அரசு வழங்கிய நிலத்தை அபகரிக்க முயற்சி தொழிலாளி தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு
அரசு வழங்கிய இலவச பட்டா நிலத்தை அபகரிக்க முயன்று தாக்கியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி வாலிபர் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.
ராமநாதபுரம்,
ராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடி அண்ணாநகர் பகுதியை சேர்ந்தவர் சசிக்குமார். கூலித்தொழிலாளியான இவர் நேற்று காலை கலெக்டர் அலுவலகத்திற்கு வந்து திடீரென உடலில் மண்எண்ணெய் ஊற்றி தற்கொலைக்கு முயன்றார். அங்கிருந்த தீயணைப்பு துறையினர் அவரை உடனடியாக மீட்டனர். இதுகுறித்து சசிக்குமார் கூறியதாவது:– எனக்கு கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்னர் ஆதிதிராவிடர் நலத்துறை மூலம் இலவச வீட்டுமனை பட்டா வழங்கப்பட்டது. என்னைபோல அந்த பகுதியில் 80 பேருக்கு இலவச பட்டா வழங்கப்பட்டுள்ளது. இந்த நிலத்தில் நான் குடிசை வீடு போட்டு எனது மனைவி பக்கிரி அம்மாள் மற்றும் குழந்தைகளுடன் இத்தனை ஆண்டு காலம் வசித்து வந்தேன்.
இந்த நிலையில் எனது நிலத்தின் ஒரு பகுதியினை முறையாக அளந்து பார்க்காமல் செல்வக்குமார் என்பவருக்கு பட்டா வழங்கி உள்ளனர். இதன்படி நிலத்தினை பெற்றுக்கொண்ட செல்வக்குமார் என்பவர் எனது நிலத்தினை தனது நிலம் என்று கூறி ஆக்கிரமிக்க வந்தார். இதுகுறித்து சாயல்குடி போலீசில் புகார் செய்தபோது போலீசார் நடவடிக்கை எடுக்கவில்லை.
மேலும் செல்வக்குமார் தரப்பினர் ஆட்களுடன் வந்து எனது மனைவியை தள்ளி காயப்படுத்திவிட்டு வீட்டினை தரைமட்டமாக்கி விட்டனர். காயமடைந்த எனது மனைவியை ராமநாதபுரம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்துள்ளேன். இந்த சம்பவம் தொடர்பாக சாயல்குடி போலீசில் புகார் செய்தும் பலனில்லை. மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் மனு கொடுத்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே, இனியும் வாழ வழியில்லை என்று நியாயம் கேட்டு தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்தேன். இவ்வாறு அவர் கூறினார். இதனை தொடர்ந்து அவரை கேணிக்கரை போலீசார் விசாரணைக்கு அழைத்து சென்றனர். தொழிலாளி மண்எண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயன்ற சம்பவம் கலெக்டர் அலுவலக வளாக பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.