100 தண்டனை கைதிகள் முன்கூட்டியே விடுதலை மாநில அரசு முடிவு


100 தண்டனை கைதிகள் முன்கூட்டியே விடுதலை மாநில அரசு முடிவு
x
தினத்தந்தி 25 Sept 2018 3:15 AM IST (Updated: 25 Sept 2018 2:26 AM IST)
t-max-icont-min-icon

மகாத்மா காந்தியின் 150-வது பிறந்தநாளையொட்டி 100 தண்டனை கைதிகள் முன்கூட்டியே விடுதலை செய்யப்படுகின்றனர்.

மும்பை,

தேசத்தந்தை மகாத்மா காந்தியின் 150-வது பிறந்தநாள் விழா கொண்டாட்டம் வரும் அக்டோபர் 2-ந் தேதி தொடங்குகிறது. இதையொட்டி மகாத்மா காந்திக்கு மரியாதை செலுத்தும் வகையில் நாடு முழுவதும் மனிதாபிமானம், நன்னடத்தை அடிப்படையில் கைதிகள் விடுதலை செய்யப்படுகிறார்கள்.

மராட்டியத்தில் 2 பெண்கள் ஜெயில் உள்பட 54 சிறைச்சாலைகள் உள்ளன. இவற்றில் விசாரணை மற்றும் தண்டனை கைதிகள் அடைக்கப்பட்டு உள்ளனர். தகுதியின் அடிப்படையில் மராட்டியத்திலும் தண்டனை கைதிகளை முன்கூட்டியே விடுதலை செய்ய அரசு முடிவு செய்துள்ளது.

இதையடுத்து விடுதலை செய்ய தகுதியான கைதிகளை தேர்வு செய்ய 4 பேர் கமிட்டி அமைக்கப்பட்டது. இந்த கமிட்டியில் உள்துறை கூடுதல் தலைமை செயலாளர், சட்டம் மற்றும் நீதித்துறை முதன்மை செயலாளர், சிறைத்துறை போலீஸ் டி.ஜி.பி., சிறைத்துறை கூடுதல் டி.ஜி.பி. ஆகியோர் இடம்பெற்று இருந்தனர்.

இவர்கள் மாநிலம் முழுவதும் உள்ள 12 சிறைகளில் தண்டனை காலம் முடியும் முன்பே விடுதலை செய்ய தகுதியான சுமார் 100 கைதிகளை தேர்வு செய்து உள்ளனர். அதிகபட்சமாக நவிமும்பை தலோஜா ஜெயிலில் இருந்து 25 கைதிகள் விடுதலை செய்யப்பட உள்ளனர். இவர்களில் 2 பேர் பெண்கள் ஆவர். தேர்வு செய்யப்பட்ட கைதிகள் அக்டோபர் 2-ந் தேதி விடுதலை செய்யப்பட உள்ளனர்.

இது குறித்து சிறைத்துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:- தேர்வு செய்யப்பட்ட கைதிகள் அனைவரும் தண்டனை காலம் முடிவதற்கு 2 முதல் 4 ஆண்டுகளுக்கு முன்பு விடுதலை செய்யப்படுகின்றனர். இதுதவிர 2019-ம் ஆண்டு அக்டோபர் 2-ந் தேதி 2 குழுக்களாக தண்டனை கைதிகள் நன்னடத்தை அடிப்படையில் விடுதலை செய்யப்பட உள்ளனர். ஆனால் அது குறைந்த எண்ணிக்கையில் தான் இருக்கும். இவ்வாறு அவர் கூறினார்.

விதிகளின்படி நன்னடத்தை அடிப்படையில் விடுதலை செய்யப்பட இருப்பவர் 60 வயதுக்கு மேல் இருக்கவேண்டும். பெண்கள் 55 வயதுக்கு மேல் இருக்கவேண்டும். கொலை, கற்பழிப்பு, நரபலி போன்ற பயங்கர குற்றங்களிலோ அல்லது பொடா, தடா உள்ளிட்ட சட்டப்பிரிவுகளின் கீழ் தண்டனை பெற்றவராகவோ இருக்க கூடாது என்பது குறிப்பிடத்தக்கது.

Next Story