கழுத்தை அறுத்து வாலிபர் கொலை: கள்ளக்காதலனுடன் சேர்ந்து மனைவி தீர்த்து கட்டினாரா?


கழுத்தை அறுத்து வாலிபர் கொலை: கள்ளக்காதலனுடன் சேர்ந்து மனைவி தீர்த்து கட்டினாரா?
x
தினத்தந்தி 24 Sep 2018 9:45 PM GMT (Updated: 24 Sep 2018 9:41 PM GMT)

தேவதானப்பட்டி அருகே, கள்ளக்காதலனுடன் சேர்ந்து கணவரின் கழுத்தை அறுத்து மனைவி கொலை செய்தாரா? என்று போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தேவதானப்பட்டி,


தேவதானப்பட்டி அருகே கொடைக்கானல் மலைப்பாதையில், பட்டறைப்பாறை என்னுமிடத்தில் கடந்த 18-ந்தேதி 30 வயதுடைய வாலிபர் ஒருவர் கொலை செய்யப்பட்டு பிணமாக கிடந்தார். அவருடைய கழுத்து அறுக்கப்பட்டிருந்தது. ஆனால் அவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? என்று தெரியாமல் இருந்தது.

இதுகுறித்து தேவதானப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் கொலை செய்யப்பட்டவர், கர்நாடக மாநிலம் மங்களூர் ஜே.எம்.ரோடு காஞ்சிபட்டா பாலக்காபாடியை சேர்ந்த முகமது சமீர் (வயது 30) என்று தெரியவந்தது. . அவருடைய மனைவி பிரதோஸ். இவர்களுக்கு 6 மாத ஆண் குழந்தை உள்ளது.

அரபு நாட்டில் தங்கி இருந்து வேலை செய்த முகமது சமீர், கடந்த மாதம் விடுமுறையில் சொந்த ஊருக்கு வந்தார். இந்தநிலையில் கடந்த 13-ந்தேதியன்று தனது மனைவி, குழந்தையுடன் பெங்களூருவுக்கு அவர் சுற்றுலா சென்றுள்ளார். அங்குள்ள ஒரு தனியார் விடுதியில் அவர்கள் அறை எடுத்து தங்கினர்.
அதன்பிறகு முகமது சமீர், தேவதானப்பட்டி அருகே கொடைக்கானல் மலைப்பாதையில் கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் பிணமாக கிடந்தது தெரியவந்தது. இதற்கிடையே தன்னை பிரிந்து வேறு ஒரு பெண்ணுடன் முகமது சமீர் சென்று விட்டதாக, அவருடைய பெற்றோரிடம் பிரதோஸ் தெரிவித்தார். இதுமட்டுமின்றி வீட்டில் இருந்த 60 பவுன் நகைகளை எடுத்து கொண்டு அவர் தலைமறைவாகி விட்டார்.

இதேபோல் மங்களூருவை சேர்ந்த கார் டிரைவர் முகமது யாசிக் என்பவரையும் காணவில்லை. இவர் தான், முகமது சமீர் குடும்பத்தினரை பெங்களூருவுக்கு காரில் அழைத்து சென்றிருக்கிறார். இவருக்கும், பிரதோஸ்க்கும் இடையே கள்ளத்தொடர்பு இருந்தது போலீசாரின் விசாரணையில் தெரியவந்தது.

இவர்கள் 2 பேரும் சேர்ந்து முகமது சமீரை அடித்தும், கழுத்தை அறுத்தும் கொலை செய்து விட்டு உடலை பெங்களூருவில் இருந்து காரில் கொண்டு வந்து கொடைக்கானல் மலைப்பாதையில் வீசி சென்றிருக்கலாம் என்று போலீசார் கருதுகிறார்கள். தலைமறைவான அவர்கள் 2 பேரையும் பிடிக்க தேனி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாஸ்கரன் மேற்பார்வையில் தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. தனிப்படை போலீசார் தீவிர விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதற்கிடையே முகமது சமீரின் உடல், தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு, தேவதானப்பட்டியில் உள்ள மயானத்தில் புதைக்கப்பட்டது. ஆனால் தங்களது மத வழக்கப்படி தான் முகமது சமீரின் உடலை புதைக்க வேண்டும் என்று அவருடைய குடும்பத்தினர் வேண்டுகோள் விடுத்தனர்.

இதனையடுத்து பெரியகுளம் தாசில்தார் ரத்தினமாலா, கிராம நிர்வாக அலுவலர் ராஜவேலு மற்றும் போலீசார் முன்னிலையில் முகமது சமீரின் உடல் நேற்று தோண்டி எடுக்கப்பட்டு அவருடைய உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. அவர்கள் உடலை தங்களது சொந்த ஊருக்கு கொண்டு சென்றனர். 

Next Story