5 ஆயிரம் வழங்க வேண்டும். நலவாரியத்தின் மூலம் கோவில் பூசாரிகளுக்கான சலுகைகள் உடனடியாக வழங்கப்பட வேண்டும். மதுரை மாவட்டத்தில் உள்ள கோவில்களில் பணியாற்றி ஓய்வுபெற்ற கிராம கோவில் பூசாரிகளுக்கு ஓய்வூதியத்திட்டத்தின்படி ஒவ்வொரு மாதமும் ஆயிரம் ரூபாய் வழங்கப்படுகிறது. இதனை ரூ.2 ஆயிரமாக உயர்த்தி வழங்க வேண்டும்.‘‘ என்று கூறப்பட்டுள்ளது.