தூய்மை பணியாளர்களுக்கு கூலியை உயர்த்தி வழங்க வேண்டும்
தூய்மை பணியாளர்களுக்கு கூலியை உயர்த்தி வழங்க வேண்டும் என நெல்லையில் நடந்த மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் கலெக்டர் ஷில்பாவிடம் கோரிக்கை மனு கொடுக்கப்பட்டது.
நெல்லை,
நெல்லை மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள வளர்ச்சி மன்ற கூட்டரங்கில் மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் நேற்று நடந்தது. கலெக்டர் ஷில்பா தலைமை தாங்கி பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்களை வாங்கினார்.
இந்து முன்னணி மாவட்ட பொதுச்செயலாளர் பிரம்மநாயகம் தலைமையில் கலெக்டரிடம் கொடுத்த மனுவில், “நெல்லை பேட்டை திருவேங்கடநாதபுரம் வெங்கடாசலபதி கோவிலில் புரட்டாசி சனிக்கிழமையில் கூடுதலாக தரிசன கட்டணம் வசூல் செய்கிறார்கள். இதுபற்றி கேட்டால் கோவில் நிர்வாகிகள் சரியாக பதில் சொல்வது இல்லை. எனவே ஆலய கட்டணத்தை ரத்து செய்து விட்டு, இலவச தரிசனத்துக்கு ஏற்பாடு செய்ய வேண்டும்“ என்று கூறப்பட்டுள்ளது.
மாவீரர் சுந்தரலிங்கனார் மக்கள் இயக்க தலைவர் மாரிப்பாண்டியன் தலைமையில், தூய்மை பணியாளர்கள் திரண்டு வந்தனர். அவர்கள் கலெக்டரிடம் கொடுத்த மனுவில், “நெல்லை மாவட்டத்தில் பஞ்சாயத்து அளவில் தூய்மை பாரத இயக்க பணிகள் நடந்து வருகின்றன. இதில் பணியாற்றும் தூய்மை பணியாளர்களுக்கு தினந்தோறும் ரூ.80 கூலி வழங்கப்படுகிறது. இந்த கூலி கடந்த 3 மாதங்களாக வழங்கப்படவில்லை. நிறுத்தி வைக்கப்பட்ட கூலியை உடனடியாக வழங்க வேண்டும். மேலும் குறைந்தபட்ச சம்பளம் ரூ.224 வழங்க வேண்டும்“ என்று கூறப்பட்டுள்ளது.
தமிழ்நாடு விவசாயிகள் சங்க தலைவர் மாடசாமி தலைமையில் விவசாயிகள் கலெக்டர் அலுவலகத்துக்கு முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தினர். பின்னர் அவர்கள் கலெக்டரிடம் மனு கொடுத்தனர். அதில், “வீரகேரளம்புதூர் அருகே இரட்டைகுளம் உள்ளது. இந்த குளத்தில் இருந்து ஊத்துமலை பெரியகுளம் வரை 8 குளங்கள் உள்ளன. இந்த குளங்களில் போதிய அளவு தண்ணீர் நிரம்பவில்லை. புதிய கால்வாய் வெட்டினால் தான் மழைக்காலங்களில் மேற்கண்ட குளங்கள் நிரம்பும். விவசாயிகளின் நலன் கருதி புதிய கால்வாய் வெட்டுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்“ என்று கூறப்பட்டுள்ளது.
திராவிட தமிழர் கட்சியின் நெல்லை மாவட்ட தலைவர் ஆதவன் தலைமையில் கலெக்டரிடம் கொடுத்த மனுவில், “சங்கரன்கோவில் அருகே உள்ள வீரசிகாமணி அருந்ததியர் தெருவில் 50-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் உள்ளன. அந்த பகுதியில் பொதுப்பாதை உள்ளது. அதை நாங்கள் பல ஆண்டுகளாக பயன்படுத்தி வருகிறோம். தற்போது சிலர் அந்த பாதையை ஆக்கிரமிப்பு செய்துள்ளனர். அதை அகற்ற வேண்டும். ஆக்கிரமிப்பு செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்“ என்று கூறப்பட்டுள்ளது.
பாளையங்கோட்டை வீரமாணிக்கபுரத்தை சேர்ந்த பொதுமக்கள் கலெக்டரிடம் மனு கொடுத்தனர். அதில், “எங்கள் பகுதியில் நடக்கக் கூடிய சுபநிகழ்ச்சி, சமுதாயத்தில் நடக்கக்கூடிய கூட்டங்கள், திருமண நடத்த கட்டிடம் இல்லை. வெளிப்பகுதிக்கு சென்று நடத்துவதால் அதிக பணம் செலவாகிறது. எங்கள் பகுதியில் அரசு நிலமும், ஊருக்கு பாத்தியப்பட்ட நிலமும் இருக்கிறது. அந்த நிலத்தில் வணிகவளாகமும், சமுதாயக்கூடமும் கட்டி தர வேண்டும்“ என்று கூறப்பட்டுள்ளது.
தமிழ்நாடு வாடகை வாகன உரிமையாளர்கள் சங்க மாநில தலைவர் சந்தோஷம் தலைமையில் டிரைவர்கள் கொடுத்த மனுவில், “நெல்லை மாவட்டத்தில் 5 ஆயிரம் வாடகை வாகனங்கள் உள்ளன. ஆண்டுதோறும் எப்.சி., பெர்மிட் மற்றும் இன்சூரன்ஸ் உள்ளிட்டவைகளை செலுத்தி வருகிறோம். சிலர் சொந்தமாக கார் வைத்து இருப்பவர்கள் வாடகைக்கு விடுகிறார்கள். இதனால் எங்கள் தொழில் பாதிக்கப்படுகிறது. சொந்தமாக கார் வைத்து இருப்பவர்களை வாடகை விடுவதற்கு தடை விதிக்க வேண்டும்“ என்று கூறப்பட்டுள்ளது.
இந்திய ஜனநாயக வாலிபர் சங்க கிளை செயலாளர் வினோத் தலைமையில் கலெக்டரிடம் மனு கொடுத்தனர். அதில், “இடிந்தகரை ரேஷன் கடைகளில் ரேஷன் பொருட்களை முறைப்படுத்தி வழங்க வேண்டும். அங்குள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தை சீரமைக்க வேண்டும். ராதாபுரம் பகுதியில் பொதுமக்களுக்கு இடையூறாக உள்ள டாஸ்மாக் கடையை அகற்ற வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.
சுரண்டை அருகே ஆணைகுளத்தை சேர்ந்த பொதுமக்கள் கலெக்டரிடம் கொடுத்த மனுவில், சுரண்டையில் ஸ்ரீசெட்டி மாடன் கோவிலில் அனைத்து சமுதாய மக்களும் வழிபட்டு வருகிறோம். அந்த பகுதியில் ஒரு விநாயகர் கோவில் அமைக்கப்பட்டது. அந்த பகுதியில் சிலர் ஆக்கிரமிப்பு செய்ய முயற்சி செய்கிறார்கள். அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்“ என்று கூறப்பட்டுள்ளது.
முக்கூடல் அருகே உள்ள மேலபாப்பாக்குடியை சேர்ந்த சங்கர் மனைவி செல்வி (வயது 24) என்பவர் கலெக்டரிடம் மனு கொடுத்தார். அந்த மனுவில், “எனக்கு கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்த போது வரதட்சணையாக 5 பவுன் நகை கொடுக்கப்பட்டது. தற்போது எனக்கு 10 மாத பெண் குழந்தை உள்ளது. எனது நகையை, கணவர் குடும்பத்தார் அபகரித்து கொண்டனர். கூடுதல் வரதட்சணை கேட்டு எனது கணவர் கொடுமைப்படுத்துகிறார். அதனால் நான் கணவரை பிரிந்து தாய் வீட்டுக்கு சென்று விட்டேன். குழந்தையையும் பறித்துக் கொண்டனர். எனது குழந்தையை மீட்டுத் தர வேண்டும். வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்திய கணவர், மாமியார் உள்ளிட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று கூறப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story