சித்தராமையா தலைமையில் காங். எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் பெங்களூருவில் இன்று நடக்கிறது


சித்தராமையா தலைமையில் காங். எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் பெங்களூருவில் இன்று நடக்கிறது
x
தினத்தந்தி 25 Sept 2018 5:15 AM IST (Updated: 25 Sept 2018 1:59 AM IST)
t-max-icont-min-icon

பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் சித்தராமையா தலைமையில் காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் பெங்களூருவில் இன்று(செவ்வாய்க் கிழமை) நடக்கிறது.

பெங்களூரு,

கர்நாடகத்தில் காங்கிரஸ்-ஜனதா தளம்(எஸ்) கூட்டணி ஆட்சி நடக்கிறது. காங்கிரஸ் மற்றும் ஜனதா தளம்(எஸ்) கட்சிகளை சேர்ந்த சில எம்.எல்.ஏ.க்கள் பா.ஜனதாவுக்கு தாவ உள்ளதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன. காங்கிரசை சேர்ந்த சுமார் 18 எம்.எல்.ஏ.க்கள் மும்பை சென்று, பா.ஜனதாவின் கட்டுப்பாட்டில் இருக்க முடிவு செய்ததாகவும் கூறப்பட்டது.

அக்கட்சி எம்.எல்.ஏ.க்கள் சுதாகர், எம்.டி.பி.நாகராஜ் மற்றும் சுயேச்சை எம்.எல்.ஏ. நாகேஷ் ஆகிய மூன்று பேரும் கடந்த 22-ந் தேதி திடீரென சென்னைக்கு புறப்பட்டு சென்றனர். அவர்கள் மும்பை செல்வதாக தகவல்கள் வெளியாயின. இதுபற்றி அறிந்ததும் முன்னாள் முதல்-மந்திரி சித்தராமையா அவர்களை செல்போனில் தொடர்பு கொண்டு பேசி, பெங்களூரு திரும்பும்படி உத்தரவிட்டார்.

இதையடுத்து அவர்கள் மூன்று பேரும் உடனடியாக பெங்களூரு திரும்பினர். அவர்களை மந்திரிகள் நேரில் சந்தித்து, கட்சிக்கு எதிராக எந்த முடிவும் எடுக்க வேண்டாம் என்று அறிவுறுத்தினர். காங்கிரசை விட்டு விலக மாட்டோம் என்று அந்த எம்.எல்.ஏ.க்கள் அறிவித்தனர். இதன் காரணமாக கூட்டணி ஆட்சிக்கு எழுந்து சிக்கல் தற்காலிகமாக நீங்கியது.

ஆயினும், இந்த சிக்கல் இன்னும் முழுமையாக நீங்கவில்லை. ஆபரேஷன் தாமரை மூலம் அதிருப்தியில் உள்ள காங்கிரஸ் மற்றும் ஜனதா தளம்(எஸ்) கட்சிகளின் எம்.எல்.ஏ.க்களை இழுக்கும் முயற்சியை பா.ஜனதா தொடர்ந்து மேற்கொண்டு வருவதாக கூறப்படுகிறது. இந்த பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் இன்று(செவ்வாய்க்கிழமை) பெங்களூருவில் நடக்கிறது.

சட்டசபை காங்கிரஸ் குழு தலைவர் சித்தராமையா தலைமையில் நடைபெறும் இந்த கூட்டத்தில் கலந்து கொள்ளும்படி காங்கிரசின் அனைத்து எம்.எல்.ஏ.க் களுக்கும் தனித்தனியாக அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

Next Story