மேட்டூர் உபரிநீர் கால்வாய் திட்டத்திற்கு நிலம் கொடுக்க விவசாயிகள் முன்வர வேண்டும் அமைச்சர் பேச்சு


மேட்டூர் உபரிநீர் கால்வாய் திட்டத்திற்கு நிலம் கொடுக்க விவசாயிகள் முன்வர வேண்டும் அமைச்சர் பேச்சு
x
தினத்தந்தி 25 Sept 2018 4:30 AM IST (Updated: 25 Sept 2018 2:32 AM IST)
t-max-icont-min-icon

மேட்டூர் உபரிநீர் கால்வாய் இணைப்பு திட்டத்திற்கு தேவைப்படும் பட்டா நிலங்களை வழங்க விவசாயிகள் முன்வர வேண்டும் என ஆய்வு கூட்டத்தில் அமைச்சர் டாக்டர் சரோஜா கூறினார்.

ராசிபுரம்,

ராசிபுரம் அருகே உள்ள வெண்ணந்தூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் மேட்டூர் வெள்ள உபரிநீர் கால்வாய் திட்டம் குறித்த ஆய்வு கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு சமூக நலன் மற்றும் சத்துணவு திட்டத்துறை அமைச்சர் டாக்டர் சரோஜா தலைமை தாங்கினார். பொதுப்பணித்துறை திட்ட உருவாக்க செயற்பொறியாளர் பிரகாஷ், உதவி செயற்பொறியாளர் ஜானகி ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் அமைச்சர் டாக்டர் சரோஜா பேசியதாவது:-

முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஒரு விவசாய குடும்பத்தை சேர்ந்தவர் என்பது அவர் அறிவிக்கும் ஒவ்வொரு திட்டத்தில் இருந்தே தெரியும். அவர் அறிவித்து உள்ள மேட்டூர் வெள்ள உபரிநீர் கால்வாய் திட்டமும் விவசாயிகளுக்கான திட்டம் தான். இதன்மூலம் மேட்டூரில் இருந்து வெளியேறும் உபரிநீர் வீணாகாமல் விவசாயத்திற்கு பயன்பெறும். இந்த திட்டத்தின்படி கால்வாயானது சுமார் 2 ஆயிரத்து 200 ஏக்கர் பட்டா நிலங்கள், 243 ஏக்கர் வனத்துறை நிலங்கள் வழியாக செல்கிறது. இதன்மூலம் 16 ஆயிரத்து 740 ஏக்கர் நிலம் பாசன வசதி பெறும்.

எனவே அந்த திட்டத்திற்கு தேவைப்படும் பட்டா நிலங்களை வழங்க விவசாயிகள் முன்வர வேண்டும். இது குறித்து விவசாய சங்கத்தினர் அந்தந்த பகுதி விவசாயிகளோடு கலந்து பேசி திட்டத்தை செயல்படுத்த உதவ வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

இதையடுத்து திட்டத்தை செயல்படுத்த உறுதுணையாக இருப்பதாக விவசாயிகள் தெரிவித்தனர். மேலும் பிற பகுதிகளில் உள்ள மக்கள் பிரதிநிதிகள் அந்தந்த பகுதி விவசாயிகளோடு பேசி திட்டத்தை விரைந்து செயல்படுத்த உரிய ஏற்பாடு செய்ய வேண்டும் என அமைச்சரிடம், விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர். இது குறித்து முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியிடம் எழுத்துப்பூர்வமாக கடிதம் கொடுத்து உரிய அனுமதி பெற்று அதற்கான நடவடிக்கைகளை எடுப்பதாக அமைச்சர் சரோஜா தெரிவித்தார்.

அதைத்தொடர்ந்து நிருபர்களிடம் அமைச்சர் டாக்டர் சரோஜா கூறியதாவது:-

முதல்-அமைச்சர் மற்றும் துணை முதல்-அமைச்சர் ஆகியோர் ஆணையின்படி மேட்டூர் வெள்ள உபரிநீர் கால்வாய் இணைப்பு திட்டத்திற்கு சரபங்கா நதி, திருமணிமுத்தாறு, கரைகொட்டனார் ஆகிய ஆறுகளோடு இணைத்து வறண்ட ஏரிகளுக்கு நீர் வழங்கும் திட்டத்தின் ஆய்வு பொதுப்பணித்துறை திட்ட உருவாக்கப் பிரிவின் கீழ் நடந்தது.

இது மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதா இதயத்தில் உதித்த திட்டம். தற்போது முதல்-அமைச்சர் மற்றும் துணை முதல்-அமைச்சர் ஆகியோர் இந்த திட்டத்திற்கு ஒரு விரிவான அறிக்கையை தயார் செய்ய உத்தரவிட்டதன் பேரில் அது ஆய்வில் உள்ளது. இதன் தொடக்கமாக 6 ஆயிரத்து 800 கோடி ரூபாய் மதிப்பில் திட்டம் தயாரிக்கப்பட்டு ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதன்மூலம் சேலம், நாமக்கல், திருச்சி மாவட்டங்களில் உள்ள 98 ஏரிகள் பயனடையும் வகையில் திட்டம் தயாரிக்கப்பட்டு வருகிறது. இந்த திட்டத்தால் நாமக்கல் மாவட்டம் அதிகம் பயன்பெறும். குறிப்பாக ராசிபுரத்தில் 10-க்கும் மேற்பட்ட ஏரிகள் பயன்பெற உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

முன்னதாக ஆய்வு கூட்டத்தில் மேட்டூர் வெள்ள உபரிநீர் கால்வாய் இணைப்பு திட்டம் குறித்த வரைபடத்தை கொண்டு திட்டம் தொடர்பான தகவல்களை அமைச்சர் சரோஜாவிடம், அதிகாரிகள் விளக்கினர்.

கூட்டத்தில் உதவி பொறியாளர்கள் குமரவேல், திலகம் மற்றும் வட்டார வளர்ச்சி அலுவலர்கள், வெண்ணந்தூர் அ.தி.மு.க. ஒன்றிய செயலாளர் வக்கீல் தாமோதரன், பேரூர் அ.தி.மு.க. செயலாளர் எஸ்.என்.கே.பி.செல்வம், அத்தனூர் பேரூராட்சி முன்னாள் தலைவர் ராமதாஸ், பேரூர் செயலாளர் செழியன், அரசியல் கட்சி பிரமுகர்கள் மற்றும் விவசாயிகள் சங்க பிரதிநிதி குழந்தைவேல் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Next Story