மும்பையில் புதிய உச்சத்தை தொட்டது பெட்ரோல் விலை ரூ.90-ஐ தாண்டியது டீசல் ரூ.78.58-க்கு விற்பனை


மும்பையில் புதிய உச்சத்தை தொட்டது பெட்ரோல் விலை ரூ.90-ஐ தாண்டியது டீசல் ரூ.78.58-க்கு விற்பனை
x
தினத்தந்தி 25 Sept 2018 5:15 AM IST (Updated: 25 Sept 2018 3:20 AM IST)
t-max-icont-min-icon

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலை உயர்வு மற்றும் அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் வீழ்ச்சி காரணமாக கடந்த ஆகஸ்ட் மாதம் முதல் பெட்ரோல், டீசல் விலை கிடுகிடுவென உயர்ந்து வருகிறது.

மும்பை,

71 அமெரிக்க டாலராக இருந்த பேரல் கச்சா எண்ணெய் விலை கடந்த 5 வாரங்களில் 80 டாலராக உயர்ந்து உள்ளது.

இதே நேரத்தில் இந்திய ரூபாயின் மதிப்பும் 5 முதல் 6 சதவீதம் வரை வீழ்ச்சி அடைந்துள்ளது. இதனால் பெட்ரோல் டீசல், விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

ஏற்கனவே பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து மும்பையில் காங்கிரஸ் கட்சியினர் மிகப்பெரிய அளவில் போராட்டத்தை நடத்தினர்.

இந்தநிலையில் நேற்று மும்பையில் பெட்ரோல் விலை ரூ.90-ஐ தாண்டி புதிய உச்சத்தை தொட்டு உள்ளது. பெட்ரோல் விலை நேற்று 11 பைசா அதிகரித்தது. மும்பையில் இந்தியன் ஆயில் நிறுவன பெட்ரோல் பங்குகளில் லிட்டர் பெட்ரோல் ரூ.90.08-க்கும், இந்துஸ்தான் நிறுவன பங்குகளில் ரூ.90.17-க்கும், பாரத் பெட்ரோலிய பங்குகளில் ரூ.90.14-க்கும் விற்பனை செய்யப்பட்டது.

டீசல் இந்தியன் ஆயில் பங்குகளில் ரூ.78.58-க்கும், இந்துஸ்தான், பாரத் நிறுவன பங்குகளில் ரூ.78.67-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. மராட்டியத்தில் அதிகபட்சமாக பர்பானில் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.91.91-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

நாட்டிலேயே தலைநகர் டெல்லியில் குறைந்தபட்சமாக ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.82.72-க்கு விற்பனை செய்யப்படுகிறது. கொல்கத்தாவில் பெட்ரோல், டீசல் முறையே ரூ.84.63, ரூ.75.95-க்கும், சென்னையில் ரூ.86.08, ரூ.78.35-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. தொடர்ந்து உயர்ந்து வரும் பெட்ரோல், டீசல் விலை பொது மக்கள் இடையே வேதனையை ஏற்படுத்தி உள்ளது.

பெட்ரோல், டீசல் விலையை குறைக்க மத்திய அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்.

Next Story