பெங்களூருவில் மூடப்பட்ட சாலை குழிகளை ஆய்வு செய்ய 2 பேர் குழு நியமனம்


பெங்களூருவில் மூடப்பட்ட சாலை குழிகளை ஆய்வு செய்ய 2 பேர் குழு நியமனம்
x
தினத்தந்தி 25 Sept 2018 3:45 AM IST (Updated: 25 Sept 2018 1:21 AM IST)
t-max-icont-min-icon

பெங்களூருவில் மூடப்பட்ட சாலை குழிகளை ஆய்வு செய்ய 2 பேர் அடங்கிய குழுவை நியமித்தும், அவர்கள் ஆய்வு அறிக்கையை இன்றே (செவ்வாய்க்கிழமை) தாக்கல் செய்யவும் கர்நாடக ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

பெங்களூரு,

பெங்களூருவில் சாலைகளில் குழிகளை மூட மாநகராட்சிக்கு உத்தரவிட கோரி கர்நாடக ஐகோர்ட்டில் பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவை விசாரித்த தலைமை நீதிபதி தினேஷ் மகேஸ்வரி தலைமையிலான அமர்வு விசாரித்தது. பெங்களூருவில் 4 நாட்களில் சாலைகளில் உள்ள அனைத்து குழிகளையும் மூட வேண்டும் என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர். அதன்படி பெரும்பாலான பகுதிகளில் குழிகளை மாநகராட்சி அதிகாரிகள் தார் போட்டு மூடியுள்ளனர்.

இந்த நிலையில் இந்த வழக்கு ஐகோர்ட்டில் நேற்று தலைமை நீதிபதி தினேஷ் மகேஸ்வரி தலைமையிலான அமர்வு முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது மாநகராட்சி சார்பில் வக்கீல் ஸ்ரீநிதி ஆஜரானார். மேலும் மாநகராட்சி அதிகாரிகளும் ஆஜராகி இருந்தனர். அப்போது அந்த அதிகாரிகளை பார்த்து பேசிய தலைமை நீதிபதி, இதுவரை எத்தனை சாலைகளில் குழிகளை மூடி இருக்கிறீர்கள்?. என்று கேள்வி கேட்டார்.

அதற்கு பதிலளித்த அதிகாரிகள், 99 சதவீத குழிகளை மூடி இருக்கிறோம் என்று பதிலளித்தனர். மீண்டும் பேசிய தலைமை நீதிபதி, அப்படி என்றால் சாலைகளில் குழிகளே இல்லாத 2 தொகுதிகளை இங்கே குறிப்பிடுங்கள் என்றார். அதற்கு அதிகாரிகள், மல்லேசுவரம் மற்றும் மகாலட்சுமி லே-அவுட் ஆகிய 2 தொகுதிகளில் குழிகளே இல்லை என்று கூறினர். இதையடுத்து தலைமை நீதிபதி, சாலைகளில் குழிகள் மூடப்பட்டுள்ளதா? என்பதை ஆய்வு செய்ய, சட்ட சேவைகள் ஆணைய உறுப்பினர் செயலாளர் உமா, என்ஜினீயரிங் பிரிவை சேர்ந்த தினேஷ் அகர்வால் ஆகியோரை கொண்ட ஒரு குழு அமைக்கப்படுகிறது.

இந்த குழு இன்று (அதாவது நேற்று) மாலை அந்த 2 தொகுதிகளுக்கு சென்று 18 வார்டுகளில் சாலைகளை ஆய்வு செய்யும். தரமான முறையில் குழிகள் மூடப்பட்டுள்ளதா? என்பது குறித்து ஆய்வு செய்ய வேண்டும் என்று அந்த குழுவுக்கு தலைமை நீதிபதி உத்தரவிட்டார்.

மேலும் நாளையே (அதாவது இன்று) அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும் என்று தலைமை நீதிபதி அதிரடியாக உத்தரவு பிறப்பித்தார். இந்த ஆய்வு பணியின்போது, அந்த குழுவுக்கு தகுந்த போலீஸ் பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று நகர போலீஸ் கமிஷனருக்கு தலைமை நீதிபதி உத்தரவிட்டார்.

Next Story