‘முத்தலாக்’ அவசர சட்டத்துக்கு தடை விதிக்க வேண்டும் ஐகோர்ட்டில் வழக்கு


‘முத்தலாக்’ அவசர சட்டத்துக்கு தடை விதிக்க வேண்டும் ஐகோர்ட்டில் வழக்கு
x
தினத்தந்தி 24 Sep 2018 10:45 PM GMT (Updated: 24 Sep 2018 9:15 PM GMT)

முஸ்லிம் மத ஆண்களை குறிவைக்கும் முத்தலாக் அவசர சட்டத்துக்கு தடை விதிக்க கோரி மும்பை ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

மும்பை,

முஸ்லிம் ஆண்கள் தங்கள் மனைவியை உடனடியாக விவாகரத்து செய்ய வகை செய்யும் ‘முத்தலாக்’ நடைமுறைக்கு எதிராக மத்திய அரசு சமீபத்தில் அவசர சட்டம் கொண்டு வந்தது.

இந்த அவசர சட்டத்துக்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் கடந்த வாரம் ஒப்புதல் அளித்தார்.

அவசர சட்டத்தில், முத்தலாக் நடைமுறையில் ஈடுபடுவோருக்கு 3 ஆண்டு சிறைத்தண்டனை விதிக்கப்படும். மேலும் பாதிக்கப்பட்ட பெண், தனது பிழைப்புக்கான வழிகேட்டு கோர்ட்டை அணுக முடியும். அத்துடன் தனது குழந்தைகளை கூடவே வைத்திருக்கும் உரிமையையும் கோர்ட்டு மூலம் பெற முடியும் போன்ற அம்சங்கள் இடம் பெற்றுள்ளன.

இந்த நிலையில் முத்தலாக் தொடர்பான அவசர சட்டத்தை எதிர்த்து மும்பை ஐகோர்ட்டில் முன்னாள் கவுன்சிலர் ஒருவர், தன்னார்வ தொண்டு நிறுவனம் மற்றும் வக்கீல் ஒருவர் இணைந்து மனு தாக்கல் செய்தனர்.

அந்த மனுவில், “மத்திய அரசு கொண்டுவந்துள்ள முத்தலாக்கிற்கு எதிரான அவசர சட்டம் முஸ்லிம் சமூகத்தை சேர்ந்த ஆண்களை குறிவைத்து கொண்டுவரப்பட்டுள்ளது. இந்த சட்டம் முஸ்லிம் ஆண்களின் அடிப்படை உரிமைக்கு எதிரானதாகும். முத்தலாக் கூறிய முஸ்லிம் கணவர்களை குற்றவியல் வழக்கின் கீழ்கொண்டுவர வழிவகை செய்யும் இந்த அவசர சட்டத்திற்கு தடை விதிக்கவேண்டும்” என்றார். இந்த மனு வரும் 28-ந் தேதி விசாரணைக்கு வர உள்ளது.

Next Story