நெட்டப்பாக்கத்தில் துணை தாலுகா அலுவலகம்; நாராயணசாமி திறந்துவைத்தார்
15 கிராமங்களை சேர்ந்த மக்கள் பயன்பெறும் வகையில் நெட்டப்பாக்கத்தில் துணை தாலுகா அலுவலகத்தை முதல்–அமைச்சர் நாராயணசாமி திறந்து வைத்தார்.
நெட்டப்பாக்கம்,
புதுவை மாநிலம் நெட்டப்பாக்கம் தொகுதியை சேர்ந்த நெட்டப்பாக்கம், மடுகரை, சூரமங்கலம், பண்டசோழநல்லூர், ஏம்பலம், கோர்க்காடு, கரிக்கலாம்பாக்கம் உள்பட 15 கிராமங்களை சேர்ந்த மக்கள் சாதி சான்றிதழ், வருமான சான்றிதழ் உள்பட வருவாய்த்துறையின் சான்றிதழ்கள் பெற பாகூர் தாலுகா அலுவலகத்துக்கு சென்று வந்தனர். இதனால் நேர விரயம் ஆவதுடன் போதுமான போக்குவரத்து வாகன வசதியின்றி மக்கள் அவதிப்பட்டனர்.
எனவே நெட்டப்பாக்கத்தில் தாலுகா அலுவலகம் அமைக்கவேண்டும் என்று கிராம மக்கள் நீண்ட நாட்களாக அரசுக்கு கோரிக்கை வைத்தனர். அதன்பேரில் நெட்டப்பாக்கம் காந்தி பூங்கா நூலக வளாகத்தில் துணை தாலுகா அலுவலகம் அமைக்கப்பட்டது. இதன் தொடக்க விழா நேற்று நடைபெற்றது.
விழாவுக்கு தொகுதி எம்.எல்.ஏ. விஜயவேணி வெங்கடேசன் தலைமை தாங்கினார். சிறப்பு அழைப்பாளராக முதல்–அமைச்சர் நாராயணசாமி கலந்துகொண்டு துணை தாலுகா அலுவலகத்தை குத்துவிளக்கு ஏற்றி தொடங்கிவைத்தார். பின்னர் பொதுமக்களுக்கு வருவாய்த்துறை சான்றிதழ் பெறுவதற்கான விண்ணப்ப படிவம் மற்றும் ஒருவருக்கு சாதி சான்றிதழ் வழங்கினார்.
விழாவில் சபாநாயகர் வைத்திலிங்கம், வருவாய்த்துறை அமைச்சர் ஷாஜகான், வில்லியனூர் சப்–கலெக்டர் உதயகுமார், பாகூர் தாசில்தார் கார்த்திகேயன், காங்கிரஸ் பொதுச்செயலாளர் ஏ.கே.டி.ஆறுமுகம் மற்றும் அரசு அதிகாரிகள், காங்கிரஸ் கட்சியினர் கலந்துகொண்டனர்.
முன்னதாக சுதந்திர போராட்ட தியாகி முத்துகுமரப்ப ரெட்டியாரின் பிறந்தநாளையொட்டி நெட்டப்பாக்கம் பூங்காவில் உள்ள அவரது சிலைக்கு முதல்–அமைச்சர் நாராயணசாமி, சபாநாயகர் வைத்திலிங்கம் ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். பின்னர் பள்ளி மாணவ–மாணவிகளுக்கு நோட்டு புத்தகம் வழங்கப்பட்டது.